“காவிப்படையினர் ஆட்சிக்கு வருவது என்பது, மத்தியில் ஒரு கட்சிக்கு பதிலாக மற்றொரு கட்சி ஆட்சியை அமைக்கிறது என்பது போன்ற வழக்கமான ஒன்று அல்ல. இது ஒரு வடிவமாற்று அல்ல, மாறாக மிகவும் நச்சுத்தன்மை உள்ளடக்க மாற்றமும் ஆகும். நவீன இந்தியாவை பாதுகாத்திட வேண்டு மானால் காவிப்படையினரின் இத்தகைய நிகழ்ச்சி நிரல் முறியடிக்கப்பட வேண்டும்” பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, ஆர்எஸ்எஸ் தலைமையில் செயல்படும் கட்சி பாஜக, ஆர்எஸ்எஸ் பாசிசத் தன்மை கொண்டது என இன்று நேற்றல்ல 1993 ஆம் ஆண்டிலேயே தோழர் சீத்தாராம் யெச்சூரி எச்சரித்திருக்கிறார். ஆம். அவர் எழுதிய ‘இந்து ராஷ்டிரம்’ என்றால் என்ன? என்ற நூலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். அவர் எச்சரிக்கை செய்தபோது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வரவில்லை. சில மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருந்தது. ஆனால், தற்போது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிறது.
நவீன பாசிச குணங்களுடன்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட இருக்கிற நகல் அரசியல் தீர்மானத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பி டப்பட்டுள்ளது. “சுமார் 11 ஆண்டு கால மோடி அரசாங்கத்தின் ஆட்சியில் வலதுசாரி, மதவெறி, எதேச்சதிகார சக்திகள் நவீன பாசிச குணங்களுடன் செயல்பட்டு வந்திருப்பதை காட்டுகிறது”. ஆர்எஸ்எஸ், இவ்வமைப்பின் தலைமையிலான பாஜக, விஷ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் வலதுசாரி, மதவெறி, எதேச்சதிகார நவீன பாசிச குணங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பதைத்தான் நகல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
ரத்தக்கறை படிந்த வரலாறு
கடந்த 11 ஆண்டுகள் மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்டதிலிருந்து இந்துத்துவா என்ற தங்களது நிகழ்ச்சி நிரலை அமலாக்கிட அவர்கள் உருவாக்கிய மதக்கலவரம் எண்ணிலடங்காது. ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாறு என்பது ரத்தக்கறை படிந்த வரலாறு. நாடு சுதந்திரம் அடைந்த பின்னணியில் இந்துத்துவா என்ற நிகழ்ச்சி நிரலை எதிர்த்து மதச்சார்பின்மைக்காக, மக்கள் ஒற்றுமைக்காக போராடிய அண்ணல் காந்திஜி படுகொலைக்கு பிறகு அன்றைய மத்திய அரசு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தது. “இனி கலாச்சார அமைப்பாக செயல்படுவோம், அரசியலில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது” என உறுதி கொடுத்த பிறகு மத்திய அரசு தடையை நீக்கியது. தங்கள் நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து கொண்டு செல்ல ஜனசங்கம் என்ற அர சியல் பிரிவை ஆர்எஸ்எஸ் உருவாக்கி அப்பிரிவை வழிநடத்திட வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட தலைவர்களை ஆர்எஸ்எஸ் அனுப்பியது. அந்த அத்வானி பாஜக தலைவராக இருந்த போதுதான் பாபர் மசூதியை இடிப்போம், அரசியல் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்வோம், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்ற சீர்குலைவு கோரிக்கை களை முன்வைத்தனர்.
இந்துத்துவா - கார்ப்பரேட் கூட்டணி
அத்வானி தலைமையில் நடந்த ர(த்)த யாத்திரை, அதைத் தொடர்ந்து பாபர் மசூதியை இடித்தது, நாடு முழுவதும் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கி யது. இதற்கு பிறகு பல மாநிலங்களில் பலமடைந்த பாஜக 1999 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியாகவும், 2014இல் பாஜக தனிப்பெரும்பான்மை ஆட்சியாகவும் மத்தியில் அதிகாரத்திற்கு வந்தது. 2014லிருந்து கடந்த 11 ஆண்டு காலமாக பாஜக தலைமையிலான இந்துத்துவா - கார்ப்பரேட் கூட்டணி அரசு கார்ப்ப ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை திணிக்கவும் எடுத்துவரும் நடவ டிக்கைகளை பரிசீலித்த சிபிஎம் மத்தியக்குழு, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார சக்திகளை நவீன பாசிச குணங்கள் கொண்டது என நகல் தீர்மா னத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்துத்துவாவை அரசு சித்தாந்தமாக மாற்றும் வேலை...
2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்துத்து வாவை அரசு சித்தாந்தமாக மாற்றுவது, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது என்பதே ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரல் என நகல் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது. இந்துத்துவா மற்றும் இந்து ராஷ்டிரம் என்ற நச்சு சித்தாந்தத்தை விளக்குவதற்காகத்தான் 1993 ஆம் ஆண்டு சீத்தாராம் யெச்சூரி ‘இந்து ராஷ்டிரம்’ என்றால் என்ன? என்ற சிறுநூலை எழுதினார். இந்துத்துவா என்பதும் இந்து மதமும் ஒன்றல்ல எனவும், இந்துத்துவா என்பது ஒரு அரசியல் திட்டம் (Political Project) என சாவர்க்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார். இந்துத்துவா என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது என்பது தான் ஆர்எஸ்எஸ்-இன் நிகழ்ச்சி நிரல். ஆர்எஸ்எஸ்-இன் தலைவராக பொறுப்பேற்ற எம்.எஸ்.கோல்வால்கர் 1939 ஆம் ஆண்டு இந்துத்துவா பற்றியும், இந்து ராஷ்டிரம் பற்றியும் “நாம் (அ) வரை யறுக்கப்பட்ட நமது தேசம்” என்ற நூலில் விளக்கி யிருக்கிறார். ஆர்எஸ்எஸ் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. “புத்துயிர் அளிக்கப் பட்ட தேசத்தை (இந்துக்கள் ராஜ்ஜியம்) உருவாக்குவ தற்காகவே நாம் பாடுபடுகிறோம். மாறாக, அரசியல் உரிமைகள் என்கிற ஒழுங்கற்ற சில மூட்டை முடுச்சுகளுக்காக அல்ல” என தனது நூலில் அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தையே கோல்வால்கர் கொச்சைப் படுத்தியிருக்கிறார்.
ஹிட்லர் வழியில் ஆர்.எஸ்.எஸ்.
“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சா ரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக தங்கள் நாட்டிலிருந்து யூத இனத்தை அழிக்கும் வேலை யில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள் ளாக்கியது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக் கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்”. ஜெர்மனியில் ஆரிய இனமே உயர்ந்தது என்று யூதர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்து, யூதர்களை கொன்றுகுவித்த அந்த பாசிச ஹிட்லர் பாணியில் இந்தியாவில் தங்கள் நிகழ்ச்சி நிரலை எடுத்துச் செல்வதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நோக்கம் என்பதை கோல்வால்கர் விளக்குகிறார். இந்தியாவில் ஒரே மதம் - ஒரே கலாச்சாரம் - ஒரே மொழி என்ற மூன்று அம்சங்களை முன்னிறுத்தி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்கள் என அவர்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் துவங்கியது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்கள் என குறிப்பிடும் கோல்வால்கர் அவர்கள் இந்தியாவைவிட்டு வெளி யேற வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். “இவ்வாறு அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கிறது. ஒன்று அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சா ரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில் மற்றும் தேசிய இனத்தவரால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும்வரை, அவர்களது கருணையின் கீழ் வாழ்ந்து கொள்ள வேண்டும்”. இதன் அடிப்படையில்தான், 2019இல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கோல்வால்கரின் வாரிசுகளான மோடி - அமித் ஷா அரசு கொண்டு வந்தது.
சட்டங்கள் மூலம் பிளவுபடுத்தும் முயற்சியில்...
இஸ்லாமியர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் வெறுப்புப் பிரச்சாரம் செய்வது, இஸ்லாமி யர்களையும் கிறிஸ்தவர்களையும் தாக்கி மதக்கல வரங்களை உருவாக்கி மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதே ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார அமைப்புகளின் அன்றாட நடவடிக்கைகள். மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரப்பூர்வமாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல சட்டங்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்திடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்களின் நிலம், வீடு போன்ற சொத்துக்களை இஸ்லாமியர்கள் விலைக்கு வாங்குவது என்றால் இத்தகைய பரிமாற்றத்தை மாநில முதலமைச்சரின் அனுமதியின்றி பத்திரப்பதிவு செய்யக்கூடாது என பாஜக தலைமையிலான அசாம் மாநில அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்துக்கள், இஸ்லா மியர்கள், கிறித்துவர்களுக்கிடையில் மத மறுப்பு திருமணம் நடந்தால் அவைகளை சட்ட விரோதம் என அறிவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய ஒரு சட்டத்தை யோகி தலைமையிலான உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இத்தகைய சட்டங்கள் எல்லாம் மத ரீதியில் மக்களை பிளவுபடுத்துவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அரசு செலவில் ராமர் கோவில்... 2024இல் ஜனவரியில் அயோத்தியில் அரசு செலவில் உருவாக்கப்பட்ட ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமரே கலந்து கொண்டு மதச் சடங்கு களை முன்னின்று நடத்தினார். இந்திய ஜனநாயக குடியரசை இந்து ராஷ்டிரமாக மாற்றக்கூடிய முயற்சி இது. 1947இல் ஆகஸ்ட் 15 க்கு முன்பு உள்ள வழி பாட்டுத் தலங்களை கேள்விக்குறியாக்கக் கூடாது என 1991 ஆம் ஆண்டு அன்றைய மத்திய அரசு சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு முரணாக சங்பரி வார் அமைப்புகள் பல மசூதிகளை சட்டவிரோதமாக கைப்பற்றும் நோக்கத்தோடு வழக்குகள் தொடுத்துள்ளன. சங்பரிவாரங்களின் முயற்சி சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றத்தில் 2022ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் மோடி அரசு தங்களுடைய பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரிக்கப்படாமல் நீடித்து வருகிறது. ஒன்றிய அரசு நேரிடையாகவும், மறைமுக மாகவும் சங்பரிவார் அமைப்புகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போகிறது.
மனுநீதிதான் அவர்களின் அரசியல் சட்டம்...
இந்தியா இந்து ராஷ்டிரமாக மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் கோல்வால்கர் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மனுநீதி அடிப்ப டையில் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்று சுதந்திரப் போராட்ட காலத்திலும், சுதந்திரத்திற்குப் பிறகும் வலியுறுத்தினார்கள். மனு உலகளவில் பாராட்டப்படக்கூடிய சிறந்த சட்ட வல்லுநர் என்றும், அவர் உருவாக்கிய மனுநீதி தான் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால், அரசியல் நிர்ணய சபையோ, அண்ணல் அம்பேத்கர் அவர்களோ, ஆர்எஸ்எஸ் கூற்றை ஏற்க வில்லை. அறிவியலுக்கு புறம்பான நால்வர்ண சாதி யக்கட்டமைப்பை கோல்வால்கர் மீண்டும் உயிர்ப் பிக்க தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரி யன் (அரசன்) தோளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களி லிருந்து பிறந்தவன். இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் தான் நம் கடவுள்”(சிந்தனைத் துளிகள், கோல்வால்கர், 1966). புரையோடிப்போன, நிராகரிக்கப்பட்ட சாதி வேறுபாட்டை உள்ளடக்கிய சனாதன வர்ணாசிரம தர்மத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பது தான் கோல்வால்கர் முன்வைக்கும் கருத்தியல். வெளிப்படையாக இன்றைய ஆர்எஸ்எஸ் தலை வர்கள் இதை சொல்லவில்லை என்றாலும் இப்போதும் மனுநீதியின் அடிப்படையில் அரசியல் சட்டம் அமைய வேண்டும் என்று அவர்கள் பேசி வருகிறார்கள்.
குடியரசுத் தலைவரை அழைக்காத காரணம்...
மனுநீதி என்பது நால்வர்ண சாதிய கட்டமைப்பை ஆதரிப்பது மட்டுமல்ல, பெண்களுக்கும் எதிரானது. “குழந்தைப் பருவத்தில் தந்தையாலும், இளம் பருவ காலத்தில் கணவனாலும், கணவன் இறந்த பிறகு மைந்தராலும் பெண்கள் காக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சுதந்திரம் எதுவும் கிடையாது”. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா விற்கும், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காததற்கு காரணம் என்ன என்பதை இப்போது புரிந்து கொள்ள முடியும். இந்துத்துவா, இந்து ராஷ்டிரம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தேச மக்களுக்கு எதிரானது, பெண்களை அடிமையாக்குவது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சுயசார்பு பொருளாதாரக் கொள்கை, தேசிய இறையாண்மை ஆகிய அரசியல் சட்ட விழுமியங்களுக்கும் எதிரானது. மதச்சார்பின்மை உள்ளிட்ட ஜனநாயக குடியரசை பாதுகாக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தோடு தான் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் ஆர்எஸ் எஸ்-இன் இந்துத்துவா - இந்து ராஷ்டிரம் என்ற நச்சு சித்தாந்தத்தை அம்பலப்படுத்தி எழுதிய ‘இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ என்ற நூல் வருகிற பிப்ர வரி 21 அன்று சிவப்பு புத்தக தினத்தன்று வாசிப்பு இயக்கமாக கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.