articles

img

பாலியல் வன்முறையை ஆதரிக்கும் ஆணாதிக்க கலாச்சாரம் - மம்தா கட்சி அடாவடி ; பாஜக நாடகம் - பிருந்தா காரத்

... நேற்றைய தொடர்ச்சி

 

வேலைக்குச் செல்லும் பெண்கள் பற்றிய இழிவான பார்வை

மற்றொரு திரிணாமுல் பெண் எம்.பி தொலைக் காட்சியில் “முந்தைய ஆட்சியின் போது, பெண் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற தேர்வாளர்களின் மடியில் அமர வேண்டியிருந்தது” என்று கூறினார். ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கின் சூழலில், இந்தக் கருத்து பாலியல் வன்முறை கலாச்சா ரத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. முதலாவதாக, இது பாலியல் வன்புணர்வு பிரச்சனை முழுவதையும் இந்தியில் சொல்வது போல “து து மைன் மைன்” எனக் குறைத்து மதிப்பிடுகிறது. அதாவது, “நீ இதைச் செய்கிறாய், நான் அதைச் செய்கிறேன்” என்ற அர சியல் கட்சிகளுக்கு இடையேயான பயனற்ற விவாத மாக மாற்றுகிறது. பயனற்றது ஏனெனில் இது பொது விவாதத்தின் தரத்தை மிக மோசமான நிலைக்கு தாழ்த்துகிறது - “முந்தைய ஆட்சி இதைச் செய்தது” என்பது இப்போது நடப்பதற்கான நியாயப் படுத்தலாக. இது பாலியல் வன்புணர்வு பிரச்சனை யையும் பாதிக்கப்பட்டவரின் துயரத்தையும் ஒரு அரசி யல் மோதலாக குறைத்துவிடுகிறது. இவ்வாறு செய்வ தன் மூலம், ஒரு மருத்துவரான இந்த பெண் எம்.பி, மருத்துவத் துறையில் உள்ள பெண்களை பாலியல் ரீதியாக அவமானப்படுத்துகிறார், பெண் மருத்துவ மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற பாலியல்ரீதியாக சமரசம் செய்து கொள்கிறார்கள் எனக்கூறுவது போல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த பிரதி நிதியிடமிருந்து வரும் இத்தகைய கருத்துக்கள் வேலை செய்யும் பெண்களுக்கு எதிரான பெண் வெறுப்பு கலாச் சாரங்களுக்கு - அதாவது, வேலைக்குச் செல்லும் பெண்கள் “எளிதில் கிடைக்கக்கூடியவர்கள்” என்ற கருத்துக்கு வலு சேர்க்கின்றன. கண்டனப் புயலுக்குப் பிறகு எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது, ஆனால் அவரது அறிக்கை, அரசியல் உரையாடல்க ளில் பாலியல் வன்முறை கலாச்சாரங்கள் எவ்வாறு வளரக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

எந்தக் கேள்வியும் கேட்காத மற்றொரு எம்.பி.,

மற்றொரு பெண் எம்.பி., தினமும் வீடியோக்களை வெளியிட்டு முதல்வர், கொல்கத்தா காவல்துறை போன்றவற்றிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால், விசாரணை அவரது தவறான வாதங்களை அம்பலப்படுத்துகிறது. விசாரணையின் ஒவ்வொரு நிலையிலும் அவர் கூறுவார் - ‘இது கொல்கத்தா காவல்துறை ஒவ்வொரு படியிலும் சரியாக இருந்தது என்பதைக் காட்டுகிறது’ என்று. ஆனால் அவர் ஒரு முறையாவது கேள்வி எழுப்பினாரா: “ஒரு பொது மருத்துவமனை ஒரு இளம் பெண் மருத்துவருக்கு எவ்வ ளவு பாதுகாப்பற்றதாக உள்ளது? மருத்துவமனை முதல்வர் வந்து எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய ஏன் இவ்வளவு நேரம் எடுத்தார்? அவரை மாநில முதல்வர் ஏன் பாதுகாத்தார்; ஆதரித்தார்? கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர் ஏன் இவ்வளவு மோசமாக நடத்தப்பட்டனர்?  இதுபோன்ற எதையும் அவர் எழுப்பவில்லை. அவரது எந்த அறிக்கைகளிலும் குற்றத்தின் கொடூரம் குறித்த குறிப்பு கிட்டத்தட்ட இல்லை.  இந்த வழக்கால் அதிர்ச்சியடைந்த இளம் பெண்கள், ஒரு பெண் எம்.பி-யிடமிருந்து இத்தகைய உணர்வற்ற வெளிப்பாட்டை பார்க்கும்போது, அவர்கள் மனதில் என்ன நினைப்பார்கள்? இந்த வகை யான கல்நெஞ்சத்தை எதிர்கொள்வதை விட அமைதி யாக இருப்பது நல்லதா? இத்தகைய அறிக்கைகள் பெண்களுக்கான சிறந்த உலகை விரும்புபவர்களின் மனதை உடைக்கின்றன, அவர்களின் போராட்டத்தை சிதைக்க முயல்கின்றன. உண்மையில் திரிணாமுல் காங்கிரஸின் முன்னணி பெண் நிர்வாகிகள், மேற்கு வங்கத்துப் பெண்களை ஏமாற்றிவிட்டனர். இந்த வழக்கில் மட்டுமல்ல; பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தியதில் துவங்கி,  சந்தேஷ்காளியில் மாநில முதல்வர் வெளியிட்ட ஆட்சே பகரமான அறிக்கைகள் வரையிலும், தங்கள் சொந்த அரசாங்கத்தை பாதுகாக்க திரிணாமுல் கட்சியினர் பாலியல் வன்முறை கலாச்சாரங்களை ஊக்குவித்து வருகின்றனர் என்பதையும் மறக்கக்கூடாது. இந்த பெண் தலைவர்கள் அவர்களது அறிக்கைகளுக்காக கண்டனம் செய்யப்பட வேண்டும்.

பெண்ணுடல், பழிவாங்குவதற்கான ஆயுதமா?

ஒரு ஆண் திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் கூறினார்: “சமூக ஊடகங்களில் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஆபாசக் கருத்துகளை தெரிவிப்பவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள், அவர்களின் தாய்மார் கள் மற்றும் சகோதரிகளின் படங்களை திரித்து அவர்க ளின் வீட்டு வாசலில் ஒட்டுவேன்.” இதுவும் பாலியல் வன்முறை கலாச்சாரங்களின் ஒரு முக்கிய எடுத்துக் காட்டு. அடையாளம் காணப்பட்ட எதிராளிக்கு பாடம் புகட்ட பெண்களின் உடல்களை பயன்படுத்தி “பழி வாங்குவதை” நியாயப்படுத்துகிறது. ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் - ஆனால், உங்கள் தலைவரை பாதுகாக்க  வேண்டியிருக்கும்போது அது முக்கியமற்றதாகி விடுகிறது. மம்தா பானர்ஜி சில சமயங்களில் கீழ்த்தர மான பாலினப் பாகுபாட்டு முறையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது உண்மை. அவர் தனது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக ஆபாசமான மொழி யைப் பயன்படுத்தினாலும், அவருக்கு எதிராக பாலி னப் பாகுபாட்டுடன் பதிலடி தருவதை நாம் ஒருபோ தும் நியாயப்படுத்தவில்லை.  ஆனால், இந்த வழக்கில் பெண்களே, குறிப்பாக இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு எதிராக தெருக்களில் போராடுகிறார்கள். போராட்டக்கா ரர்களுக்கு எதிராக, ‘தலைவரின் பாதுகாப்பு’ என்ற பெயரில் பாலினப் பாகுபாட்டு அச்சுறுத்தல்களை திரிணாமுல் கட்சியினர் விடுப்பது கண்டிக்கத்தக்கது. எந்த நிலையிலும், டி.வி ஸ்டுடியோவில் உள்ள இளம் பெண் முதல் பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரி யர் வரை, தனது உரிமைகளைக் கேட்கும் விவசாயி வரை, முதல்வரை விமர்சிக்கும் நபர்களுக்கு எதிராக வங்க அரசு வழக்குகளைப் பதிவு செய்வதில் சாதனை படைத்துள்ளது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. திரிணாமுல் ஆண் கவுன்சிலர் வெளியிட்ட இது போன்ற கருத்துக்கள் பாலியல் வன்முறை கலாச்சா ரங்களின் மற்றொரு அம்சத்தைக் காட்டுகின்றன, அதாவது, பாலியல் வன்புணர்வுக்கு எதிரான போராட் டங்களில் இணையும் ஆண்களை, அவர்களின் பெண் குடும்ப உறுப்பினர்களை பாலியல் ரீதியாக அவமானப் படுத்துவதாக மிரட்டி மௌனப்படுத்துவது.

பாலியல் வன்புணர்வு வழக்குகளின் “அரசியல்மயமாக்கல்”

பாலியல் வன்புணர்வு என்பது, அடிக்கடி பெண்களு க்கு எதிரான குற்றங்களை எதிர்கொள்வதில் தோல்வி  அடைந்ததற்காக அரசியல் கட்சிகள் ஒன்றையொ ன்று குற்றம்சாட்டப் பயன்படுத்தும் ஒரு பிரச்சனை யாக மாறுகிறது. இது பெரும்பாலும் பாலியல் வன்பு ணர்வின் “அரசியல்மயமாக்கல்” என விமர்சிக்கப்படு கிறது. பாலியல் வன்புணர்வு வழக்குகளில் அலட்சி யம் அல்லது குற்றவியல் சதி அல்லது குற்றவாளி களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கங்கள் பொறுப்பு க்கு உட்படுத்தப்பட்டு நீதி கேட்கப்பட வேண்டும். பாலியல் வன்புணர்வு ஒரு அரசியல் பிரச்சனை. இது அதிகாரத்தின் பயன்பாடு, மிகவும் பிற்போக்கான மற்றும் சாதிய சமூகத்தில் ஆண்களின் உரிமையாக முன்னிறுத்தப்படுவது ஆகியவற்றைப் பற்றியது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களும் ஆழமான “அரசியல் பிரச்சனைகள்”தாம். வரதட்சணைக் கொலைகள், குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, பாலியல் தாக்குதல் - அனைத்தும் “அரசியல் சாராத, மென்மை யான பிரச்சனைகள்” என்று அலட்சியப்படுத்தப்படு கின்றன. ஆனால், பெண்களின் போராட்டங்களும் உயிர் பிழைத்தவர்களின் துணிச்சலும் அந்த அலட்சி யத்தை உடைத்துள்ளன. எனினும் பாலின நீதிக்கான உணர்திறன் கொண்ட அரசியலுக்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. பாலியல் குற்றங்கள் உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்க ளுடன் இயைந்து செல்லும் அரசியலையும் கலாச்சா ரங்களையும் அம்பலப்படுத்துவது தேவை. மேலும் பாலியல் வன்புணர்வு பிரச்சனை “அரசியல்மயமாக் கப்படுகிறது” என்ற குற்றச்சாட்டை நாம் நிராகரிக்க வேண்டும்.

பாஜகவின் போலித்தனம்

வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் பாஜகவும் இணைந்து மிகவும் பாலின நீதி உணர்வற்ற சூழலை நிறுவ முயல்கின்றன. மருத்துவர்களே முன்னெ டுக்கும் பெரிய தன்னெழுச்சியான போராட்ட இயக் கங்களை குறைத்து மதிப்பிட்டு, ஒதுக்க முயல் கின்றன. பாஜக ஒரு போலியான அமைப்பை  உருவாக்கி திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டத்தை நடத்தி பிரச்சனையை கைப்பற்ற முயன்றது. காவல்துறையை நடவடிக்கை க்கு தூண்டிவிட்டு, இயக்கத்தை ஒரு குறுகிய அரசியல் லாவணியாக மாற்றுவதற்கான களம் அமைக்க முயன்றது. பாஜக தன்னை பாதிக்கப்பட்டவராகக் காட்டி, பந்த் அறிவித்து, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் மீதான மக்களின் கவனத்தை தன் மீது திருப்ப முயன்றது. வங்க மக்கள் இந்த இழி விளையாட்டைப் புரிந்துகொண்டு அதற்கு குறைந்த  முக்கியத்துவமே கொடுத்தனர். மாறாக, இடது முன்னணிக் கட்சிகள் மிகப் பெரிய அணிதிரட்டல் களை செய்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்க ளுக்கு தேவையான வலிமையை சேர்த்துள்ளன. அவ்வாறு செய்ததன் மூலம், ஒரு பொறுப்புள்ள அரசியல் இயக்கம், எவ்வாறு போராட்டத்தின் கோ ரிக்கைகளை, இந்த வழக்கில் மருத்துவர்களின் முடிவு களை மதித்து, நிலையான முறையில் ஆதரிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது. ஆனால், ஆளும் திரிணாமுல் காங்கிரசோ, மாநிலம் முழுவதும் மக்களின் தன்னெழுச்சியான அணிதிரட்டலையும் இடது முன்னணியின் அணி திரட்டல்களையும் அவமதிக்க தன்னால் முடிந்த ‘அனைத்தையும்’ செய்துள்ளது - இது மக்களின் போராட்ட ஒற்றுமையை குற்றமயமாக்க முயல்கிறது. மக்களின் ஒன்றுபட்ட அணிதிரட்டல்களுக்கு இவ்வாறு “அரசியல்” நோக்கங்களை கற்பிப்பதும் நீதி கோரும் குரல்களை அடக்குவதில் பங்கு வகிக்கி றது. இது பாதிக்கப்பட்டவரையும் அவரது குடும்பத்தை யும் தனிமைப்படுத்தி, சமூக ஆதரவை இழக்கச் செய்கிறது, அதே வேளையில் குற்றவாளி பயனடை கிறார். இதையும் நாம் நிராகரிக்க வேண்டும்.

புதிய சட்டத்தின் நாடகம்

பாலியல் குற்றத்தைத் தடுப்பது அரசாங்கங்கள், காவல்துறை மற்றும் சமுதாயத்தின் பொறுப்பாகும். தில்லியில் நடந்த நிர்பயா வழக்கிற்குப் பிறகு அமைக்கப்பட்ட வர்மா ஆணையம், சட்டத்தில் மாற்றங் கள் உட்பட பல பரிந்துரைகளை வழங்கியது, அவற்றில் சில அமல்படுத்தப்பட்டன. இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் - சட்டத்தில் குறைபாடு அல்லது பலவீனம் இருப்பதால் ஆர்.ஜி.கர் மருத்துவ மனை பாலியல் வன்கொலை நடக்கவில்லை; மாறாக,  இத்தகைய குற்றங்கள் நடப்பதற்கு ஏதுவான - ஆதரவான கட்டமைப்பு இருப்பதே ஆகும். ஆயினும் வங்கத்தின் முதலமைச்சர், புதிய சட்டத்தை இயற்றும் நாடகத்தை அரங்கேற்றினார். இது கவனத்தை திசைதிருப்புவதற்கான ஒரு வழக்கமான வழியாகும். முன்மொழியப்பட்ட சட்டமே மிகுந்த குறைபாடுள்ளதாக உள்ளது; மேலும் வர்மா ஆணையத்தின் பரிந்துரைகளை மீறுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் பாலியல் வல்லுறவு மற்றும் கொலை யால் பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத்தர எந்த வகை யிலும் உதவாது. அரசாங்கமும் நிர்வாகமும் பொறுப் பேற்க கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (அக்.13),  
தமிழில் தொகுப்பு : எஸ்.பி.ஆர்