articles

img

பல லட்சம் கோடி சேமிப்புகளை பாதுகாக்க பத்து லட்சம் ஊழியர் எழுச்சி - க.சிவசங்கர்

ஒன்றிய நிதியமைச்சர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு அதன் மூலம் சுமார் 175000 கோடி ரூபாய் அரசிற்கு நிதி திரட்டப்படும் என்றும், அதன் ஒரு பகுதியாக வங்கித்துறையில் இரண்டு பொ துத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டிற்குள் தனியார் மயமாக்கப்படும் என்றும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போதைய நாடாளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடரின் போது வங்கி நிறுவன சட்டம் (Banking Companies Act) மற்றும் வங்கி ஒழுங்கு முறை சட்டம் (Banking Regulation Act) ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிறைவேறும் பட்சத்தில் அடுத்த ஒரு சில மாதங்களில் அரசு அறிவிக்கும் வங்கிகள் தனியார்மயமாக்கப்படும்.

559 தனியார் வங்கிகள்  திவாலான வரலாறு

நம்நாடு 1947ஆம் வருடம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திடமிருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் பொரு ளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நாடாகவே இருந்து வந்தது. நாட்டின் உள்கட்டமைப்பிற்குத் தேவையான முதலீடுகளை அளிக்க அன்றைய தனியார் வங்கிகளும் அவற்றை உரிமை கொண்டாடிய தேசிய முதலாளிக ளும் முன்வரவில்லை. குறிப்பாக கிராமப்புற பொரு ளாதாரத்தையே அதிகம் சார்ந்திருந்த நம் நாட்டில் விவசாயத்துறை, கால்நடை வளர்ப்பு, சிறு குறு தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில்கள் போன்ற நாட்டின் முக்கியத் துறைகள் புறக்கணிக்கப் பட்டன. மேலும் தனியார் வங்கிகள் அவற்றை சொந்தம் கொண்டாடிய நிறுவனர்களின் குடும்பத் தொழில்க ளுக்கே பெரும்பாலும் கடன் வழங்கி வந்தன. இதனால் அந்நிறுவனங்கள் நட்டமடையும் போது அவ்வங்கிக ளும் நட்டமடைந்து 1947 முதல் 1969 ஆம் ஆண்டு வரையி லான காலகட்டத்தில் மட்டும் சுமார்  559 தனியார் வங்கிகள் திவாலாகி மக்களின் சேமிப்புகள் களவா டப்பட்டன.

இந்நிலையிலேயே 1969 ஆம் ஆண்டு 14 பெரிய தனியார் வங்கிகளும், 1980ல் மேலும் 6 தனியார் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. அதுவரையி லும் கிராமப்புற பகுதிகளையும் அதன்  பொருளாதா ரத்தையும் தொடர்ந்து புறக்கணித்து வந்த வங்கிகள், அதன் பிறகு தங்கள் கிளைகளை கிராமப்புறங்களை நோக்கி பெருமளவில் அதிகரித்தன. மேலும் வங்கி களில் வழங்கப்படும் மொத்த கடனில் 40 சதவீதம் முன்னுரிமை துறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும், அவற்றில் 18 சதவீதம் விவசாய கடனாக வழங்கப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய வெண்மை புரட்சி மற்றும் பசுமைப் புரட்சி போன்றவற்றை பொதுத்துறை வங்கி களின் மூலமாகவே அரசாங்கத்தால் செயல்படுத்த முடிந்தது. இவ்வாறு 1970களின் தொடக்கத்தில் இருந்து 1990 களின் துவக்கம் வரை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் இந்திய பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியடைந்தது. பல நூறு ஆண்டுகளாக உரிமை கள் மறுக்கப்பட்டு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் ஒரு பிரிவினருக்கு நியாயமான இடஒதுக்கீடுகளின் மூலம் வங்கித் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சர்வதேச சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாகவும், ஐஎம்எப் மற்றும் உலக வங்கி  போன்றவற்றின் அழுத்தங்களாலும் 1991க்கு பிறகு இந்திய ஆட்சியாளர்கள் தனியார்மய, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை நோக்கி  தங்கள் பார்வையைத் திருப்பத் தொடங்கினர்.

மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவ னங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த் தெடுத்து கார்ப்பரேட் கயவர்களின் கைகளில் உள்ள பாசக்கயிற்றில் கட்டிப்போடுவதில் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய ஒன்றிய அரசு பொதுத்துறை வங்கிகளையும் விட்டுவைக்க வில்லை.

27 வங்கிகள் 12 ஆக  சுருக்கப்பட்ட பயங்கரம்

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது 27 அரசு வங்கிகள் இருந்தன. அவற்றில் ஐடிபிஐ வங்கியை இந்த நிதி ஆண்டிற்குள் முழுமையாக தனி யார்மயப்படுத்தும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மற்ற 26 அரசு வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 12 வங்கிகளாக சுருக்கப்பட்டு இது வரை நாடு முழுவதும் சுமார் 5000 கிளைகள் வரை மூடப் பட்டுள்ளன. இன்னும் பல்லாயிரம் கிளைகள் மூடப்படு வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஒவ்வொரு துறைகளிலும் அதிகபட்சமாக நான்கு நிறுவனங்களை மட்டுமே அரசு வைத்துக் கொள்ளும் என்பதைக் கொள்கை முடிவாகவே அறிவித்து செயல்படுத்தி வரு கிறது இந்த ஒன்றிய அரசு. அதன்படி தற்போதுள்ள 12 அரசு வங்கிகளில் அதிகபட்சமாக 4 வங்கிகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற 8 வங்கிகளும் ஒரு சில ஆண்டுகளில் தனியார்மயமாக்கப்படும் என்பது தெளிவாகிறது.

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப் பட்டால் இதுவரை நாட்டின் சாமானிய மக்களுக்கு கிடைத்து வந்த கல்விக்கடன்கள், சிறு தொழில் கடன்கள், பயிர்க் கடன்கள் மற்றும் பல்வேறு மானி யங்களுடன் கூடிய கடன்கள் போன்றவை முற்றாக  ஒழிக்கப்பட்டு மக்கள் கந்து வட்டிக் கடைகளை விட  மோசமாக செயல்படும் தனியார் நிதி நிறுவனங்களிடம் தங்கள் பொருளாதாரத் தேவைகளுக்காக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் மக்களின் கைகளில் பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்து, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்க முடியா மல் ஒரு பெரும் தேக்கம் உருவாகி நாட்டின் பொரு ளாதார சுழற்சியில் ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும்.  மறுபுறம் நூற்றுக்கணக்கான கிளைகள் குறைக்கப் பட்டு, பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் வெட்டிச் சுருக்கப்படும். இதனால் ஆயிரக்கணக்கான  படித்த இளைஞர்களின் எதிர்கால வேலை வாய்ப்புகள் பறிபோகும்.

கார்ப்பரேட்டுகள் கைக்கு மடைமாற்றப்படும் லாபம்

மேலும் பொதுத்துறை வங்கிகளில் கிடைக்கும் லாபம் அவற்றின் பெரிய பங்குதாரர் என்ற அடிப்படை யில் ஆண்டுதோறும் அரசாங்கத்திற்கு ஒரு மிகப்பெரிய வருவாயை அளிக்கக் கூடியது. நாட்டின் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஆண்டுதோறும் செயல் பாட்டு லாபத்தைக் (Operating Profit) கொடுத்தே வரு கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை கார்ப்ப ரேட் பெருநிறுவனங்களுக்கு வராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ஒதுக்கீடு செய்யப்படுவதால் அவ்வங்கிக ளால் நிகர லாபத்தைக் காட்ட முடிவதில்லை. உதார ணமாக பாஜக அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த செயல்பாட்டு லாபம் சுமார் 11,10,913 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில் பெருநிறுவனங்களின் வராக்கடன் தள்ளுபடிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் சுமார் 12,38,346 கோடி  ரூபாயாகும். இவ்வாறு அரசிற்கு வரவேண்டிய லட்சக்க ணக்கான கோடி ரூபாய் வராக்கடன் தள்ளுபடி என்ற  பெயரில் ஒரு சில பெரு முதலாளிகளின் பைகளுக்கு மடைமாற்றப்படுவதால் ஒரு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இந்த வருவாய் இழப்பு பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் மீதான விலைவாசி உயர்வு போன்ற பிற வழிகளில் சாமானிய மக்களின் மீது சுமத்தப்பட்டு ஈடு செய்யப்படுகின்றது. இவ்வாறு சாமானிய மக்களின் வங்கிச்சேமிப்பை வராக்கடன் தள்ளுபடிகளின் மூலம் மொத்தமாக வாரிச்சுருட்டும் கார்ப்பரேட் பெருநிறுவ னங்களின் கைகளிலேயே அந்த வங்கிகளையும் ஒப்படைத்துவிடத் துடிக்கிறது இந்த அரசாங்கம். இதன் மூலம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பொதுத்துறை வங்கி யில் தான் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தாமல் அந்த வங்கியையும் கைப்பற்றிக்கொள்ளக் கூடிய வகை யிலான கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கே (Crony capitalism) இந்த அரசாங்கம் துணை போகி றது என்பது தெளிவாகிறது.

தனியார் வங்கிகள்  எப்போதுமே ஆபத்து

மேலும் காலம்தோறும் தனியார் வங்கிகள் என்பவை நம்பகத்தன்மை அற்றதாகவும், பாதுகாப்பற்ற தாகவுமே இருந்து வந்துள்ளன. வங்கிகள் தேசியவுட மையாக்கப்பட்ட 1969க்கு பிறகு சுமார் 24 தனியார் வங்கி கள் திவால் நிலைக்குச் சென்று பொதுத்துறை வங்கிக ளோடு இணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனியார் வங்கிகளின் நட்டத்தையும் பொதுத்துறை வங்கிகள் தாங்கிக் கொண்டதாலேயே அவ்வங்கிகளின் வாடிக்கையாளர்களின் பல கோடி ரூபாய் சேமிப்புகள் காப்பாற்றப்பட்டன. இப்போதும் தொடர்ச்சியாக டிஎச்எப்எல் (DHFL), யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, ஐசிஐசிஐ என்று தனியார் வங்கிகளின் நிர்வாகத் தோல்விகள் தொடர்கின்றன. எனவே பொதுத்துறை வங்கிகள் மட்டுமே மக்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பா னதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் அரசின் இந்த அறிவிப்பால் பொதுத்துறை  வங்கிகளின் நலனில் முக்கிய அக்கறை கொண்டவர்க ளான (Stakeholders) வாடிக்கையாளர்களுக்கோ, ஊழியர்களுக்கோ அல்லது அவற்றின் முக்கிய பங்குதாரரான அரசாங்கத்திற்கோ எந்த ஒரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

அரசாங்கத்தின் இந்த தனியார்மய நடவ டிக்கையை எதிர்த்தே அகில இந்திய அளவில் செயல்படும் வங்கி சம்மேளனங்களின் கூட்டமைப்பு டிசம்பர் 16, 17 இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றி கரமாக நடத்தியுள்ளன. இதில் நாடு முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை இழந்து கலந்து கொண்டுள்ளனர். நாட்டு மக்களின் பல லட்சம் கோடி ரூபாய் சேமிப்புகளைப் பாதுகாக்க நடைபெற்றுள்ள இந்த வேலைநிறுத்தத் திற்கு அனைத்து ஜனநாயக, முற்போக்கு இயக்கங்க ளும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகளும், பொதுத்துறை வங்கிகளில் தங்கள் சேமிப்புகளை வைத்துள்ள கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் முழுமையான ஆதரவைத் தந்துள்ளனர். தேசபக்தி மிக்க இந்த எழுச்சி உறுதியோடு தொடரும்.

 

;