புரட்சி என்பது மக்கள் பங்கேற்புடன், திருவிழாவை போல் நடைபெற வேண்டிய ஒன்று - மாசேதுங்ஆம்... தில்லி போராட்டத்தை நேரடியாக பார்க்கும், போராட்டத்தில் நேரடியாக பங்கேற்கும் வாய்ப்பை பெற்றதில் பெரும் மகிழ்ச்சியே! நாங்களும், திருவள்ளூர் மாவட்ட தோழர் பிரசன்னாவும் டிசம்பர் 19 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்க அலுவலகத்தில், போர்க் களத்தில் உயிர் நீத்த தோழர்களுக்கு நடத்தப் பட்ட அஞ்சலி கூட்டத்தில் ஏஐகேஎஸ் தலைவர்கள் ஹன்னன்முல்லா, கிருஷ்ணபிரசாத், விஜூகிருஷ்ணன், சுமீத்ராய், சாகர், மேஜர் சிங் ஆகியோருடன் அஞ்சலி செலுத்தி, வீர வணக்கங்களை உரித்தாக்கினோம். பின்னர் பஞ்சாப் விவசாயிகளை சந்திக்க சிங்கு எல்லைக்கு புறப்பட்டோம்.
பஞ்சாப் மாநில அஇவிச தலைவர்கள் மேஜர்சிங், பிரதாப்சிங், எஸ்.எம்.பாதல் ஆகியோர் எங்களை வரவேற்றனர். சிங்கு எல்லையிலிருந்து எட்டு கி.மீ.தூரத்திற்குவிவசாயிகளின் திரள், 100க்கும் மேற்பட்ட மருத்துவர்களால், செவிலியர்களால் சாலைகளிலேயே அமைக்கப்பட்ட மருத்துவமனைகள். இங்கு சிகிச்சையும், மருந்துகளும் இலவசமே! இந்த சேவையை அளித்து வருபவர்கள் பஞ்சாப்மாநிலத்தை மட்டுமே சார்ந்தவர்கள் அல்ல. இதர மாநிலத்தை சார்ந்தவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை உங்களால் எத்தனை நாட்களுக்கு செய்ய முடியும்? மருந்துகளுக்கான தொகைக்கு என்ன செய்வீர்கள் என்கிற நமது கேள்விக்கு பதில் சட்டென வந்தது. “ஏற்கனவே சம்பாதித்த பணம் உள்ளது.நண்பர்களின் உதவியோடு எத்தனை மாதங்கள் ஆனாலும் செய்யலாம்” என உற்சாகத்துடன் பதிலளித்தனர். நடுத்தர வர்க்கத்தினரின் இந்த பங்களிப்பை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் நகர்ந்தோம்.
இப்போது தேச சேவை...
நூற்றுக்கும் மேற்பட்ட முடித்திருத்தும் கடைகள் சாலைகளிலேயே திறக்கப்பட்டுள்ளன. குருக்ஷேத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த சோனு வார்டியா என்கிற 25 வயதுதொழிலாளியிடம் கேட்ட போது “உலகிற்கே உணவளிக்கும் தெய்வங்கள் சாலையிலிருக்கும் போது நான் வீட்டிலிருப்பதை பாவமாகவே கருதுகிறேன். ஏற்கனவே நான் செய்தது தொழில். இப்போது நான் செய்வது தொழில்அல்ல சேவை. அது எனக்கானது. இது தேசத்திற்கானது. இந்த வாக்கியம் எமது செவிக்கு தேனாக ஒலித்தது. அந்தமுறைசாரா தொழிலாளர்களுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு நகர்ந்தோம்.தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டப் படிப்பில் பயிலும் கால்களில் நிரந்தர ஊனம் கொண்டமாணவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து அதை தள்ளுவதற்கு உதவி புரிய சக மாணவர்களையும் அழைத்து கொண்டு யுத்த களத்திற்கு வந்திருந்தார். வாரத்தில் 3 நாள் மட்டுமே தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்வதாகவும், அதுவும் துவைத்த துணிகளை எடுத்துவரச் செல்வதாகவும் தெரிவித்தார். இவ்வளவு சிரமம் எடுத்து ஏன் பங்கேற்கிறாய் என கேட்ட போது “தற்போது தில்லியில் நடப்பது மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டியல்ல. டி.வி.யில் பார்த்து ரசிப்பதற்கு... தேசத்தை காப்பதற்கான போர்.. யுத்தம், இதில் பங்கேற்காமல் மௌனம் சாதிப்பது என்பது தேச பக்தியை புறம் தள்ளுவதாகும்” என்ற அம்மாணவரின் அந்த பதில் மெய்சிலிர்க்கச் செய்தது. மாணவர் சமூகமும் இம்மகத்தான போராட்டத்தில் பங்கேற்றுள்ளதை கண்டு கடும் குளிரிலும் எங்கள் தேகம் சூடாகியது.
3 மாதக் குழந்தையுடன்...
அடுத்து ஹரியானா மாநிலம் திக்ரி எல்லைக்கு வந்தோம். அங்கும் நமது விவசாயிகள் சங்க தலைவர்களுடன் உள்ளே நுழைந்தோம்.மூன்று மாத தன் பெண் குழந்தையுடன் நிலமற்ற இளம் தம்பதிகளை பார்த்தோம். அந்த இடத்திலிருந்து 27 கி.மீ. தூரத்தில் தங்கள் கிராமம் உள்ளதாகவும், தினமும் அக்கிராமத்தில் உள்ள ஒரு பூசாரி அக்குழந்தைக்கு மந்திரங்கள் ஓதுவதாகவும், கூறிய அவர்கள் “அந்த மந்திரங்களை விட விவசாயிகள் இடும் கோஷங்கள் எங்கள் குழந்தையின் காதுகளில் ஒலித்தால் கூடுதல் புனிதம் தரும் என்கிற நம்பிக்கையுடன் இங்கேயே எங்கள் குழந்தையுடன் இருக்கிறோம்” என அவர்கள் தந்த பதில் எம்மை அதிர வைத்தது. நிலமற்ற விவசாயத் தொழிலாளியின் ஆதரவையும் இவ்வியக்கம் பெற்றுள்ளது என்கிற தெம்புடன் அடுத்த அடி எடுத்து வைத்தோம்.
3 மாத குழந்தை மட்டுமல்ல, எல்.கே.ஜி. படிக்கும் 3 வயது குழந்தை, பரிதாபாத் மாவட்ட 78 வயது பெண் விவசாயி. பிவானி மாவட்ட 98 வயது விவசாயி என பலதரப்பு மக்கள் கடும் குளிரிலும் போராடி வருகிறார்கள். பாட்டில்களில் வைத்த தண்ணீர் 3 மணிக்கே ஐஸ் கட்டியாகி வருகிறது. டிராக்டர்களை குடிசைகளாகவே மாற்றிஅதில் தான் உறங்குகிறார்கள். கட்டைகளை கொளுத்தி உடலுக்கு உஷ்ணம் ஏற்றுகிறார்கள். இது இரவு முழுவதும் நடைபெறுகிறது.அதே போல் இரவு முழுவதும் தேனீர் வழங்கப்படுகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள சர்க்கீதாத்ரீ மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை கேட்ட போது, அவர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுவதாகவும், 10 நாட்கள் சம்பளமில்லா விடுமுறை எடுத்து இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது போல் பல தொழிலாளர்கள் இப்பணியை செய்வதாகவும் பதிலளித்த போது தொழிலாளி வர்க்கத்தின் பங்கேற்பு பெரும் நம்பிக்கையளித்தது. அதே நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
மக்களுக்கான கலையை...
அடுத்து உ.பி. மாநிலம் காஸிப்பூர் எல்லையைச் சென்றடைந்தோம். அம்மாநில விவசாயிகள், சங்க தலைவர்கள் டி.பி.சிங், சந்திரபால் ஆகியோர் எங்களை வரவேற்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து தில்லி செல்லும் 12 வழிச்சாலையில் குவிந்துள்ள விவசாயிகள் 3 கி.மீ. தூரம் வரை இருந்தனர். சலிப்புத் தட்டாமலிருக்க நாடகக் கலைஞர்கள் வீதிகளிலேயே நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். கலை நிகழ்ச்சிகள், கவியரங்குகள், ஆட்டம்,பாட்டம் என தொடர்ந்து நடத்துகின்றனர். ஒரு நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் பணம் கேட்குயம் இவர்கள் இங்கு இலவசமாகவே 25 நாட்களாக கலை வடிவங்களால் மக்களை ஈர்க்கின்றனர். நாம் கேள்வியை முடிப்பதற்கு முன்பே, “கலை மக்களுக்கானது. ஆகவே இத்துணை நாட்களும் எங்களுக்காக பயன்படுத்திய கலையை தற்போது மக்களுக்காக பயன்படுத்துகிறோம்” என கலைஞர்கள் தந்த பதில் எங்களை மேலும் உறைய வைத்தது. நமது தரப்பிலிருந்து ஏ.விஜயராகவன், டி.பி.சிங்,பி.துளசிநாராயணன் ஆகியோர் அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டோம்.
அடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஷாஜகான்பூர் எல்லைக்கு சென்றோம். நமது தலைவர்கள் அம்ராராம், செக்கன் சௌத்ரீ, ரவீந்தர் தர்க்கா ஆகியோர் நம்மை வரவேற்றனர். அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அறைகூவலுக்கிணங்க அங்கே துவங்கிய விவசாயிகள் 11 பேர் கொண்ட 24 மணிநேர உண்ணாவிரதப் பந்தலுக்கு சென்றோம். தோழர்.அம்ராராம் தலைமையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சற்றும் சோர்வின்றி நம்மை கட்டி அணைத்துக் கொண்டனர். பசியில் உள்ள அத்தலைவர்கள் நம்மை எதையாவது சாப்பிடும்படி வற்புறுத்தினர். 4 கி.மீ. தொலைவு வரை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் குழுமியிருந்தனர். நாங்கள் போய் சேர்ந்த சிறிது நேரத்திலேயே அம்மாவட்ட ஆட்சியர் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து கீழே அமர்ந்து ஏதேனும் வசதிகள், உதவிகள் செய்ய வேண்டுமா?
என தலைவர் அம்ராராமிடம் கேட்க, அதற்கு பணிவாகநமது தலைவரும் “தற்போதைக்கு எதுவும் தேவையில்லை. தேவைப்பட்டால் சொல்கிறோம். அதே போல் எங்களை தடுத்து காவல் காக்கும் காவல்துறைக்கு ஏதேனும் தேவைப்பட்டால் சொல்லுங்கள். செய்யலாம். ஏன்எனில் அவர்களும் எங்கள் கிராமத்து பிள்ளைகள் தானே” என பணிவாகவே கூற மாவட்ட ஆட்சியரோ சிரித்தபடியே விடைபெற்றுக் கொண்டார்.
மறு நாள் அதிகாலை 6 மணிக்கு தங்களது உண்ணாவிரதத்தை துவக்கிட 14 பெண்கள் முன் நாள் இரவே போராட்ட பந்தலுக்கு வந்துவிட்டனர். சமூக கட்டுப்பாடுகள்நிறைந்த, பழமைவாதம் வேரூன்றியுள்ள ராஜஸ்தானிலேயே திருமணமாகாத பெண்கள் இரவும் -பகலும் போராட்டக் களத்தில் இருப்பதை கண்டு உற்சாகத்தின் உச்சிக்கே சென்றன எங்கள் உணர்வுகள்.
உடைக்கும் உத்திகள் உடைந்து போயின
இந்த ஒற்றுமையை உடைக்க பாஜகவினர் மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் தவிடுபொடியாகின. பஞ்சாப் - ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கிடையே உள்ள சட்லஜ் - யமுனை நதிநீர் பங்கீடு பிரச்சனையை கிளப்பினர். எடுபடவில்லை. லெட்டர் பேட் சங்கங்களிடம் சமாதான கடிதங்களை பெற்றனர். மண்டி ஏஜெண்ட் சங்கங்கள் சிலவற்றிடம் வாபஸ் கடிதம் பெற்றனர். மதரீதியாக, மாநில ரீதியாக பிரிக்க எடுத்த எல்லா முயற்சிகளும் வீணாகின. அனைத்தையும் முறியடித்துவிட்டு சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஓரணியில் சங்கமித்துள்ளனர்.எல்லா இடங்களிலும் நூற்றுக்கணக்கான சமையல்கூடங்கள், சப்பாத்தி தயாரிக்கும் தானியங்கி இயந்திரங்கள், சமையல் கலைஞர்கள், குளிர் போக்க நெருப்பு மூட்டங்கள், அதற்கான கட்டைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், கூடாரங்கள், போர்வைகள், டிராக்டர்கள், கார்கள், ஜே.சி.பிக்கள், பொக்லைன்கள், குதிரைகள், 3 அடி நீளம் கொண்ட வாள்கள், கைத்தடிகள், உரிமம் பெற்ற துப்பாக்கிகள் என சகல ஏற்பாடுகளுடன் மூன்று மாத குழந்தை முதல் 98 வயதுடைய விவசாயி வரை, 1 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயி முதல் 60 ஏக்கர் நிலம்கொண்ட பணக்கார விவசாயி வரை, நிலமற்ற கூலி தொழிலாளி முதல் குத்தகை விவசாயிகள் வரை, மாணவர்கள், வாலிபர்கள், இளம் பெண்கள், எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், கவிஞர்கள், அறிவு ஜீவிகள், பெண்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைத்தும் சேர்ந்த ஒரு போராட்டக் கலவையை அங்கு பார்க்க முடிந்தது.
\அவர்கள் தங்கியுள்ள சாலைகளின் போராட்ட எல்லையில் டேங்கர்களில் தண்ணீர் வரவழைக்கப்பட்டு குளிக்க, துணி துவைக்க, காலைக் கடன்களை முடிக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி களத்தின் அருகில் உள்ள கட்டிடங்களும் சமர்புரியும் விவசாயிகளின் அவசர உபாதைகளை முடித்துக் கொள்ள எந்நேரமும் கதவுகள் திறந்தே இருக்கின்றன. இது மக்களின் பங்கேற்புடன் கூடிய இயக்கமாக மாறியுள்ளது. சாதி,மத , மொழி, இன, பாலின, ஸ்தல வேறுபாடுகளை மறந்து சமர்புரியும் அதேபோன்ற விவசாயிகள் கிளர்ச்சியை தமிழகத்திலும் முன்னெடுத்திட சபத மேற்போம். அதன் முத்தாய்ப்பாய் டிசம்பர் 29ல் தஞ்சைத் தரணியில் அணிவகுப்போம்.
சங்கமிப்போம் தஞ்சையில்!
சங்க நாதம் எழுப்புவோம்!
கட்டுரையாளர்கள் : சாமி.நடராஜன், பி.துளசி நாராயணன் மாநிலச் செயலாளர்கள்,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்