articles

img

விளக்கம் சொல்வதை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை விலக்குங்கள்.... மத்திய வேளாண் துறை அமைச்சரின் கடிதத்திற்கு திறந்த பதில் மடல்....

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களுக்கு,

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவிவசாயி எழுதும்கடிதம். தங்களின் டிச.17ஆம் தேதியிட்ட கடிதம் டிச.19அன்றுகிடைத்தது. அதை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தும் சில சந்தேகங்கள் தீராமலே உள்ளன. அவற்றை இந்த கடிதத்தில் குறிப்பிடுகிறேன். அவற்றை சிரமம் பாராது  படித்து என் சந்தேகத்தைப் போக்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் மாநில முதல்வரைப் போலவே தாங்களும் விவசாயி என்று கூறியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ஆனால் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தங்களுக்கு ஏற்படாமல் போனதேன்? அவரைப் போலவே தாங்களும் அல்லதுதங்களைப் போலவே அவரும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் மிகவும் நன்மை தரக்கூடியவை என்றுசொல்கிறீர்கள். அதுதான் எனக்குப் புரியவில்லை.தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பதற்கு வாரக் கணக்கில்  காத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரி. ஆனால் தற்போதைய சட்டப்படி எப்படி உடனே விற்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

புதிய சட்டங்கள் வந்த பிறகு குறைந்தபட்ச ஆதாரவிலைகளின் (எம்எஸ்பி) அடிப்படையில் அரசின் கொள்முதல் மிகவும் அதிகரித்திருப்பதாக திருப்திப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களது சட்டங்களில் அரசின் கொள்முதலுக்கு என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது? அது பற்றிய விபரம் ஏதுமில்லையே! அதுமட்டுமின்றி, உற்பத்திச்  செலவைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு அளவுக்குஎம்எஸ்பி விலையை உயர்த்தியுள்ளதாகவும் கூறியிருக்கிறீர்கள். இது உண்மைதானா? ஏற்கனவே மத்திய அரசுநிர்ணயிக்கும் விலையை அதிகரிப்பது, நீங்கள் சொல்வதுபோன்று இல்லை என்பதை புள்ளி விபரங்கள் காட்டுகின்றனவே. அவை உண்மையில்லையா?

எம்எஸ்பி நடைமுறையை அரசு ஒருபோதும் கைவிடாது. இத்திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். அதை சாதாரண விவசாயிகளான நாங்கள் எப்படி நம்புவது? சட்டப் பாதுகாப்பு இல்லை எனில்எப்படி தொடர்ந்து நடைமுறைப்படுத்துவீர்கள்?

கைவிடுவதுதான் முக்கியக் கடமையா?
விவசாயிகளின் நலன் என்பது பிரதமர் திரு நரேந்திரமோடியின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக இருந்துவருகிறது என்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்கள் வாழ்வில் வளம் பெருகவும் அவரது தலைமையிலான அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறியிருக்கிறீர்கள்.2014 தேர்தலின் போது விவசாயிகளின் விளைபொருளுக்கு ஒன்றரை மடங்குவிலை வழங்கப்படும்; எம்.எஸ். சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தாரே அதன் கதி என்னவானது? உச்சநீதிமன்றத்தில் அந்த வாக்குறுதி நடைமுறைப்படுத்தப்பட முடியாதது என்று அவரது அரசுதானே கூறியது. இப்போது மட்டும் உங்களது உறுதியை உண்மையாய்க் கடைப்பிடிப்பீர்கள் ; ஏழை விவசாயிகளை கடைத்தேற்றுவீர்கள் என்று எப்படி நம்புவது?

யாருக்கு அதிகாரம்...யாருக்கு லாபம்...
விவசாயிகளுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வதற்காக... பல முடிவுகள் எடுக்கப்பட்டு தற்போது லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறீர்கள். யாருக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது?நீங்களே சொல்வது போல் நம் நாட்டில் 80 சதவீத சிறுவிவசாயிகள் ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருப்பவர்களுக்கு உங்களது புதிய சட்டங்களால் என்ன அதிகாரம் கிடைக்கும்? அந்த அதிகாரம் யாருக்கு வேண்டும்? விளை பொருளுக்கு கட்டுபடியான விலை கொடுப்பதற்கு உத்தரவாதமான ஏற்பாடு செய்யாமல் அரசு கொள்முதல் நிலைய ஏற்பாடு இல்லாமல் அல்லல்பட்டுக்  கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு பட்ட கடனைத் தீர்க்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் உழவர்களுக்கு நீங்கள் சொல்கிற அதிகாரம் எந்த வகையில் உதவி செய்திடும்? நீங்கள் சொல்கிற விவசாயிகள் யார் என்று எங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. உங்களுக்கு புரிந்துதான் அவர்களுக்காக இந்தப்புதிய சட்டங்களை கொண்டு வந்திருக்கிறீர்கள்  என்பது இப்போது எங்களுக்குப் புரிகிறது.

 பெரும்பாலான சேமிப்புக்கிடங்குகள், குளிர்பதன நிலையங்கள்  மற்றும் பதப்படுத்தல் மையங்கள் கிராமப்பகுதிகளில் இல்லை என்றும் இதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போகிறது என்றும் கூறியிருக்கிறீர்கள். அதனால் இந்த குறைபாட்டை நீக்குவதற்கு ரூ.1 லட்சம் கோடியில் வேளாண்மைக் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த நிதியைக் கொண்டு மேற்கண்ட கட்டமைப்புகளை யார் கட்டுவார்கள்? அரசே கட்டித் தருமா? அல்லதுகார்ப்பரேட் விவசாயிகள், பண்ணை விவசாயிகளுக்கு கொடுத்து கட்டிக்கொள்ளச் சொல்வீர்களா? அதனால் நாட்டின்80 சதவீத சிறு விவசாயிகளுக்கு பயன் கிடைக்குமா?

பூனை கண்ணை மூடிக்கொண்டு... 
சந்தை வசதி இல்லாததால், தாங்கள்  விளைவித்த பொருளுக்கு தன் நிலத்தில் விலை நிர்ணயம் செய்யவோ அல்லது தான் விரும்பிய இடத்தில் விற்கவோ இந்தியவிவசாயிகளுக்கு உரிமை கிடையாது என்று கவலைப்பட்டிருக்கிறீர்கள். விவசாயிகளின் கைகளைக்கட்டி வைக்கக்கூடியஅந்த பழைய நடைமுறையை ஒழித்துவிட்டதாகவும் மகிழ்கிறீர்கள்.அத்துடன் கடந்த 20 -25 ஆண்டுகளாக எந்த விவசாயத்தலைவர்களும் அல்லது எந்த விவசாய அமைப்பும் அறிக்கைஏதும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அப்படியா? பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டு விட்டதாக எண்ணிக்கொள்ளுமாமே. அது இப்போது நினைவுக்கு வருகிறது.ஆனால் தற்போதைய நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று பெரிய விவசாய அமைப்புகள் போராடி வந்துள்ளன என்று கூறியிருக்கிறீர்கள். அவைஎந்த அமைப்புகள்? அவை விவசாய அமைப்புகள்தானா? வேளாண்மையையே கபளீகரம் செய்யவுள்ள கார்ப்பரேட் கம்பெனிகளா?

இதுதான் சுதந்திரமான நிலையா?
விளைபொருட்களை மண்டிக்கு எடுத்துச் செல்லும் செலவு மிச்சம் ஆகிறது என்கிறீர்கள். ரொம்ப நல்லது. அவர்கள் நிலத்திலேயே வாங்கிக் கொள்வார்கள். சரி, யார்சொன்ன விலைக்கு? அவர்கள் சொல்லும் அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விலைக்குத் தானே. வெளிச்சந்தையில் அல்லது மண்டியில் அல்லது அரசு கொள்முதல் நிலையங்கள் அல்லது ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில்  கூடுதல் விலைக்கு விற்கும் வாய்ப்பு இருந்தாலும் ஒப்பந்தக்கம்பெனியிடம் தானே விற்றாக வேண்டும். இது தான் சுதந்திரமான விவசாயியின் நிலைமையா உங்கள் சட்டத்தில்.

இப்போதுள்ள மண்டிகள் தொடரும் என்கிறீர்கள். அவற்றை மேலும் நவீனப்படுத்துகிறேன் என்கிறீர்கள். பிறகு எதற்கு ஒப்பந்த அடிப்படையிலான விவசாயம்? முன்புபிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய கிழக்கிந்திய கம்பெனிக்கு விசுவாசமாக இருந்த அன்றைய ஜமீன்தார்கள், மன்னர்கள் போன்றவேலையை தற்போது தாங்கள் ஏன் செய்கிறீர்கள்?விளை பொருளுக்குத்தான் ஒப்பந்தம். விளை நிலத்துக்கு அல்ல. அதனால் நிலம் பறிபோகும் ஆபத்தில்லை என்கிறீர்கள். நிலம் விவசாயிகிட்ட இருக்கும். ஆனா அதில் என்னபயிரிடனும் என்று கம்பெனி சொல்லும் என்றால், அது சுதந்திரமானதா? நிலம் பறிபோகும் நிலைக்கும் அல்லது அடமானம் போல் இருப்பதற்கும் வித்தியாசம் என்ன?

செலக்டிவ் அம்னீஷியாவா?
விவசாயிகளின் நண்பனாக இருப்பதாகக் கூறிக்கொள்ளும் உங்களது அரசு. காங்கிரஸ் ஆட்சி சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றவில்லை என குறை கூறுகிறீர்கள். சரி, நீங்கள் நிறைவேற்றியதாகவும் சொல்கிறீர்கள். அந்த அறிக்கையின் மிக முக்கியமான பரிந்துரையான ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் என்ற முக்கியமானதை விட்டுவிட்டு மண்வள அட்டை முதலிய மற்ற கொசுறுகளை எல்லாம் குறிப்பிடுகிறீர்கள், அதைப்பற்றி மூச்சு விடவில்லையே. செலக்டிவ் அம்னீஷியாவா? இல்லை. விவசாயிகள் ஏமாளிகள்எனும் இளக்காரமா?  விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு மற்றவர்கள் தடை போட்டார்கள் என்கிறீர்களே, நீங்கள் மின்சாரத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அதற்குத்தான் மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறீர்களா? நீங்கள் சொல்வதை எல்லாம் இன்னும்நம்புவோம் என்று நினைத்தீர்களா? 6ஆண்டுகள் பட்டதும்கெட்டதும் எங்களுக்குப் போதும் என்றுதான் இப்போது போராடிக் கொண்டிருக்கிறோம்.
கண்ணை மறைக்கிறதா?காதை அடைக்கிறதா?

இந்தப் போராட்டத்தை தொடங்கியபோது தங்களின் இலக்கு என்னவாக இருந்தது? இப்போது என்ன நடக்கிறது என்று சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறீர்கள். ஆரம்பம்முதலே நீங்கள் அரசு கொண்டு வந்துள்ள 4 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதைத் தானே இலக்காகக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அதை கவனிக்கவில்லையா? உங்களது நண்பர்களின் மீதான பாசம் கண்ணை மறைக்கிறதா? காதை அடைக்கிறதா? இதுவரை கவனிக்காவிட்டாலும் இனிமேலாவது கவனியுங்கள். 4 சட்டங்களையும் ரத்து செய்யுங்கள், புதிதாக சட்டங்கள் கொண்டு வருவதற்காக எங்களோடு பேசுங்கள். யோசியுங்கள்.“எல்லோருடைய வளர்ச்சிக்காகவும் எல்லோருடைய நம்பிக்கையுடனும் எல்லோரும் ஒன்றுபட்டிருத்தல்” என்ற மந்திரத்தைப் பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான எங்கள் அரசு, பாகுபாடு இல்லாமல் எல்லோரின் நலன்களையும் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறது என்று கூறயிருக்கிறீர்கள். அதற்கு இந்த 6 ஆண்டு சாட்சி என்கிறீர்கள். நம்பிக்கை கொள்ளுங்கள், என்கிறீர்களே. எப்படி ஐயா, நாங்கள் உங்களை நம்புவது? உங்கள் அரசு ஏழைகளுக்கானதல்ல என்பதை நாங்கள் ஏற்கெனவே தெரிந்து கொண்டோமே, கடந்த ஆண்டு தில்லியில் நாங்கள் போராடிய போது நீங்கள் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லையே. மறந்துவிடவில்லை நாங்கள். இந்த அரசு கார்ப்பரேட் கனவான்களுக்கானது என்பதை நாங்கள் ஏற்கெனவே நன்றாகப் புரிந்து கொண்டு விட்டோம். இனி நம்ப மாட்டோம். உங்களையும், உங்கள் தலைவரையும்.

உங்கள் கடிதத்தை முடித்திடும் நிலையில் இந்தச் சீர்திருத்தங்கள் இந்திய விவசாயத்தில் புதிய அத்தியாயத்தைஉருவாக்கும் என்று கூறியிருக்கிறீர்கள்.இது உண்மைதான்.முன்பு நிலப்பிரபுத்துவ ஆதிக்கக்காரர்களிடம் இருந்தஅதிகாரத்துவம் இந்தச் சட்டங்களால் ஏகபோக முதலாளிகளின் ஆதிக்கத்தில், கார்ப்பரேட் கனவான்களின் காலடியில் கிடக்க பாதையமைக்கும்.அந்த முயற்சியில்தானேதீவிரமாகியிருக்கிறீர்கள். அது நடக்காது.கடிதத்தில் பின்குறிப்பு எழுதுவது போல், விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் என்று எட்டு அம்சங்களை குறிப்பிட்டுள்ளீர்கள். 

1. குறைந்தபட்ச ஆதார விலைக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க அரசு தயாராக உள்ளது என்கிறீர்களே, ஏன் சட்டப்பூர்வ அங்கீகாரம் தந்தால் என்ன?

2. வெளியில் செயல்படும் தனியார் சந்தைக்கு வரி வசூலிக்க மாநிலங்கள் அனுமதிக்கப்படும் என்கிறீர்களே, அது ஏன்? போனால் போகட்டும் என்று ‘தர்மம்’ பண்ணுகிறீர்களா?

3. எந்த சர்ச்சைகள் எழுந்தாலும் நீதிமன்றத்தை நாட விவசாயிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறீர்களே! உங்களது சட்டத்தில் ‘நீதிமன்றம்’ என்கிற வார்த்தையே இல்லையே. பின் எப்படி நா கூசாமல், எழுதத் தயங்காமல் இப்படிச் சொல்கிறீர்கள். 

முழு உரிமையையும் பறித்துவிட்டு...
4. வேளாண்மை ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை அளிக்கப்படும் என்கிறீர்கள். ரொம்பத் தாராளம்தான். அவர்களது முழு உரிமையையும் பறித்துக் கொண்டு விட்டு, பிழைத்துப் போக விட்டுள்ளீர்கள்.

5.யாரும் சட்டவிரோதமாக நிலத்தைக் கையகப்படுத்த முடியாது என்கிறீர்கள். ஆனால் உங்களது சட்டப்படி செய்துகொள்ள முடியும் அல்லவா?

6. விவசாயிகளின் நிலத்தில் நிரந்தரமான எந்த மாற்றத்தையும் ஒப்பந்ததாரர்கள் செய்ய முடியாது என்கிறீர்கள். ஆனால் தற்காலிக மாற்றங்கள் செய்து கொள்ள முடியும் அல்லவா? அதை உங்களது அடுத்த வாக்குறுதியே உடைத்துவிடுகிறதே.

7. விவசாயிகளின் நிலத்தில் தற்காலிக கட்டுமானம் எதுவும் மேற்கோள்ள ஒப்பந்தத்தாரருக்கு கடன் தரப்படாது என்கிறீர்கள். அப்படி என்றால் அவர்கள் சொந்தப் பணத்தில்செய்து கொள்ளலாம் தானே. இதற்கு மட்டும் கடன் தரமாட்டீர்கள், ரொம்பக் கண்டிப்புத் தான் போங்கள்.

8. எந்தச் சூழ்நிலையிலும் விவசாயிகளின் நிலத்தைப் பறிமுதல் செய்ய சட்டம் அனுமதிக்காது என்கிறீர்கள். உக்கும். பறிமுதல் வேறு செய்யணுமா? பட்டா மட்டும்விவசாயி பெயரில் இருக்கும் பயன்படுத்துவது ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில்தானே இருக்கும்.இத்தனையும் விவசாயிகளை சுதந்திர அடிமைகளாகத் தானே வைத்திருக்கும், வீட்டுச் சிறையில் வைத்திருப்பது போல.

நம்பற்குரியர் அல்லர்...
விவசாயிகளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டு கடைசியாய் இருப்பது கொஞ்சம் நிலமும் கொஞ்சம் உயிரும். அதையும் பறிப்பதற்காக - கர்ணன் போல் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் விவசாயியிடம் - கண்ணன்போல்வேதியர் வேடமிட்டு புதிய சட்டங்களோடு எதிர்வந்துநிற்கிறீர்கள். தரமாட்டான் விவசாயி. கலப்பைகளோடு அல்ல டிராக்டர்களோடு உங்களை முற்றுகையிட்டிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டு இந்திய விவசாயி உங்களிடம்ஏமாறமாட்டான். உங்களை நம்பமாட்டான். ஏனெனில் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களே! பிரதமர் நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் நம்புவதற்குரியவர்கள் அல்லர்.

தில்லியின் எல்லை நுழைவாயில்கள்
எங்கும் காணரும் வீரர் பெருந்திருக்கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் இந்திய விவசாயத்தைக் காப்பர்.

இப்படிக்கு, மாயாண்டிபட்டி (மதுரை) விவசாயி....

===ப.முருகன்====

;