articles

img

தண்டவாளம் ஏறும் மோடி அரசின் வண்டவாளங்கள்..... (தடம் புரளும் ரயில்வே.... யார் பொறுப்பு? - 2 )

மோடி அரசு 2014ல் பதவியேற்றவுடன் திட்டக் கமிஷனை மூடிவிட்டு ரயில்வேக்கு தனியாக 5 ஆண்டு திட்டத்தை அறிவித்தது. ஐந்தாண்டுகளில் 8.56 லட்சம்கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தது. அதன் முடிவில் சரக்கு வண்டிகளின் வேகம் 25 லிருந்து 50 கிலோ மீட்டராக உயர்த்தப்படும்; பயணி வண்டிகளின் வேகம் 50 கிலோ மீட்டரிலிருந்து 80 கிலோ மீட்டராக உயர்த்தப்படும்; சரக்கு போக்குவரத்தின் பங்கு 26 இல் இருந்து 45 சதவீதமாக உயர்த்தப்படும்; பயணிகள் கேட்பவருக்கு எல்லாம் டிக்கெட் அளிக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் திட்டமிட்டபடி முதலீடு செய்யவில்லை. ஐந்தாண்டுகளில் பாதிக்கும் குறைவாகத்தான் முதலீடு செய்யப்பட்டது. 

மெகா திட்டங்களும்  அடிக்கடி மாறும் இலக்குகளும்
பொது பட்ஜெட்டோடு ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்ட பிறகு 2019-20 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் 12 ஆண்டுகளில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும்; அதாவது ஆறு ஆண்டுகளில் 20 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதாவது ஆண்டுக்கு 4 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால் அந்த ஆண்டுக்கு 1.61 லட்சம் கோடி தான் திட்டமிடப்பட்டது. அதிலும் அரசின் முதலீடு வெறும் 37 ஆயிரம் கோடிதான்.  அதே ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதம மந்திரி சுதந்திர தின உரையில், நாட்டில் அடித்தள கட்டுமானத்தில்  103 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்; அதில் ரயில்வேயில் 13.69 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.அதாவது ஆறு ஆண்டுகளுக்கு 13.69 லட்சம் கோடி. ஆறு ஆண்டுகளுக்கு 25 லட்சம் கோடி என்ற நிர்மலா சீதாராமனின் லட்சியம் தடாலென குறைக்கப்பட்டு விட்டது. சரி, அந்த 13.69 லட்சம் கோடியில் 87 சதமானம் அரசு பட்ஜெட் ஆதரவாக கொடுக்கப்படும்; 12 சதமானம் தான் தனியார் மூலம் வரும்; அந்த ஒரு சதம் மாநில அரசு மூலம் வரும் என்று அறிவித்தார்கள். அதன்படி 2019-20ல் 1.33 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட வேண்டும். இதில் அரசின் முதலீடு 1.15 லட்சம் கோடி வரவேண்டும். ஆனால் பட்ஜெட் ஆதரவு வெறும் 52,000 கோடி தான் வந்தது. அதிலும் பாதுகாப்பு நிதி கழிக்கப்பட்டால் 37 ஆயிரம் கோடிதான் நிகர முதலீடாகும். 

அதைப்போல 20- 21ல் 2.62 லட்சம் கோடி முதலீடு செய்து இருக்க வேண்டும். இதில் பட்ஜெட் ஆதரவு 2.28 லட்சம் கோடி வந்திருக்க வேண்டும். ஆனால் பட்ஜெட் ஆதரவு 70,250 கோடி தான் திட்டமிடப்பட்டது. அதையும் மறுமதிப்பீட்டில் 29 ஆயிரம் கோடியாக குறைத்து விட்டார்கள் .41 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டது. இதை ஈடுகட்ட 45,000 கோடி தனியார் முதலீடு கூடுதலாக வரும் என்று கணக்கு காட்டுகிறார்கள். வராத தொகையை வரப்போவதாக காட்டி 20 -21ல் 1.61 லட்சம் கோடி முதலீடு தொடரும் என்று பொய்க் கணக்கு காட்டுகிறார்கள். 

2021-22 க்கு இந்த ‘இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைப்லைன்’ திட்டப்படி 3.9 லட்சம் கோடி திட்டமிட வேண்டும். ஆனால் 2.15 லட்சம் கோடி தான் திட்டமிடப்பட்டுள்ளது. அதிலும் 2.7 லட்சம் கோடி பட்ஜெட் ஆதரவு வரவேண்டும். அதில்மத்திய அரசு அறிவித்திருப்பது வெறும் 1.07 லட்சம் கோடி. இதுவும் ஏற்கனவே பார்த்ததுபோல உண்மையில் புதிதாக வெறும் 60 ஆயிரம் கோடிதான். எனவே இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர் பைப்லைன் திட்டமும் நடைமுறையில் தோல்வியடைந்துள்ளது. இப்போது 2021-22 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் மீண்டும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளார். இது நேஷனல் ரயில் பிளான் என்கிறார் .அதன்படி 2021- 22 முதல் 2051 வரை 30 ஆண்டுகளில் 38.5   லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்கிறார். அதன்படி 21- 26 காலகட்டத்தில் 5.81 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும். 21- 22 க்கு 1.17 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும். நேஷனல் ரயில் பிளான் படி, அதன் லட்சியம் வேறொன்றுமல்ல, 2014 அறிவித்த அதே லட்சியம் தான். அதாவது சரக்கு வண்டிகளின் வேகம் 25 லிருந்து 50 கிலோ மீட்டராக உயர்த்தப்படும். பயணி வண்டிகளின் வேகம் 50 கிலோ மீட்டரிலிருந்து 130 கிலோ மீட்டராக உயர்த்தப்படும். தேசிய சரக்குப் போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கு 26 லிருந்து 45 சதம் உயர்த்தப்படும். இதிலிருந்து புரிகிறதா? 2014ல் திட்டமிட்ட படி ஐந்து ஆண்டுகளில் லட்சியம் நிறைவேற வில்லை. இன்று வரையிலும் அந்த லட்சியம் நிறைவேறவில்லை. உண்மையில் ரயில்வே நிலை இன்னும் அதைவிட மோசம் தான். எனவே ரயில்வேயின் அடித்தளம் இன்னும் மோசமாக போகும் என்பதுதான் உண்மை. அரசு முதலீடு செய்யாமல் இதனை சரி செய்ய முடியாது.

சீனாவில் சரக்குப் போக்குவரத்துகள் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கின்றன. பயணி போக்குவரத்துகள் 400 கிலோ மீட்டரை தாண்டி விட்டன .அரசு முதலீடு தான் காரணம். இதை புறக்கணிப்பதால் ரயில் வளர்ச்சி பாதிக்கப்படும். ரயில் வளர்ச்சி பாதிக்கப்பட்டால் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும். ரயில் வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு தனியார்மயத்தை முன்வைக்கிறார்கள் பாஜக ஆட்சியாளர்கள்.

500 பயணிகள் ரயில்களும் ஒட்டுமொத்த சரக்குப் போக்குவரத்தும் தனியாருக்கு!
நேஷனல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைப் லைன் திட்டத்தின் அடிப்படையில் 2025ல் 500 பயணிகள் ரயில்களும் முப்பது சதமான சரக்கு போக்குவரத்தும் 30 சதமான ரயில் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படும். உடனடியாக 2023 மார்ச்சுக்குள் 150 பயணி வண்டிகள் 109 ரூட்டுகளில் அனுமதிக்கப்படும். சரக்கு போக்குவரத்திற்காக நிர்மாணிக்கப்பட்டு வரும்  கிழக்கு மற்றும் மேற்கு தனி சரக்கு பாதைகளில் தனியார் முதலீடு செய்ய வரவில்லை. ஆனால் இந்தப் பாதைகளில் தனியார் சரக்கு வண்டிகள் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கப்படும்.

அத்துடன் இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன், கிழக்கு-மேற்கு சரக்கு பாதைகளை நிர்வகிக்கும் தனி சரக்கு பாதை கார்ப்பரேஷனையும் ஒட்டுமொத்தமாக தனியாருக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளது. அதைப்போல ரயில்வேயின் கன்டெய்னர் கார்ப்பரேஷனையும் தனியாரிடம் ‘ஸ்ட்ராடஜிக் சேல்’ என்ற அடிப்படையில் விற்றுவிட முடிவு செய்துள்ளது. இப்போது நேஷனல் ரயில் பிளானில் 2031 வாக்கில் ரயில்வேயின் அனைத்து சரக்கு போக்குவரத்தும் தனியார்மயமாக்கப்படும் என்றுகூறப்பட்டுள்ளது. அதைப்போல லாபம் வரும் ஏசி வண்டிகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும். நஷ்டம் வரும் பயணி போக்குவரத்தை மட்டும் ரயில்வே பார்த்துக் கொள்ளும். 

இதன் விளைவு என்ன? சரக்கு போக்குவரத்தில் இருந்துபயணி போக்குவரத்தின் இழப்பை ரயில்வே ஈடுகட்ட முடியாது? சரக்கு போக்குவரத்து இல்லை என்றால் ரயில்வே இழப்பில் தான் நடத்த வேண்டியிருக்கும். இதன் விளைவாக ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளமோ பென்ஷனோ கொடுக்க முடியாது. பயணிகளுக்குச் சலுகை கொடுக்க முடியாது. அடித்தள கட்டுமானம் மேம்படுத்தப்படாமல் தனியாரிடம் ஒப்படைப்பதன் விளைவாக, தனியார் லாபம் வரவில்லை என்றால் அர்ஜென்டினா போல ரயிலை மூடி விட்டு போய்விடுவார்கள். எனவே ரயில் போக்குவரத்து சீர்குலையும். இதைத்தான் மோடி அரசும் நிர்மலா சீதாராமனும் திட்டமிடுகிறார்கள். பெரிய பெரிய பொய்யாக சொல்கிறார்கள். ஹிட்லரின் அமைச்சர் கோயபெல்ஸ் சொன்னான், பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பிவிடுவார்கள் என்று. அந்த பொய்யும் எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது மோடி வகையறாவுக்கு! 

கட்டுரையாளர் : ஆர்.இளங்கோவன், மூத்தத் தலைவர், தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு)