articles

img

பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்குமா?

தென் ஆப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொ டுத்துள்ள வழக்கு பரவலாக உலக கவ னத்தை பெற்றுள்ளது. நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ஜனவரி 11ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவும் 12ஆம் தேதி இஸ்ரேலும் தமது வாதங்களை முன்வைத்தன. இந்த வழக்கில் மையமான அம்சம் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதாகும். இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கு ஆண்டுகள் பல ஆகும். அதற்குள் பாலஸ்தீனம் அழிக்கப்பட்டுவிடும். எனவே இடைக்கால தீர்ப்பு தரும்படியும் அதன் மூலம் காசா போரை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனவும் காசா மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட வேண்டும் எனவும் தென் ஆப்பிரிக்கா தனது வாதத்தில் வற்புறுத்தியுள்ளது.  

இடைக்கால தீர்ப்பு வருமா? பாலஸ்தீன மக்கள் நீதி  பெறுவார்களா? என்பது சில வாரங்களில் தெரியும். சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) ஐ.நா.அமைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த நீதி மன்றத்துக்கு 15 நீதிபதிகள் ஐ.நா. பொது சபையால் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் வழக்கு தொடுக்கும் மற்றும் அந்த வழக்கை சந்திக்கும் தேசங்கள் சார்பாக இரு நீதிபதிகள் அந்த வழக்கு முடியும் வரை தற்காலி கமாக நியமிக்கப்படுவார்கள். 

தென் ஆப்பிரிக்காவின் வாதம்!
தென் ஆப்பிரிக்கா சிறப்பான தயாரிப்புகளுடன் தனது வாதங்களை முன்வைத்தது. ஒரு தேசம் இனப் படுகொலையில் ஈடுபடுகிறது என்பதை நிலைநாட்ட:

1. இனப்படுகொலை செய்யப்பட்டது.

2. இனப்படுகொலை செய்வதற்கான நோக்கம். ஆகிய இரண்டு குற்றங்களும் நிரூபிக்கப்பட வேண்டும். இனப்படுகொலை செய்ததற்கான ஆதா ரங்களை சமர்ப்பிக்க முடியும். ஆனால் இனப்படு கொலைக்கான நோக்கம் இருந்தது என்பது நிரூபிப்பது கடினமான செயல். இஸ்ரேல் விஷயத்தில் அந்த கடினம் தென் ஆப்பிரிக்காவுக்கு இருக்கவில்லை. அந்த பணியை இஸ்ரேல் சுலபமாக்கிவிட்டது.

தென் ஆப்பிரிக்கா சார்பாக நீதி அமைச்சர் ரொனால்டு லோமேலா கீழ்கண்ட வாதங்களை முன்வைத்தார். 

l    பாலஸ்தீனர்கள் காசாவில் 75 ஆண்டு இன ஒதுக்கலும் 54 ஆண்டுகள் ஆக்கிரமிப்பையும் 13 ஆண்டுகள்முற்றுகையையும் சந்தித்து வருகின்றனர்.

l    இந்த அநீதியும் வரலாறும் அக்டோபர் 7ஆம் தேதிஹமாசின் தாக்குதலுடன் தொடங்கவில்லை. 

l    தென் ஆப்பிரிக்கா கேட்பது உடனடியாக ஒரு இடைக்கால தீர்ப்பு. அதற்காக இனப்படுகொலை குறித்துஅனைத்து அம்சங்களும் உடனடியாக முன்வைக்க
வேண்டும் என்பது அவசியமில்லை. அதனை பின்னர்
தென் ஆப்பிரிக்கா நிச்சயமாக முன்வைக்கும்.
அடுத்து டாக்டர் அடிலா வாஷிம் எனும் பெண் வழக்கறிஞர் தான் ஏற்றுக்கொண்ட இனப்படுகொலை தடுப்பு கன்வென்ஷன் II a/b/c/d ஆகிய பிரிவுகளை இஸ்ரேல் மீறியுள்ளது என குற்றம்சாட்டினார். அந்த பிரிவுகள்:

a) ஒரு குழுவின் உறுப்பினர்களை கொலை செய்வது.

b) அந்த குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாகஅல்லது மன ரீதியாக துன்பங்களை உருவாக்குதல்.

c) முழுமையாகவோ, பகுதியாகவோ அந்த குழுவை அழிப்பதற்கான சூழல்களை திட்டமிட்டு திணிப்பது.

d)இந்த குழுவுக்குள் குழந்தை பிறப்பதை தடுக்கும் நோக்கத்துடன் நடவடிக்கைகளை திணிப்பது. 

23,200 காசா மக்கள் படுகொலை செய்யப்பட்டது; அதில் 70 சதவீதம் குழந்தைகள் மற்றும் பெண்கள்; 7,000 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளது; 200 தடவை க்கு அதிகமாக உலகிலேயே அதிக எடை கொண்ட 2000 பவுண்டுகள் (450 கிலோ) குண்டுகளை வீசியது; 60,000 பேர் படுகாயம்; 3,35,000 வீடுகள் அழிப்பு என வாஷிம் ஆதாரங்களை அடுக்கினார். பெரும்பாலும் அவர் ஐ.நா.வின் ஆதாரங்களையே முன்வைத்தார். அமைதியான ஆனால் உறுதியான குரலில் வாதங்க ளை வைத்த  அவர் குழந்தைகள் படுகொலை பற்றி பேசும் பொழுது துக்கம் மேலிட தடுமாறினார். இதனை நீதிபதிகள் கவனிக்கத் தவறவில்லை. 

அமலேக்குகள்
அடுத்ததாக வழக்கறிஞர் டெம்பேக்காவின் வாதம் முக்கியமாக இனப்படுகொலைக்கான நோக்கம் இஸ்ரேலுக்கு இருந்தது என்பதை மையமாக கொண்டிருந்தது. “மனித மிருகங்கள்” என காசா மக்களை இஸ்ரேல் ராணுவ அமைச்சர் கூறியது; காசா மக்கள் அனைவரும் ஹமாஸ் பயங்கரவாதி கள்; அவர்கள் கொல்லப்பட வேண்டும் என பல  அமைச்சர்கள் பேசியதை காணொலி ஆதாரங்களுடன் அவர் முன்வைத்தார்.  

அவரது வாதத்தின் மிக முக்கிய அம்சம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் உரை ஆகும். அவர் இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றும் பொழுது காசா மக்கள் “அமலேக்குகள்” எனவும் அமலேக்குகளை என்ன செய்ய வேண்டும் என கடவுள் சொன்னாரோ அதனை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

பைபிள் பழைய ஏற்பாட்டில் யூதர்களின் நிலத்தை அமலேக்குகள் எனப் படுபவர்கள் பறித்துக் கொள்வதாகவும் அவர்களிடமி ருந்து நிலத்தை மீட்க அனைத்து அமலேக்குகள் ஆண்கள்/பெண்கள்/குழந்தைகள் அனைவரையும் கொன்று விடும்படியும் கடவுள் கூறியதாக உள்ளது. அது போல நாம் பாலஸ்தீனர்களை கொன்றுவிட வேண்டும் என பகிரங்கமாக நேதன்யாகு கூறினார்.

இதனை டெம்பேக்கா ஆதாரத்துடன் முன்வைத்தார். மேலும் இது நேதன்யாகுவுடன் நிற்கவில்லை. காசா பகுதிக்குள் சென்ற இஸ்ரேல் வீரர்கள் பாலஸ்தீ னர்களை கொன்ற பிறகு அல்லது கட்டிடங்களை தகர்த்த பிறகு “நாங்கள் அமலேக்குகளை கொன்று விட்டோம்” என நடனமாடி அதனை பல காணொலிக ளில் பதிவு செய்து வெளியிட்டனர். எனவே பாலஸ்தீன மக்களை இனத்தின் அடிப்படையில் கொல்வது எனும் நோக்கம் இஸ்ரேல் அரசின் மேலிருந்து கீழ்மட்ட ராணுவ வீரர்கள் வரை ஊடுருவி இருந்தது என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் டெம்பேக்கா முன்வைத்தார். 

இடைக்காலத் தீர்ப்பு தேவை

அடுத்து பேராசிரியர் ஜான் டுக்கார்டு இந்த  வழக்கை விசாரிப்பதற்கான அதிகாரம் இந்த நீதி மன்றத்துக்கு உள்ளது என்பதையும் எந்த முகாந்தி ரத்தின் அடிப்படையில் தென் ஆப்பிரிக்கா இந்த வழக்கை முன்வைத்துள்ளது என்பதையும் விவ ரித்தார். இந்த  வாதங்கள் மிக முக்கியமானவை. ஏனெ னில் இஸ்ரேல், அடுத்த நாள் தென் ஆப்பிரிக்காவுக்கு வழக்கு தொடர உரிமையில்லை என வாதிட்டது. இதனை முன் கூட்டியே அறிந்தது போல ஜான் டுக்கார் டின் வாதம் அமைந்தது. பின்னர் வாதம் முன்வைத்த மேக்ஸ் டு பிளெசிஸ் பாலஸ்தீனர்கள் தாங்கள் உயிர் வாழும் உரிமையை மட்டுமே கேட்கின்றனர் என்பதை எடுத்துரைத்தார்.  

இறுதியில் மிக அற்புதமாக வாதிட்ட அயர்லாந்து  பெண் வழக்கறிஞர் பிளினி நி கரலைக் இடைக்கால தீர்ப்பு தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளும் பாலஸ் தீன மக்கள் உயிரையும் வாழ்வாதாரத்தையும் இழந்து கொண்டுள்ளனர் என்பதை விளக்கினார். காசா மக்க ளுக்கு தண்ணீர்/ உணவு/மருந்துகள்/மின்சாரம்/ இணையம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் பத்து குழந்தை கள் ஒரு கால் அல்லது இரு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் இழந்து கொண்டுள்ளனர்; பல சமயங்க ளில் மயக்க மருந்து இல்லாமலேயே அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு நடத்தப்படுகிறது எனும் கொடூரத்தையும் அவர் விளக்கினார். எனவே உடனடி யாக இடைக்கால தீர்ப்பு தேவை என அவர் வாதிட்டார். 

இஸ்ரேலின் வாதம்

இஸ்ரேலின் வாதங்கள் கீழ்கண்டவாறு இருந்தன:
 

o    இனப்படுகொலையை அறிந்தவர்கள் இஸ்ரேலியர் கள்தான்! அவர்கள்தான் 60 லட்சம் பேர் நாஜிக்க ளால் கொல்லப்பட்டனர்.

o    இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடவில்லை. o    ஹமாஸ்தான் அக்டோபர் 7ஆம் தேதி இனப்படு கொலையை செய்தது.

o    ஹமாஸ் குழந்தைகளின் தலைகளை வெட்டியது; பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது.

 o    தென் ஆப்பிரிக்கா ஹமாசின் சட்டப்பிரிவு.

o    காசா மக்கள் மரணத்துக்கு காரணம் ஹமாஸ் அவர்க ளை கேடயமாக பயன்படுத்துவதுதான்.

o    காசாவில் கட்டிடங்கள் தகர்க்கப்பட்டதற்கு இஸ்ரே லின் குண்டுகள் காரணமல்ல; ஹமாசின் கண்ணி வெடிகள்தான் காரணம்

o    அக்டோபர் 7 ஹமாசின் தாக்குதலுக்கு பின்னர் சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசியதை இனப்படு கொலைக்கான நோக்கம் இருந்தது என்பதாக எடுத்து கொள்ளக்கூடாது.

என பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் முன்வைத்தது. அக்டோபர் 7 ஹமாசின் தாக்குதலை பல காணொலிகள் மூலம் காட்டி அவர்கள் நீதிபதி களின் பரிதாபத்தை தேட முனைந்தனர். 

ஆபத்தான மூன்று வாதங்கள்

எனினும் இஸ்ரேல் வைத்த மூன்று வாதங்கள் ஆபத்தானவை. அவை:

H இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

H இனப்படுகொலை தடுப்பு கன்வென்ஷன் படி  இரண்டு பிரிவுகளுக்கு இடையே உள்ள பிரச்சனை தான் இனப்படுகொலை என்பது.  இதில் இரு பிரிவு என்பது ஹமாசும் இஸ்ரேலும். தென் ஆப்பி ரிக்காவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கை முன்வைக்க தென் ஆப்பிரிக்கா வுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

H இடைக்கால தீர்ப்பு இஸ்ரேலுக்கு எதிராக தரப் பட்டால் இஸ்ரேல் எனும் தேசம் அழிக்கப்படுகிறது என பொருள்.

இதில் எந்த ஒரு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் அது பாலஸ்தீன மக்களுக்கு பாதகமாகவே முடியும்.

நீதிபதிகளும் தீர்ப்பும்

இந்த நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் அந்தந்த அரசாங்கங்களால் முன்மொழியப்பட்டு பின்னர் ஐ.நா. பொதுச்சபையால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே பெரும்பாலும் அரசாங்கத்தின் நிலைபாடும் நீதிபதிகளின் நிலைபாடும் ஒன்றிசைந்து இருந்தால் நாம் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை. அதே சமயம் நீதிபதிகள் சுயேச்சையாக செயல்பட்ட பல உதாரணங்களும் உண்டு.

சர்வதேச நீதிமன்றத்தில்  உள்ள 15 நீதிபதிகள்:
1. ஜோன் ஈ டொனோக்  (அமெரிக்கா/தலைவர்), 2. கிரில் கெவோர்கய்ன் (ரஷ்யா/ உதவி தலைவர்), 3. பீட்டர் டோம்கா (ஸ்லோவேகியா), ரோன்னி அப்ரகாம் (பிரான்சு), 5. முகமது பெனவுனா (மொராக்கோ), 6.  அப்துல்வாக்கி யூசுப் (சோமாலியா), 7. சூ ஹாங்கின்  (சீனா), 8. ஜூலியா செபுட்டின்டே (உகாண்டா), 9. தல்வீர்  பண்டாரி (இந்தியா), 10. பேட்ரிக் லிப்டன் ராபின்சன் (ஜமைக்கா), 11. நவாஃப் சலாம் (லெபனான்), 12. இவாசா வா யூஜி (ஜப்பான்), 13. கெரோக் நோல்டே (ஜெர்மனி), 14. ஹில்லாரி சார்லஸ் ஒர்த் (ஆஸ்திரேலியா), 15. லியானர்டோ  நெமர் (பிரேசில்).

அரசின் கருத்தையே  தீர்ப்பாக்கும் நீதிபதிகள்

தலைமை நீதிபதி அமெரிக்க அரசில் பல பதவிகளை வகித்தவர். அமெரிக்க-  நிகரகுவா சட்டப் பிரச்சனையில் அமெ ரிக்க சட்ட நிபுணர் என்ற முறையில் நிகரகுவாவுக்கு எதிரான நிலை எடுத்தவர். இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி இரண்டாம் முறை கடும் போட்டியை சந்தித்த பொழுது இந்திய அரசாங்கம் பல தேசங்க ளிடம் பேசி அவரை வெற்றிபெற வைத்தது.

ரஷ்யா-உக்ரைன் போரில் பொதுவெளியில் இந்தியா ரஷ்யாவை கண்டிக்கவில்லை. ஆனால் இந்த நீதி மன்றத்தின் முன்பு வழக்கு வந்த பொழுது நீதிபதி பண்டாரி ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தார். நீதிபதி கள் தமது அரசுகளின் நிலைபாடுகள் அடிப்படையில் தீர்ப்பளிப்பார்களா அல்லது சுயேச்சையாக தம் முன்பு வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் காசா மக்களின் துன்பங்கள் அடிப்படையில் தீர்ப்பு அளிப்பார்களா எனும் சிக்கலான கேள்வி முன்வந்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் தாங்கள் காசாவின் மீதான தாக்குதலை நிறுத்தப் போவது இல்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

நீதிமன்றம் காசா மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தாலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளப் போவது இல்லை. தனது தீர்ப்பை அமலாக்க வைக்கும் எந்த ஏற்பாடுகளும் நீதிமன்றத்திடம் இல்லை. எனவே தீர்ப்பு மீண்டும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு செல்லும். அங்கு இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும். 

மக்களின் போராட்டங்களே...
அடக்குமுறைக்கு ஆளாகும் மக்களின் பிரச்சனை கள் பெரும்பாலும் நீதிமன்றத்தில் தீர்க்கப்படுவது இல்லை. மக்களின் போராட்டம் மற்றும் ஆதரவுடன் களத்தில்தான் தீர்மானிக்கப்படுகிறது. காசா மக்க ளுக்கு ஆதரவாக இடைக்கால தீர்ப்பு அமைந்தால் மக்களின் ஆதரவு மேலும் வலுவாவதற்கான சூழல் உருவாகும். எனினும் அரேபிய தேசங்களும் இஸ்லாமிய தேசங்களும் ஏனைய நாடுகளும் குறைந்த பட்ச கள நடவடிக்கைகள் எடுத்தாலொழிய பாலஸ்தீன மக்களுக்கு தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கும். உலகம் இன்னொரு இனப்படுகொலையை வாய் மூடி மவுனியாக பார்த்துக் கொண்டிருக்கும்.