articles

img

பழியைப் பெண்கள் மீது சுமத்துவது சரி அல்ல!

“பெண்களின் வேலைச்சுமை குறைந்ததால் சிசேரியன் அதிகரித்துள்ளது என்ற விந்தையான கருத்தினை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். தனியார் மருத்துவமனைகளின் அதீத லாப வேட்கை சிசேரியனுக்குக் காரணம் இல்லையா? ஆய்வின்படி இந்தியாவில் அரசு மருத்துவமனைகளை  விட, தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவம் 4 மடங்கு அதிகமாக நடக்கின்றன. வறுமை, ஊட்டச்சத்துக் குறைவு, இளம் வயதுக் கர்ப்பம், முதிர் வயதுக் கர்ப்பம், அதிக எடை, நேரம் காலம் குறித்த மூடநம்பிக்கை போன்றவை பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தி, சிசேரியனுக்குத் தள்ளுவது அமைச்சருக்குத் தெரியாதா? நார்மல் பிரசவத்தில் உருவாகும் கடும் வலியை, வேதனையை அனுபவிக்க மறுத்து, சிலர் சிசேரியனைத் தேர்வு செய்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்… பெண்கள் வீட்டிலும் வெளியிலும் வேலை செய்வதில்லையா? வேலைச்சுமை குறைந்தது என எதை வைத்து அமைச்சர் சொல்கிறார்? மிக்சி, கிரைண்டரைப் புறக்கணித்து மாங்கு மாங்கென்று வேலை செய்யச் சொல்கிறாரா? தொழில் நுட்ப வளர்ச்சியை வீடு சார் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பது அவர் வாதமா? அல்லது வீடு சார் வேலையிலிருந்து பெண்கள் விடுபடவே கூடாது என்று எண்ணுகிறாரா? பழமைவாதம் இழையோடுகிறதே.. சிசேரியனை குறைக்க பெண்களின் பணிச்சுமையை அதிகரிப்பது தான் தீர்வு என அமைச்சர் பரிந்துரைப்பது போல் தெரிகிறது. இது திருத்தப்பட வேண்டிய கருத்தாகும். அகில இந்திய சராசரியை விட தமிழகத்தில் சிசேரியன் அதிகம் என‌ ஐஐடி (IIT) ஆய்வு வெளியிட்டிருப்பதால், பழியைப் பெண்கள் மீது சுமத்துவது பொருத்தமே அல்ல!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி குறிப்பிட்டுள்ளார்.