articles

img

அங்கே மனிதர்கள் இருப்பதால் அதன் பெயர் வீடு! - பெ.சண்முகம்

“நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். அது குறித்த அறிக்கையை  ஒருவார காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டி வரும். இனி பொறுத்துக் கொள்ள முடியாது”  - இது சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய உத்தரவு. நீதிபதிகளின் இந்த அதிரடியான உத்தர வுக்குக் காரணம், “2018ம் ஆண்டே நாங்கள் தீர்ப்பளித்தோம்; ஆனால் தமிழக அரசு அதிகாரிகள் உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை” என்ற வருத்தத்தை அவர்கள் வெளியிட்டிருக்கின்றனர். உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர்  அவர்கள் அவசரமாக அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி இதை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.

‘வீடு’ என்றால் என்ன?

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், எல்லா ஆக்கிரமிப்புகளையும் ஒரே தட்டில்  சமமாக வைத்துப் பார்ப்பது சரியா; அது நீதியாக இருக்குமா என்ற கேள்வி எழாமல் இல்லை. உதா ரணத்திற்கு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவுக்கு உட்பட்ட நான்கு கிராமங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறுபது பேர் அடையாளம் காணப்பட்டு வருவாய்த்துறையினரால் காலி செய்ய வேண்டுமென்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 60 குடும்பங்களில் 56 குடும்பங்கள் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு அடி இடம்  கூட சொந்தமாக இல்லாதவர்கள். ஆனால் பரம்பரை யாக இந்த இடத்தில் தான் வாழ்ந்து வருகிறார்கள். வீடு  என்ற வரையறைக்குள் அந்த சின்னஞ்சிறிய குடிசை யை விருதுபெற்ற எழுத்தாளர்களால் கூட உரு வகப்படுத்தி விட முடியாது. கதவு, ஜன்னல் கிடையாது.  அறைகள் கிடையாது. கூரை அமைப்பதற்கென்று இது வரை கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரு கின்ற ஓலை, ஓடு, சிமெண்ட் ஓடு, கான்கிரிட் தளம், மரம் இப்படி எதையும் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் இதுதான் அம்மக்கள் வாழும் வீடு. பல வீடு களுக்கு சுவர் கூட கிடையாது. பிறகு எப்படி அது வீடு. கடவுள் சிலை இருக்கும் இடம் கோவில் என்று சொல்வதைப் போல, அங்கு மனிதர்கள் வாழ்வதால் அது வீடு! பழைய சாக்கு, பழைய கிழிந்த சேலை, உர சாக்கு, டிஜிட்டல் பேனர், பழைய அட்டைகள் இவைகள் தான் அம்மக்களின் கட்டுமானப் பொருட்கள். இத்தகைய குடிசைகளைத் தான் மாபெரும் ஆக்கிரமிப்பு என்று கூறி அதிகாரிகளால் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை இந்த நான்கு கிராமங்களில் மட்டு மல்ல! செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திரு வண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வாழும் 90 சதவீத இருளர், குறவர் பழங்குடி மக்களின் குடியிருப்புகள் நீர்நிலைகளில் தான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பட்டியல் சாதியினரும் பல்வேறு வகையான புறம் போக்குகளில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதர சமூகத்தைச் சார்ந்தவர்களில் ஏழைகள் பல்வகை புறம்போக்குகளில் வாழ்கின்றனர். சொந்தமாக ஒரு குடிமனை வேண்டாமென்றோ, ஒரு நல்ல வீட்டில் வாழ வேண்டுமென்ற ஆசையில்லாமலோ இம்மக்கள் இங்கு வாழவில்லை என்பதை நீதிமான்கள் உணர வேண்டும். ஒவ்வொரு முறையும் கூடுதலான மழை  பெய்யும் பொழுதெல்லாம் முதலில் பாதிக்கப்படு பவர்கள் இவர்கள் தான் என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். இவர்களின் ஆக்கிரமிப்பால் தான் மற்றவர்கள் பாதிக்கப்படு கிறார்கள் என்ற கோபத்தில் தான் நீதிபதிகள் அதிரடி  உத்தரவுகளை வெளியிடுகிறீர்கள். புறம்போக்கு களிலேயே பிறந்து, அங்கேயே வாழ்ந்து, புறம்போக்கு களிலேயே புதைக்கப்படும் இம்மக்களுக்கு என்ன நீதியை நீங்கள் வழங்குகிறீர்கள்?

கோபம் யார் மீது வர வேண்டும்?

நாடு விடுதலை பெற்றதின் பவளவிழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறோம். அதை கோலாகலமாக கொண்டாடும் அதே வேளையில், ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து கொண்டே செல்வது குறித்து மக்களைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் பேசித்தானே ஆக வேண்டும். நம்மை நாமே ஆண்டு  கொள்கிற இந்த நாட்டில் அனைத்து குடும்பங் களுக்கும் ஒரு சொந்தமான குடிமனையை அரசால்  வழங்கியிருக்க முடியாதா? என்ற கேள்வியை நீதிபதி கள் எழுப்பியிருந்தால் கோபம் ஆட்சியாளர்கள் மீது தான் வந்திருக்க வேண்டும். 

வந்தவாசி வட்டம் ஆதனூர் அதியாங்குப்பம் கிரா மத்தில் நீர்நிலையில் வசித்த 12 இருளர் குடும்பங்களை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் டிசம்பர் 3 அன்று காவல்துறை, வருவாய்த்துறையைச் சார்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவு என்று கூறி காலி செய்ய வந்தார்கள். நாங்கள் அம்மக்களுக்கு வழிகாட்டினோம். அதிகாரிகளுக்கும் தெரிவித்தோம், “நீதிமன்ற உத்தரவு என்றால் மதித்துத்தான் ஆக வேண்டும்; எனவே, நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; ஆனால் அதே நேரத்தில், எங்கள் அனைத்து குடும்பங்களுக்கும் சொந்தமாக ஒரு வீட்டுமனைப்பட்டாவும், அதில் வீடுகட்டி குடியேறும் வரை நாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வந்து குடியிருக்கிறோம் என்று! மக்கள் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் குவிந்தனர். நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.

உடனடியாக, மாற்றுஇடம் கண்டறியப்பட்டு, அளவீடு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் பட்டாவும் வழங்கப்பட்டுவிடும்; 15 நாட்களில் அங்கு குடியிருப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்; அதுவரை யாரையும் அவர்கள் வாழும் இடத்திலிருந்து அப்புறப்படுத்த மாட்டோம் என்று வருவாய்த்துறையினருக்கும், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்ட தையொட்டி அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. அக்குடும்பங்களுக்கு சொந்தமாக வீட்டுமனைப்பட்டா கிடைக்க இருப்பதில் மகிழ்ச்சி தான். இனி ஆக்கிரமிப்பாளர்கள் என்று அக்குடும்பங்களை துரத்திக் கொண்டே இருக்க மாட்டார்கள் அல்லவா? எமது கேள்வி, ஒரு நிர்ப்பந்தம் கொடுத்தவுடன் ஒரே நாளில் மாற்று இடத்தை கண்டுபிடித்து அளவீடு செய்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு இடத்தை அடையாளங்காட்ட முடிந்த இந்த அதிகாரிகள் இவ்வ ளவு காலமும் ஏன் அதைச் செய்யவில்லை? தமிழ்நாட்டை இவ்வளவு காலமும் ஆட்சி செய்த ஆட்சி யாளர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 25 லட்சம் குடும்பங்கள் சொந்த குடிமனை இன்றி வாழ்ந்து வரு வதை மாற்றி “அனைத்து குடும்பங்களுக்கு ஒரு சொந்த மான வீட்டுமனை” என்ற நிலையை ஏற்படுத்தி இருக்க முடியாதா? 70 லட்சம் ஏக்கருக்கு மேல் புறம்போக்கு நிலம் உள்ள தமிழ்நாட்டில் இதை செய்திருக்க முடியாதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஆய்வு செய்து  வகைமாற்றம் செய்யுங்கள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 அன்று குடி மனை, மனைப்பட்டா கோரி மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இயக்கம் நடத்தப்பட்டது. அதன் விளைவாக மனைப்பட்டா வழங்குவதற்காக புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அதன் விளைவாக சில லட்சம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபணைக்குரிய புறம்போக்கு என்று ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு அங்கு குடி யிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது என்று  அரசு கூறுவதால் தான் இந்த பிரச்சனை நீடித்துக் கொண்டேயிருக்கிறது. எனவே, அரசு ஆவணங்களில் உள்ள விவரங்களை மட்டும் வைத்து கொண்டு முடிவு  செய்வதற்கு பதிலாக உண்மையிலேயே இப்போது  அந்த இடம் நீர்நிலையாக இருக்கிறதா, ஆட்சேபணை க்குரிய புறம்போக்காகத்தான் இருக்கிறதா என்பதை கள ஆய்வின் மூலம் அரசு முடிவுக்கு வரவேண்டும். அதற்கேற்ப வகைமாற்றம் செய்து ஆவணங்களிலும் மாற்றம் செய்வதன் மூலம் இதற்கு தீர்வுகாணமுடியும். இப்போதும் நீர்பிடிப்பு பகுதி, நீர் நிலைகளில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடத்தில் குடிமனை வழங்கி நிரந்தரமான தீர்வு ஏற்படுத்திட அரசு முன்வரவேண்டும். 

ஆண்டுதோறும் அமைச்சர்கள் பட்டா வழங்கும் நிகழ்ச்சி தவறாமல் நடக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சனை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு  தீர்வு காணாமல், ஐ.நா. சபையே உத்தரவிட்டாலும் ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றினால் மற்றொரு இடத்தில் புதிய ஆக்கிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். எனவே, குடியிருப்பு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த என்ன செய்யலாம் என்று அரசும் நீதித்துறையும் யோசிக்க வேண்டும்.  இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எப்படிப்பட்டது; அங்கு வாழும் மக்களுக்கு மாற்றுவழி என்ன; இனி ஆக்கிரமிப்பே நடைபெறாமல் தடுக்க என்ன செய்ய லாம் என்ற முறையில் ஆய்வு செய்ய சமூகத்தின் மீது  அக்கறைகொண்டவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதி காரிகள் கொண்ட குழுவை அமைத்து உயர்நீதிமன்றத் தின் மேற்பார்வையில் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆலோசனைகளை பெற்று அதன் மீது பொருத்த மான உத்தரவுகளை பிறப்பிக்க முயற்சி செய்ய லாமே! எனவே, குடியிருப்பதற்காக ஆக்கிரமித்திருப்ப வர்களையும், மற்ற ஆக்கிரமிப்பாளர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதை நீதித்துறையும், ஆட்சி யாளர்களும் மாற்றிக் கொள்ள வேண்டுமென்பது நமது வேண்டுகோள். 

கல்வி வள்ளல்கள், தொழிலதிபர்கள், வியாபாரப் பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், ஆளுங்கட்சி  பிரமுகர்கள் என்ற போர்வையில் நீர்நிலை புறம்போக்கு களை விற்பவர்கள் - இத்தகையவர்கள் மீது முதலில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்கள். அதில் எவ்விதமான ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அதிகாரிகள் இத்தகையவர்களை ஆக்கிரமிப்பா ளர்கள் என்ற முறையில் அணுகுவதே இல்லை  என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீதிமன்ற உத்தரவு என்ற பயங்கரமான ஆயு தத்தைக் காட்டி, பயமுறுத்தி, காவல்துறையை ஏவி பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஏழை, எளிய குடும்பங்களை அப்புறப்படுத்தினால் அதற்கெதிராக களம் காணுவதை தவிர வேறு வழியில்லை.

நிரந்தரத் தீர்வுகாண்க!

குடியிருப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் உரிமை. அதற்கு நிரந்தரமான தீர்வு காண்பதே  தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும். ஆள்பவர் களுக்கும் புகழை பெற்றுத்தரும். மற்றொன்று, அரசே, தன்னுடைய தேவைகளுக்காக ஏரி, குளங்களை  தூர்த்து, வகை மாற்றம் செய்து கட்டிடங்கள் கட்டுவது, வீட்டுமனையாக விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இனி இருக்கிற நீர்நிலையாவது வேறு பணிகளுக்கு மாற்றாமல் இருக்க நீதிமன்றம் கறாரான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். மிச்சமிருக்கிற நீர்நிலைகளை பராமரிப்பது, மேம்படுத்துவது, பாதுகாப்பது என்ற முறையில் அரசு செயல்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையில் நீதித்துறையும், அரசும் கவனம் செலுத்த வேண்டும்.  பறவைகளின் கூட்டைக் கலைத்தால் - அது வேறொரு இடத்தில் மீண்டும் கூடு கட்டும். எல்லா உயிர்களின் இயல்பும் அதுதான். ஆக்கிரமிப்பு என்று சொல்லி மனிதர்கள் வாழும் வீட்டை இடித்தால் ஏதுமற்றவர்களுக்கு வேறென்ன வழி வேறொரு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதைத் தவிர! இடம் எதுவாக இருந்தால் என்ன? வாழ்வதற்கு ஒரு வீடு வேண்டும்!

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்


 

;