articles

img

உழைப்பின் விளைவே கலை....

“அழகுடையது கலை. ஆனால், அழகு மட்டும் கலையல்ல... அழகுபடுத்துவதுதான் கலை!”

- இப்படியாகத் தனது கட்டுரை ஒன்றைத் தொடங்குகிறார் எழுத்தாளர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். “கலையும் வாழ்வும்“ - எனும் தலைப்பில் இந்தக் கட்டுரை 1948 ஆகஸ்ட் 13 நாளிட்ட அண்ணாவின் ‘திராவிட நாடு’ பத்திரிகையில் வெளிவந்தது. நாகர்கோவிலில் நடந்த தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்தான் இந்தக் கட்டுரை. இந்தக் கட்டுரையில் கலைவாணர் மேலும் இப்படிச் சொல்கிறார்:“மாலை நேரம் கதிரவன் தன் ஒளியில் வானவீதியில் தங்க முலாம்பூசிய வண்ணமாகவே ஆழியை நோக்கி அதிவேகமாக மறையப்போகும் மனோகரக் காட்சிகண்ணையும் கருத்தையும் கவரும்அழகின் பரிமளிப்பு. ஆனால், இது கலையா?”

 - இப்படியொரு கேள்வியைக் கேட்கும் அவர் மேலும் சொல்கிறார்:“இந்தக் காட்சியை ஒரு சித்திரக்காரன் காண்கின்றான். புறக்கண்களால் மட்டுமல்ல. அறிவுக்கண்ணாலும் பார்க்கின்றான். சித்திரக்காரன் சிந்தையிலே இந்த அழகுக் காட்சி செவ்வையாகப் பதிகிறது. பின்பு விந்தையாக உருவகமாகிறது. சித்திரமாக வெளிவருகிறது. இங்கே கலை உற்பத்தியாகிறது. ஆகவே, கலையும் அழகும் ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கிறது.”

ஆக,  மனிதனின் மகத்தான சிருஷ்டிதான் கலை என்கிறார் கலைவாணர். ஆம்... அவரே கலைகளின் வாணர் அல்லவா? பொதுவாக நாம் எல்லோரும் அவரை ஒருநகைச்சுவை நடிகர் என்று மாத்திரம் கருதிக்கொண்டிருக்கிறோம். கூடுதலாக வேண்டுமானால் அவரை கலையில் அறிவூட்டிய ஒரு கலைஞனாக நாம் அறிந்து பெருமைப்பட்டிருக்கிறோம். ஆனால், அவர் எத்துணை மதிநுட்பம் வாய்ந்த அறிவுஜீவி, ஞானஒளி மிக்க மாமேதை என்பதை நம்மில் பலரும் அறிந்திருக்கவே இல்லை. எழுத்தாளர் கலைவாணரை, மேடைப்பிரசங்கி கலைவாணரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

தன்னுடைய இந்த உரையில் கலைவாணர் முன்வைக்கும் கலை பற்றிய கருத்துக்கள் கோட்பாட்டுத் தரம் மிக்கவையாக இருப்பதை இன்றைக்கு வாசித்தாலும் நம்மை வியக்கத்தான் வைக்கிறது. மனிதஉழைப்பால் விளைந்த தொழிலோடும் கலை என்பதற்கு என்ன தொடர்பு இருக்கிறது என்பதை இதில் விளக்குகிறார் கலைவாணர்.காட்சி என்பது கலை அல்ல... மாறாக, அது ஓவியனின் கைவண்ணத்தில் ஒரு ஓவியமாகப் படைக்கப்படும்போதுதான் கலை ஆகிறது என்கிறார் கலைவாணர் என்பதைமேலே கண்டோம். ஆக, ஒருஅழகுக் காட்சியானது கலையின் பிறப்பிற்கு உதவியாக இருப்பதுபோல மனித வாழ்வை வளப்படுத்தும் வகையிலும் அது பேருதவியாக அமைந்திருக்கிறது என்கிறார் கலைவாணர். இன்னும், வாழ்க்கையை வளம்செய்யும், மக்கள் மனப்பண்பை வளரச் செய்யும் பல்வேறு துறைகளிலும் கலைகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது என்றும் நிறுவுகிறார் அவர்.

“கடும் வெயிலில் கல்லுடைக்கும் தொழிலாளத் தோழன், காலவேகத்தில் கோபுரம் கட்டும் கலைஞனாகிறான். உளிகொண்டு வேலை செய்யும் ஒருவன், அம்மிகொத்தும் சாதாரணமான ஒருவன்நாளடைவில் தொழிலூக்கத்தினாலும் உயர் நோக்கத்தினாலும் கலையை விளக்கும் சிலையைச் செய்யும் சிற்பியாகின்றான். இதிலிருந்து கலை வளர்ச்சிக்கு தொழில் பெருக்கம் எவ்வளவு தூரம் தேவையாகவும், உதவியாகவும் இருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆகவே, கலையைப் போற்றுவது தொழிலைப் போற்றுவதாகும்.”

- என்று கலைவாணர் சொல்வதைக் கவனித்தால் இயற்கை, மனித உழைப்பு, மனிதனின் கலை ஆகியனவற்றின் தனித்தன்மைகளும் அவை ஒன்றோடுஒன்று கொண்டுள்ள இயல்பான தொடர்பும் மிகநேர்த்தியாக விளங்கும். “தொழில் வளர்ந்தால்தான் கலை வளரும். தொழிலாளர்கள் பெருகிய தேசத்தில்தான் கலைஞர்கள் தோன்றுவார்கள்.” - என்று அதனால்தான் அவர் மிக அழுத்தமாகச் சொல்கிறார்.

ஆக, உழைப்பின் விளைவே கலை என்பதை இந்தக் கட்டுரையில் கலைவாணர் 70 ஆண்டுகளுக்கு முன்னமேயே குறிப்பிட்டிருக்கிறார். வெறும் நான்காம் வகுப்புவரை மட்டுமேயான அவரது படிப்பு என்கிற  நிலையில், 1925 ஆம் ஆண்டு தொடங்கி 1933 முடிய நாடக வாழ்க்கையும், பிறகு 1934ல் தொடங்கி 1957ல் தான் காலமாகும்வரையில் சினிமா வாழ்க்கையுமாக 32 ஆண்டுகால கலைச் சேவையின் அனுபவத்தில் கலைவாணருக்கு ஏற்பட்டிருந்த கலை குறித்தான பார்வையும் ஞானமும் வியக்கவைக்கிறது. அதிலும் இந்த உரையை அவர்தனது 23 ஆண்டுகாலக் கலைவாழ்க்கையினூடாகவே வெளிப்படுத்திவிட்டார்.

“கலை வளருகிறது... களையும் வளர்கிறது” - என்று ‘நடிகன் குரல்’ எனும் ஏட்டில் அவர் எழுதியஇன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.“களைகளை நீக்கமுடியாதா? முடியும். எப்போது? கலைஞர்களின் சிந்தனையில் நித்தம் ஒரு புதுமை பூக்கும்போது!” - என்கிறார் அக் கட்டுரையில்.“கலைஞர்கள் தாங்கள் அணியும் ஆடையிலும், பிடிக்கும்பேனாவிலும், இன்னும் சில விஷயங்களிலும் புதுமையைத் தேடித்தேடி ரசிக்கிறார்கள். ஆனால், தங்களது கலைப் படைப்புகளில் மட்டும் புதுமையைத்தேட மறந்துவிடுகிறார்கள்.”

தங்களின் வாழ்க்கை வசதிகளைப் புதுக்கிப் பெருக்கிக்கொள்ளும் கலைஞர்கள் அதன்பொருட்டே பொருளீட்டுகிறார்கள். ஆனால், தாங்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் கலையில்புதுமையைப் புகுத்த முயலாததுமட்டுமல்லாமல், பழைமையைப் போற்றுவதையும் விடாது இன்றுவரையில் மேற்கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். கலைவாணர் காலத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அன்றைய கலையின் உள்ளடக்கமே புராண - இதிகாசக் கதையாடல்களாகத்தான் இருந்தன. சமூகக் கதையாடல்களும், அதில்அறிவுக்கு விருந்தாக முற்போக்கு - சமூகச் சீர்திருத்த அம்சங்களும் அரிதிலும் அரிதாகவே கையாளப்பட்ட காலம் அது. ஆனால் அந்தச்சூழலிலும் கலைவாணர் முற்றிலும் மாற்றி யோசித்தவராகவே, கலையை மக்களின் விழிப்புக்காகவும், அறிவு மேம்பாட்டிற்காகவும் தரமுயர்த்தியவராகவே திகழ்ந்தார்.

“நல்ல நல்ல கருத்துக்களை நாட்டுக்குச் சொல்லத்தக்க புனிதமான சாதனமே கலைதான் என்பதை மறந்துவிடுகிறார்கள்” - என்று அவர் அக் கட்டுரையில் தன் சக கலைஞர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் தயங்கவில்லை.“தங்களின் சுகபோக வாழ்வுக்கு உதவும் ஒரு சக்தியே கலைஎன்ற எண்ணம் பாவம் அவர்களை அறியாமலேயே அவர்கள் பால்உதித்துவிட்டது. அதனால் தமிழ்க்கலை பின்வாங்கி நிற்க நேரிடுகிறது. இதை இன்றைய கலைஞர்கள் உணர வேண்டும். எனக்குஅவர்கள் தந்திருக்கும் பெருமையினால் ஏற்பட்ட உரிமையினால் இப்படிப் பேசுகிறேன்!”- இப்படித் தெளிவுற மொழிந்தவர் கலைவாணர். காரணம் தனது கலையை அவர் எவ்விதத்தில் அணுகினாரோ அப்படியே பிற கலைஞர்களுக்கும் அதை வலியுறுத்தினார். அதாவது தனது எண்ணத்துக்கும் சொல்லுக்கும் ஏற்ப முதலில் அவரே நடந்துகாட்டினார். தான் நடந்துகாட்டியபாதையையே பிறருக்கும் பரிந்துரைத்தார். அடுத்தவருக்குத்தான் அறிவுரையும் போதனையும், நமக்கல்ல என்கிற சராசரி மனித குணம் அவரிடத்தில் எப்போதும் இருந்ததில்லை.

நூற்றுக் கணக்கான படங்கள்.அவற்றில் ஆகப் பெரும்பான்மையான படங்களில் தனது காதல் மனைவி டி.ஏ.மதுரத்துடன் ஜோடிபோட்டுக்கொண்டு நகைச்சுவையை வழங்கின தனித்துவம். அவற்றில் ஒவ்வொன்றிலும் ரசிகர்கள் சிரித்து மகிழ ஒவ்வொருவிதமான நகைச்சுவை. அதனூடாக அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்  நல்ல நல்ல கருத்துக்கள். மூடத்தனங்களுக்கு எதிராக, பழைமைச் சிந்தனைகளுக்கு மாறாக, கண்மூடி வழக்கங்களைச் சாடுகிறதாக இப்படித்தான் அமைந்தன அவரது தனித்துவமான நகைச்சுவைக் காட்சிகள், நகைச்சுவைப் பாடல்கள்.

தந்தை பெரியாரோடு அவருக்கிருந்த நெருக்கமும், காந்தியத்தின்மீது அவருக்கிருந்த மரியாதையும், பொதுவுடைமை இயக்கத்தோடு அவர் கொண்டிருந்த தோழமையும், அவரது உலகளாவிய இலக்கிய அறிதலும், அறிவுத் தேடலும், கலை அனுபவமும் அவரையொரு கம்பீரமிக்க கலை மேதையாகவே உருவாக்கியிருந்தது. அறிவார்ந்த நகைச்சுவைக் கலையை அவர் வழங்கியதற்கே தமிழ் ரசிகர்கள்மீது அவர் கொண்டிருந்த அளவற்றகாதலே - தீவிர நேசிப்பே காரணமாக இருந்தது. அந்தப் பேரன்பின் விளைவே ஈட்டிய பொருளெல்லாம் இல்லாதவர்க்கு ஈதலின் பொருட்டே என்று  நம்பி, அவ்வண்ணமே அவரை நடந்துகொள்ளவும் வைத்தது.

இத்தனைக் காரணங்களால்தான் நூறாண்டுகளைக் கடந்த நிலையிலும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்று அவர் பெயரை உச்சரிக்கிறபோதே அவரை வெறும் சிரிப்பு நடிகர் என்று மட்டும் குறுக்கிக் கருதாமல், அறிவார்ந்த ஞானம் மிக்க ஒரு பெரும் கலைஞனாக அவரை நமதுள்ளம் எண்ணியெண்ணிக் கொண்டாடுகிறது. இன்னும் பல காலம் கொண்டாடிக்கொண்டே இருக்கும்!

===சோழ.நாகராஜன்===

;