articles

img

வீதிக்கு வரும் 4 லட்சம் பீடித் தொழிலாளர்.... “வெற்றி நடை” போடும் எடப்பாடியின் தமிழகத்தில் அடித்தட்டு மக்களின் அவலம்....

“புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு” என்றாலும் நாட்டில் விவசாயம், நெசவுக்கு அடுத்தஇடத்தில் இருப்பது பீடித் தொழிலே”. தமிழ்நாட்டில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சென்னை மாவட்டங்களில் தொடங்கி சேலம், ஈரோடு, தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நகரம், கிராமம் என வித்தியாசம் இல்லாமல் குடும்பம்குடும்பமாக பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அடித்தட்டு மக்களின் ஆறாம் விரலாய் தோற்றமளிக்கும் பீடி தயாரிப்புத் தொழிலின் பின்னணியில், 90 விழுக்காடு பெண்களின் உழைப்பு இருக்கிறது.

பருவ நிலை, மண்ணின் தன்மை காரணமாக பீடிதயாரிக்கப் பயன்படுத்தும் ‘டெண்டு’ இலை தமிழகத்தில் பயிரிடுவதில்லை. மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகம் கிடைக்கிறது. உ.பி, சத்தீஸ்கர் என சில மாநிலங்களில் இருந்தும் அனுப்பிவைக்கப்படுகிறது. பீடி தயாரிப்பின் மூலப் பொருட்களான புகையிலையை கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து வாங்குகின்றனர்.பீடி உற்பத்தியில் செய்யது, காஜா, சந்திராக, கடா மார்க், சமத், எஸ், 100 பீடி கம்பெனிகள் தமிழகத்திலும்,கர்நாடகாவின் மங்களூரில் கணேஷ், கேரளத்தில் தினேஷ், மலபார், பாரத் நிறுவனங்கள் கம்பெனி வைத்துள்ளன. மேற்கு வங்கத்தில் ஷியாம் டுபாக்கோ,சீஜே டுபாக்கோ, படக் பீரீசும், மத்திய பிரதேசத்தில் பாபு தாஸ், மகாராஷ்டிரத்தில் வாக் ஹரி, சீஜே என பல்வேறு பெயர்களில் 13 மாநிலங்களில் கம்பெனிகள் உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக நெல்லையில் 27, வேலூரில் 13 பீடி கம்பெனியும் பிற பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக மொத்தம் 60 தனியார் கம்பெனிகள் இருந்தாலும் ஏகபோகம் மங்களூர் கணேஷ்தான். 

“கோரமுகமும்-சுரண்டலும்”
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பீடி சுற்றும்தொழிலில் 85 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், இலை பயிரிடுதல் மற்றும் இலையை பறிக்கும் ஆதிவாசி மக்கள், பீடி சுருட்டுதல், லேபிள் ஓட்டுதல் என பல்வேறு பணிகளிலும் 50 லட்சம் தொழிலாளிகள் என ஒட்டுமொத்தமாக ஒன்றரை கோடி தொழிலாளர்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனர்.

பீடித் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், பிஎஃப் (வருங்கால வைப்பு நிதி), இஎஸ்ஐ, போனஸ் போன்ற சட்ட உரிமைகளுக்காகவும் உழைப்புச் சுரண்டலை எதிர்த்தும் வேலூரில் இருந்து தில்லி நாடாளுமன்றம் வரைக்கும் நடைபயணம் சென்று தனி நபர் மசோதாவை கொண்டு வந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே.கோபாலன். அந்தக் காலத்தில் அவரது நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகுதான் சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது பீடித் தொழில்.பெரும்பாலான கம்பெனிகள் முறையாக சட்டஉரிமைகளை வழங்குவது இல்லை. தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதன் மூலம், வருங்கால வைப்பு நிதி விதிகளை முதலாளிகள்பலரும் மீறுகின்றனர். குடிசைத் தொழில், ஒப்பந்தமுறை என்ற பெயரில் முதலாளிகளின் தந்திரம் கம்பெனி சட்டத்தை ஓரங்கட்டியது. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோயின.தொழிற் சங்கங்களின் விடாப்பிடியான போராட்டம்வெற்றி பெற்றாலும் நலவாரியத்திலும் முறையான பதிவுகள் கிடையாது. பிஎப் நிதியைப் பொறுத்தவரை பல கம்பெனிகள், “எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை” என்ற மன நிலையில்தான் இருக்கின்றன.மறுபுறத்தில், குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் ஊதியம் நிர்ணயம் செய்தும், அதைக்கூட வழங்க முன்வராமல் அடம் பிடிக்கும் முதலாளிகள், கம்பெனிகளை மூடிவிடுவோம் என மிரட்டுகின்றனர். இப்படியாக உழைப்புச் சுரண்டலை மீண்டும் கொண்டுவந்துவிட்டனர்.

உதாரணத்திற்கு, கர்நாடக மாநிலத்தில் பல பத்தாண்டு காலமாக நடந்த சுரண்டலுக்குப் பிறகு,வெறும் 4500 ரூபாயை மட்டும் கூலியாக கொடுத்தனர். அதுவும் தொழிற்சங்கத்தின் போராட்டத்தால் கிடைத்தது. இது குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்றது. விசாரணையின்போது “வெறும் குறைந்தபட்ச கூலியைக் கூட கொடுக்க வாய்ப்பில்லை என்றால், அந்த தொழில் நாட்டில் இருப்பதற்கு தேவையே இல்லை”என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கர்நாடக அரசை கண்டித்ததும் குறிப்பிடத்தக்கது.பாஜக நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வரும் மத்தியப் பிரதேசத்தில், 1966 ஆம் ஆண்டின் குறைந்தபட்சக் கூலியை விட 23 சதவீதம்குறைவாக வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு 1000 பீடிகளுக்கு ரூபாய் 92 என்று சட்டக் கூலி மாற்றியமைக்கப்பட்டது. ஆனாலும், அது உற்பத்தியுடன் பிணைக்கப்பட்டதால் குறைந்த பட்சக் கூலிச் சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது.மற்றொரு மாநிலமான மகாராஷ்டிரத்தில் குறைந்தபட்ச சட்டக் கூலியோடு பிணைக்கப்பட்ட கூலி உயர்வு ஒரு போதும் கொடுக்கப்படவில்லை. மிகப் பெரிய பீடி உற்பத்தி மையமான சோலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த வேலை நிறுத்தங்கள், போராட்டங்களுக்கு பின்னரே 1000 பீடிக்கு 140ரூபாய் கூலி கிடைத்தது. மேற்கு வங்கத்தில் மம்தா அரசு பதவியேற்ற பிறகு சட்டக் கூலி என்பது அடியோடு ஒழிக்கப்பட்டது.

இத்தகைய பின்னணியில், பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதார பாதிப்புக் குறித்தும் தொழிலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பற்றியும் ஆய்வு செய்த தனியார் நிறுவனமொன்று 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், மாநிலங்களில் பீடி முதலாளிகள், தொழிலாளர் நலச் சட்டங்களை மதிப்பதில்லை என்றும் தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளில் ஒன்று கூலியுடன் கூடியவிடுப்பு என்பது தெரிந்திருக்கவில்லை என்பதையும்சுட்டிக் காட்டியிருந்தது. இத்தகைய தொழிலாளர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தருவதில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. 

சில்லரையில் நடந்து வந்த பீடி விற்பனையை தடை செய்ய அவசரச் சட்டத்தை கொண்டு வந்து “வெந்தப்புண்ணில் கொதிக்கும் எண்ணெய்யை” ஊற்றும் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு முட்டுக் கொடுக்கிறது.செஸ் வரி வசூல் மூலம் கிடைக்கும் நிதியில் பெரும்பகுதியை தொழிலாளர்களின் சுகாதாரம், மருத்துவம், குழந்தைகளின் கல்வி, வீடு கட்டும் திட்டங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் ஆகும். மக்கள் நலனில்எப்போதும் அக்கறை கொண்ட எந்த ஒரு அரசும் இதைத் தான் முதலில் செய்து கொடுக்கும். ஆனால் மோடி அரசோ ஜிஎஸ்டி மூலம் பீடித் தொழிலாளர்களையும் வஞ்சித்து வருகிறது.

தமிழ்நாட்டில் 7 லட்சமாக இருந்த பீடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 4 லட்சமாக சுருங்கி விட்டது. இவர்களின் ஒட்டுமொத்த நிலைமைகள் குறித்தும் இதிலிருந்து மீட்டெடுக்கவும் பீடி தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் பிரதமர் மோடி, துறையின் அமைச்சர், அரசு உயர் அதிகாரிகளுக்கு விளக்கமாகவும் விவரமாகவும் கொடுத்த கடிதம் வழக்கம்போல் “கிடப்பில்” வெற்றி நடை போடுகிறது!

“பாராமுகம்”
“உரலுக்கு ஒரு பக்கம்தான் இடி” ஆனால், பாஜக அரசின் சட்டத்தால் “மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி” என்பதாக பீடித்தொழிலுக்கு கடும்நெருக்கடி கொடுத்திருப்பது குறித்து பீடித் தொழிலாளர் சம்மேளத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் கூறுகையில்,“ சேம நல நிதியில்இருந்து வீடு கட்ட தற்போது வழங்கும் 40 ஆயிரம் ரூபாயைக் கொண்டு கான்கிரீட் வீடு கட்ட முடியவில்லை. அதை ஒரு லட்சமாக வழங்க வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த ஓய்வூதியம் குறைக்கப்பட்டதை உயர்த்த வேண்டும். 60 வயதை கடந்த பீடித் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.பீடி சுற்றும் பணிக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரி ஊதியம், பஞ்சப்படி நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும். புகைப்பிடித்தல் தடை சட்டத்தின் கீழ், பீடி மற்றும் சுருட்டுக் கட்டுகளின் மீது, தேள் படம் போடும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை நடத்துவதாகவும் கூறினார்.

நிரம்பும் கஜானா!
ஒரு காலத்தில் சோறுபோட்ட பீடித் தொழில் இப்போது முடங்கிப் போனது பற்றி பீடித் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரனிடம் கேட்டபோது,“புகை பிடிப்பதை தடை செய்யும் அரசின் கொள்கைக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் கேட்பது உத்தரவாதமான மாற்று வேலை. தொழில் துவங்க நிபந்தனையற்ற வங்கிக் கடன். கேரள அரசை போன்று மாதம் 3,500 ரூபாய்ஓய்வூதியம். ஆனால், இதை கொடுக்க இந்த அரசுகளுக்கு மனமில்லை.காரணம், 9 சதவீத பயன்பாடான புகையிலையை பயன்படுத்தி தயாரிக்கும் சிகரெட்மூலம் ஆண்டுக்கு 43 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவுக்குச் செல்கிறது. மீதமிருக்கும் 91 சதவீத பயன்பாடான பீடி உற்பத்தியில்அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கிறது”என்றார்.

வழிகாட்டும் கேரளா
மாற்று வேலைக்கான உத்தரவாதமும் தொழிலும் இல்லாமல் பொது இடங்களில் புகைபிடிப்பது 2003 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்டது. இதனால், காலம்காலமாக பீடித் தொழில் 30 முதல் 40 சதவீதம்சரிவை சந்தித்தது. பீடித் தொழிலாளர் நலனுக்காகவே கேரள அரசு கூட்டுறவு மூலம் பீடி தயாரிப்பை மேற்கொண்டது. உயர் அதிகாரி ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் தினேஷ் பீடி கம்பெனி என்ற பெயரில் இது செயல்பட்டு வந்தது. மத்திய அரசின் சட்டத்தால் அரசின் அந்த நிறுவனம் உடனடியாக மூடப்பட்டது. இதில் வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வழங்கி காப்பாற்றியது இடது முன்னணி அரசு.அதைத்தான் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்க்கிறோம். கலெக்டர்அலுவலகத்தில்தான் வேலைகொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ரேஷன் கடை, கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் படிப்புக்கு ஏற்றவாறு வேலை வழங்கினால் போதும் என்கின்றனர் தொழிலாளர்கள். வெற்றிநடைபோடுவதாக தங்களுக்கு தாங்களே விளம்பரம் செய்து கொள்ளும் அதிமுக அரசு, ஒரு வேலை சோற்றுக்கும் வழியின்றி கண்ணீரால் புகைந்து கொண்டிருக்கும் பீடித் தொழில் குடும்பங்களின் கண்ணீர்த் தீயில் கருகுவது உறுதி!

கட்டுரையாளர் : சி.ஸ்ரீராமுலு

;