திருவள்ளூர் மாவட்டம் வலுதம்பேடு கிராமத்தில் எட்டியம்மனை அதே கிராமத்தில் வாழ்கிற தலித் மக்கள் வழிபட சாதியின் பெயரால் தடை விதிக்கப்பட்டது. அரசு தரப்பு மேற்கொண்ட சமாதான முயற்சி தோல்வி கண்டது. வேறு வழியின்றி அரசு நிர்வாகம் கோவிலை மூடி சீல் வைத்தது.
வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட மக்களைச் சந்திக்க திருவள்ளூர் மாவட்ட சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் சென்றனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட தலித் குடியிருப்பு அது. கூரை வீடு ஒன்று கூட இல்லை. படித்த இளைஞர்கள்.
கல்வி, பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும் சாதி ஆதிக்கம் அவர்களை இழிவு படுத்துகிறது. எட்டியம்மனை தரிசிக்க வேண்டும் என்கிற மூத்தோர்களின் விருப்பத்தை இந்த ஆண்டும் நிறைவேற்ற முடியவில்லையே என்று கலங்கிய இளைஞர்கள் இந்தக் கருமத்துக்கு தான் ஊரோட கிறித்துவ மதத்திற்கு மாறிடலாம்ன்னு சொன்னா கேட்க மாட்டீங்கிறீங்களே என ஆவேச மடைந்தனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறியதற்கு இந்த சாதி இழிவு தான் பிரதானமான காரணம்.
இந்திய துணைக்கண்டம் முழுவதும் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதனையே எடுத்து ரைக்கிறது. யூதன் என்றும் கிரேக்கன் என்றும் இல்லை. அடிமை என்றும் சுயாதீனன் என்றும் இல்லை.
நீங்கள் எல்லாரும் ஒன்றாய் இருக்கிறீர்கள் என்று இரு கரம் விரித்து அழைக்கிற ஏசுவின் அரவணைப்பில் நம்பிக்கை கொண்டு தலித் மக்கள் கிறித்துவத்தை ஏற்றுள்ளனர் என்பதே வரலாற்று உண்மை. திருச்சபைகள் இங்கு சாதி இல்லை என பகிரங்கமாகவே அறிவித்துள்ளன. ஆனால் இந்திய மண்ணில் உருவான இந்து மதத்தின் பிரிக்க முடியாத கூறான சாதியம் கிறித்தவம், இஸ்லாம் உள்ளிட்ட மதங்களையும் விட்டு வைக்கவில்லை. அதன் மீதும் சாதியின் நிழல் படிந்துள்ளதை திருச்சபைகளே ஏற்று அறிவித்துள்ளன. உள்ளூர் கோவில்களில் இருந்த சாதி இறுக்கம் திருச்சபைகளில் ஒரளவு தளர்ந்து இருப்பது உண்மை தான். ஆனால் வழிபாடு மட்டும் வாழ்க்கை இல்லையே.
குடியிருப்புகளில் பொது என இருக்கிற எல்லாவற்றிலும் இந்து தலித்துகளுக்கு இருக்கிற அனைத்து பாகுபாடுகளும், தீண்டாமைக் கொடுமைகளும் தலித் கிறித்துவர்களுக்கும் தொடரத்தானே செய்கிறது.
பொருளாதாரப் புறக்கணிப்புகளும், அவமதிப்பு களும் கொண்ட இந்திய சாதியத்தின் விஷ நாக்குகள் தலித் கிறித்துவர்களையும் விட்டு வைப்ப தில்லை என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா? கிராமங்களில் நிலம் வைத்திருக்கிற சில குடும்பங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலி லும், அவர்களது நிலங்களில் வேலை செய்யும் தலித் கிறிஸ்தவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இருக்கிறார்கள் என்பது அநீதியின் உச்சம் தானே?
மறுக்கப்பட்ட சமூக நீதி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 341ஆவது பிரிவின்படி குறிப்பிட்ட சாதிகள், இனங்கள், குழுக்களை பட்டியல் சாதியில் சேர்ப்பதற்கான வழிமுறையை குடியரசு தலைவர் வழங்க முடியும். இந்த அதிகாரத்தின்படி இந்து தலித்துக்கள் மட்டும் தான் பட்டியல் சாதியினர் என்று குடியரசுத் தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தார். இதனால் பிற மதத்தை தழுவிய தலித்துகள் பெரும் அநீதிக்கு உள்ளாயினர்.
இந்த அநீதியை எதிர்த்து சீக்கிய மதத்தை தழுவிய தலித்துகள் மாஸ்டர் தாராசிங் தலைமையில் வலுமிக்க போராட்டத்தை நடத்தினர். இதன் விளைவாக 1956 இல் சீக்கிய மதத்தை தழுவிய தலித்துகளை பட்டியல் சாதியினர் பட்டியலில் இணைத்திட சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. பௌத்த மதத்தை தழுவிய தலித்துகளின் நியாயமான அழுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையிலான அரசு பௌத்த மத தலித்துகளை பட்டியலினத்தில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.
ஆனால் இன்று வரை கிறித்துவம் மற்றும் இஸ்லாம் மதத்தை தழுவிய தலித் மக்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளனர் என்பது பெரும் துயரம். பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி, வேலை வாய்ப்பு தலித் கிறித்துவர்களுக்கு மறுக்கப்படுகிறது.
தனித் தொகுதியில் போட்டியிடும் அரசியல் அதிகாரம் உரிமை மறுக்கப்பட்டது. பணியிலும் தேர்விலும் வயதுவரம்பு ஆகியவற்றில் தலித்துகளுக்கான உரிமை தலித் கிறித்துவர்களுக்கு இல்லை. தலித்துகளுக்கு அரசு வழங்கும் மானியத்துடனான கடன்கள் உட்பட எதுவும் தலித் கிறித்துவர்களுக்கு இல்லை.
எத்தனை ஆணையங்கள்?
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு களத்தில் மட்டுமல்ல, நீதிமன்றத்திலும் போதிய ஆதாரங்களை முன்வைத்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த உரிமையை மீட்பதற்காக திருச்சபைகள் திரட்டிய ஆவணங்களே போதுமானவை என்கிறார் நீதியரசர் ராஜேந்திர சச்சார் கூறுகிறார். மண்டல் ஆணையம், காக்கா கல்லேல்கர் ஆணையம், சிறுபான்மை நல ஆணைய அறிக்கை (1981 -82), ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், கேரளாவில் பிற்படுத்தப்பட்டோர் குறித்த குமாரபிள்ளை ஆணையம், 1969 இல் அமைக்கப்பட்ட இளையபெருமாள் ஆணையம் என பல்வேறு ஆணையங்களின் தரவுகள் இக் கோரிக்கை நியாயமானது என்கிறது.
இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 அக்டோபரில் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத மற்றும் மொழிச் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களை எஸ்.சி பட்டியலில் இணைக்க திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்தது. இப் பரிந்துரை அரசியல் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. 2004 இல் பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம் மீண்டும் இதனை வலியுறுத்தியது. மதம் மாறினால் அவர்கள் படுகிற சமூக பொருளாதார இழப்புகள் தொடர்கின்றன என்று ஆணையம் வாதிட்டது. அதே கருத்தை 2008 இல் அமைக்கப்பட்ட ஜகன்நாத் மிஸ்ரா ஆணையமும் வலியுறுத்தியது.
தொடர் போராட்டங்களும் வாசல் திறப்பும்
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, பீஹார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் என பல்வேறு காலகட்டங்களில் மாநில சட்டமன்றங்களில் ஆதரவு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 13 முதலமைச்சர்கள் ஆதரவு கடிதங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்பி உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, ஜனதா தளம் போன்ற தேசிய கட்சிகளும் திமுக, அதிமுக, தெலுங்கு தேசம் போன்ற மாநில கட்சிகளும் இக் கோரிக்கைகளுக்கு தங்களுடைய முழு ஆதரவையும் அளித்துள்ளனர்.
இந்நிலையில் 2022 அக்டோபரில் இதே கோரிக்கையை பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. ஆணையத்திற்கு தேவையான எதுவும் வழங்கப்படவில்லை என்பது கொடுமை.
பொது நீரோட்டத்திற்குள் இணைய வேண்டிய கோரிக்கை தலித் அருந்ததியர்களின் 3% உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டம் பல ஆண்டு காலம் தலித் அருந்ததியர் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மை தான். ஆனால் 2007இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனைக் கையில் எடுத்து நடத்திய போராட்டங்கள் பொது நீரோட்டத்திற்குள் இக் கோரிக்கையை கொண்டு வந்து சேர்த்தது.
கோரிக்கை வென்றது. தலித் அருந்ததியர் மக்களுக்கு வாசல்கள் திறந்தன. அதேபோன்று ஒருபுறத்தில் தலித் கிறிஸ்தவர்களின் போராட்டம் நடைபெற்று வந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இப்போராட்டத்தில் இணைந்து இயங்கி வருகிறது. பொது நீரோட்டத்திற்குள் இணைக்கும் பெரும் முயற்சி இது.
இது தலித் கிறிஸ்துவர்களின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களின் பிரச்சனை என்றே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முழக்கமிடுகிறது. தலித் கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, இதர பகுதி உழைக்கும் மக்களையும் இக் கோரிக்கையின்பால் ஒன்று திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம். கோரிக்கையை வென்றெடுப்போம்.
ஆகஸ்ட் 23இல் செங்கல்பட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் எஸ்.சி. பட்டியலில் இணைத்திடக் கோரி தலித் கிறித்துவர்கள் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுகிறது.
கட்டுரையாளர் : துணைப் பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி