articles

img

அழிவின் விளிம்பில் அஸ்ஸாமின் மாநிலப் பறவை

     அஸ்ஸாம் மாநிலத்தின் பறவையான வொயிட் விங்க்டு வுட் டக் (White winged wood duck) அழியும் ஆபத்தில் உள்ளது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இவை எழுப்பும் கர்ண கடூரமான ஓசை காரணமாக மாநில மக்கள் இதை டியோஹான் என்று அஸ்ஸாமிய மொழியில் அழைக்கின்றனர். இதன் பொருள் பேய்ப்பறவை அல்லது ஆன்மீகப் பறவை. இந்திய வன உயிரி அறக்கட்டளை (WTI), அஸ்ஸாம் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இவை இந்தியாவின் கிழக்கு இமாலயப் பகுதிகளில் (IEH) அதிகம் வாழ்கின்றன. ஆனால் காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் இவை இன்று இன அழிவைச் சந்திக்கின்றன. உலகம் முழுவதும் இன்று இப்பறவைகள் வெறும் 800 மட்டுமே உள்ளன.

முதல் எச்சரிக்கை

    இவற்றில் பெரும்பாலானவை அஸ்ஸாம், அருணாசலப்பிரதேசம், மணிப்பூர் உட்படும் இந்தியாவின் கிழக்கு இமாலயப் பகுதியில் வாழ்கின்றன. 1994ல் இவை முதல்முதலாக இன அழிவை சந்தித்ததாக சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) அறிவித்தது. இதைத் தொடர்ந்து இப்பறவை 2003ல் அஸ்ஸாமின் மாநிலப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் இவை ஆபத்தை எதிர்நோக்கி யுள்ளன. ஆண்டிற்கு சராசரி 2 முதல் 30 டிகிரி செல்சியர்ஸ் சூழ்நிலையே இவை வாழ உகந்த வெப்பநிலை. சாதகமான சூழல் மற்றும் ஆண்டிற்கு 1000 முதல் 100 மில்லிமீட்டர் மழை அவசியம். மேகாலயா தவிர மற்ற எல்லா வடகிழக்கு மாநிலங்களும் காலநிலை மாற்றத்தினால் பெரிஅ அளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

   வடகிழக்கு மாநிலங்களை உடைய நாடுகளின் எல்லையோரப் பகுதிகளிலும் இவை  வாழ்கின்றன. இதில் பூட்டானும் அஸ்ஸாமும் பகிரும் எல்லைப்பகுதிகளில் இவை கூடுதலாகக் காணப்பப்டுகின்றன.  இப்பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை, மழையளவு போன்றவை இதற்குக் காரணம்.

  வாழிட இழப்பு

   வாழிட இழப்பு இவற்றின் அழிவிற்கு மற்றொரு முக்கியக்காரணம். இவை ஆபத்தில்லாமல் வாழக்கூடிய அஸ்ஸாமில் 436.61 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள பகுதி 2070ஆம் ஆண்டுடன் அழியும் ஆபத்து உள்ளது என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். வேட்டையாடல், முட்டைகளை சேகரித்தல் போன்றவை இவற்றின் வாழ்வை மேலும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது.

   இந்திய வன உயிரி அறக்கட்டளை 2018 முதல் 2020 வரை நடத்திய ஆய்வுகளில் இருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளது. இப்போது இவை இந்திய வன உயிரி சட்டத்தின் முதல் பிரிவில் இன அழிவை சந்திக்கும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கூவும் குயிலையும் கொஞ்சும் கிளியையும் பாடும் பறவைகளையும் அழித்து மனிதன் மட்டும் இந்த பூமியில் எவ்வாறு நிம்மதியாக வாழமுடியும்?