articles

img

விதைகளிலும் கதைகளிலும் சாமானிய மனிதர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன்

        தனது படைப்புகளுக்கு முற்போக்கு முகாமை தாண்டியும் ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் கந்தர்வன். தனது கவிதைகளிலும் கதைகளிலும் சாமானிய மனிதர்கள் நொம்பலப்படுவதை அம்பலப்படுத்திய கந்தர்வன், நேரடியாக பேசும் கவிதை களுக்கு சொந்தக்காரர்.  

     ஒரு மளிகைக் கடை உதவியாளராக பணியை தொடங்கிய வர் தமிழக அரசின் கருவூலத்துறையின் மாவட்ட அலுவல ராக இருந்து ஓய்வு பெற்றவர். அழகியலும் சமூக அக்கறை யும் ஊடும்பாவுமாக கொண்டு தமது சிறுகதைகளை நெய்த வர். மீசைய முறுக்கி சிங்கம் போல் இருந்து தொழிற்சங்க மேடைகளில் உரிமை குரலை உரத்துப் பேசியவர்.

      இப்படி பல பரிமாணங்களை பெற்ற ஜி நாகலிங்கம் 3.2.1944இல் தாக பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற ஊரில் பிறந்தவர். பணியின் பொருட்டு புதுக்கோட்டைக்கு வந்து அரசு அலுவலகங்களில் உலவிய உண்மையான மனிதர்களை சாகா வரம் பெற்ற இலக்கிய மனிதர்களாக ரசவாதம் செய்தவர்.

      1969 சென்னையில் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் ஒரு பார்வையாளராக கலந்து கொண்டு அங்கு நடந்தவற்றை பருந்துப் பார்வை பார்த்து கண்ணதாசன் இதழில் கட்டுரை எழுதியபோது அழகின் காதலன் என்ற பொருள்படும் கந்தர்வன் என்ற புனைப்பெயர் கொண்டு எழுதி இலக்கிய வாழ்வை தொடங்கி அதிர்வுகளை ஏற்படுத்தினார். 

     கிழிசல்கள், மீசைகள், சிறைகள் ஆகிய கவிதை தொகுப்பு களையும், பூவுக்கு கீழே சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன், அப்பாவும் நானும் ஆகிய சிறுகதை தொகுப்பு களையும் தந்து தமிழ் கூறும் நல் உலகை தம் பக்கம் திருப்பினார். சுப மங்களா ஏட்டில் எழுதிய காவடி குறு நாவல் செய்யுள் நேர்த்தியோடு வெளிவந்து சிலாகிக்கப் பட்டது. 2015இல் பாரதி புத்தகாலயம் அவரது அனைத்து கவிதைத் தொகுப்புகளையும் தொகுத்து கந்தர்வன் கவிதைகள் என்று முழு தொகுப்பாக வெளியிட்டது தமிழுக்குக் கிடைத்த கொடை. 

பனியில் நனைந்தபூ...

     கந்தர்வன் தனது கவிதைகளை விடவும் சிறுகதை களில் தான் உயரத்தைத் தொட்டார் என சிலர் எழுதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் கவிதை உலகிலும் அவருக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. தனது உடையை போலவே நேர்த்தியான கவிதை நடையைக் கொண்டிருந்தவர் கந்தர்வன்.

      காலைப் பொழுதின் சாம்பல் நிறம் ஒரு கவிதை. கண் மலரை போல் பனியில் நனைந்த பூ ஒரு பசுங்கவிதை என்று பார்க்கும் இடத்தில் எல்லாம் கவிதைகளை கொய்து தந்த கந்தர்வன் அங்கதச் சுவை நிறைந்த அழகிய கவிதைகளை பழகிய வார்த்தைகளில் பதிந்து தந்தவன். ஆரியபட்டா வானத்தை கிழித்தது அணுகுண்டு சோதனை பூமியை கிழித்தது அரைக்கை சட்டைகள் கிழிவது மட்டுமே நெஞ்சில் இருக்கிறது என்று தேசத்தின் கிழிசல்களை படிப்பவர்களின் மனசில் தைக்கும்படி எழுதியவர்.

     புரியாமல் எழுதுவது தான் சிறந்த கவிதை என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கும் போது வினை புரியாமல் இருந்தால் அது என்ன கவிதை என்று கேட்டவர் கந்தர்வன். நல்ல கவிதை என்பது எளிதில் கடத்தி போல் செயல்பட்டு உணர்வுகளை கடத்த வேண்டும் என்பதை புரிந்து எழுதியவர் கந்தர்வன்.

ஒரு டீயின் விலை 9 உயிர்

     படைப்பாளியின் அனுபவச் சூட்டை அப்படியே வாசிப்பவரின் மனசிற்கு மாற்றி விடும் வசியம் தெரிந்தவர்.  

பொது கிளாசில் டீ கேட்க  

தனி கிளாசில் டீ கொடுக்க

 ஒரு டீயின் விலை

 9 உயிர்கள் என்று  

விலைவாசி உயர்ந்து கிடக்கிறது

என்ற அவரது கவிதை தீண்டாமைக் கொடுமையை நச்சென்று சொல்கிறது.

பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்திடுதல் முயற்கொம்பே என்றான் பாரதிதாசன் அவனைப் போலவே ஒரு கருப்பு பட்டாம்பூச்சி முகத்தில் வந்து அமர்ந்தது போல அடர்த்தியாய் மீசை வைத்திருந்த கந்தர்வன் மண்ணடிமை தீர்ந்த பின்னும் பெண்ணடிமை தொடர்வதை,  

“தலையில் பூவிலங்கு

 கையில் பொன்விலங்கு  

காலில் வெள்ளி விலங்கு

சுவாசத்தடைக்கு மூக்கில்

கல் விலங்கு ஒவ்வொரு மூச்சிலும்

 அவள் விலங்குகளை நுகர்கிறாள்”

என அனைவருக்கும் விளங்கும்படியாக உண்மையைச் சொன்னார்.  

புதிய பார்வை பத்திரிகையில் வெளியான பேட்டி ஒன்றில், பந்தலில் கொடி போல சுருள் சுருளாக மேலே வந்து ஒன்றுக்கும் மேற்பட்ட தலங்களில் மனசைப் பற்றி பிடி போட்டுக் கொண்டே போக வேண்டும். அந்தக் கொடியில் சின்ன ஒரு காயாவது உதயம் என்பது கவிதைக்கு உத்தமம் என்று கவிதை பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்தவர் கந்தர்வன். 

இங்கிதமாய் அங்கதம்

       “என் வீட்டில் இன்று

200 பவுன் நகை கொள்ளை போனது  

ஏது இவ்வளவு நகைகள் எல்லாம் என்

மனைவிக்கு என் மாமனார்

போட்டவை  அவ்வாறெனில் இன்று நடந்தது மூன்றாவது கொள்ளை”

என யோசிக்கையில் விரியும் கவிதை சொல்லி நம் மனதை கொள்ளை கொள்கிறார்.  கவிதைக்குள் வன்மை என்கிற குணத்தை பதிவு செய்த சில கவிஞர்களில் ஒருவர் கந்தர்வன் என்கிறார் புதுக்கவிதை விமர்சகர் பாலா.

“விதம் விதமாய்     

மீசை வைத்தோம்

     வீரத்தை எங்கோ   

 தொலைத்து விட்டோம்”

       போன்ற கவிதைகளை படிக்கும் போது அது உண்மைதான் என்பதை நம்மால் உணர முடிகிறது. “வரம் தர வேண்டும் என்று தான் தேவதைகளை அழைக்கிறோம். அவர்கள் சபித்து விட்டுப் போனால் எப்படி இருக்கும் வளமான வாழ்க்கை தரும் என்று நம்பிய சுதந்திரம் இதம் தரவில்லை. அந்த உண்மையை நீர்வளம் இருந்தும் நிலவளம் இருந்தும் கேவலம் தானே கிடைத்தது ‘நமக்கு’ என்று உரக்கச் சொல்கிறார் ஊருக்கு.

     ஒரு கரண்டி மாவில் ஊரெல்லாம் தோசை என விடுகதை போட்டு சுவாரஸ்யம் கூட்டியவர்கள் நமது பாட்டிமார்கள். அந்த பாட்டியின் தட்டுக் கூடையில் இருந்த வார்த்தைகளை எடுத்து தன் கவிதைகளில் பதியண் போட்டுத் தந்த கந்தர்வனின் நவீன கவிதை விடுகதை போல் அமைந்து நம்மை மயக்குகிறது.

மிக உயர்ந்தவன் யார்?

      இந்த தேசத்திலேயே மிகவும் உயர்ந்தவன் கிராம வாசியா நகரவாசியா இல்லை விலைவாசி என்ற கவிஞரின் வரிகளில் இருக்கும் பகடி படிப்பவரின் விழிகளை விரிய வைக்கும். மிக உயர்ந்த விஷயங்களை பேசும் கவிஞரின் மனசு சில நேரங்களில் ஒரு குழந்தையை போல குதியாட்டம் போடும். “பூமி ஒரு பைத்தியம். ஏனெனில் அது தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது” என்பது போன்ற வரிகளில் கந்தர்வனின் பிள்ளை மனசு பேசுகிறது. “நிழல் தரும் இதற்கு நிழல் தர யாரோ என பரந்து நிற்கும் மரம் ஒரு பசுங்கவிதை” என்ற கந்தர்வனின் கவிதைகளை படிக்கும் போது உப்பை போல் எளிமையானதும் வைரத்தை போல் உறுதியானதுமான கவிதைகளை தர இவர் போல் இனி யாரோ என்கிற ஏக்கம் நெஞ்சில் படர்கிறது.  

      தனது கம்பீரக் குரலில் கவியரங்குகளில் மக்கள் மனதில் ஈர்க்கும் படியான கவிதைகளைச் சொன்ன கந்தர்வனின் கவிதை குரல் காற்றில் கேட்டுக்கொண்டே தான் இருக்கும்.  

      அங்கொன்றும் இங்கொன்றுமாய் அது என்ன தேசியமயம். இந்த தேசத்தையே நாம் தேசியமயமாக்குவோம் என்கிற அவரது தத்துவ வரிகளை தந்த வித்தக விரல்கள் பாராட்டுக்குரியது.