articles

img

கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய மாடல்....

என்ன விலை கொடுத்தேனும் அதிகாரத்தை நோக்கி முன்னேறுவது என்ற நிலை பரவலாய் இருக்கும் தேசம் நம்முடையது. ஆனால் அதையும் தாண்டிய மனிதர்களின் மீதான அன்பும், அக்கறையும் கம்யூனிஸ்டுகளைத் தவிர வேறு எவருக்கும் இருந்திட வாய்ப்பில்லை. இது பெயரளவில் அல்ல; ஒவ்வொரு தனிமனிதனின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கிறோம் என்கிற உன்னத அரசியலின் உருவம். அத்தகைய உன்னத அரசியல், கேரளத்தில் மிளிர்வதைக் காண்கிறோம்.

நம்பிக்கை எங்கிருந்து வரும்? 
தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் மிக மோசமான முறையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உச்சமடைந்துள்ளது. இப்பெருந்தொற்றுக்கு மோடி அரசு தனது அறிவியல்பூர்வமற்ற சிந்தனைகளால் மொத்தம் இரண்டு லட்சம் குடிமக்களை இரையாக்கி இருக்கிறது. இதில் கடந்த இரண்டு வாரங்களாக நாடெங்கும் கேட்கும் ஓலம் நம்மைமரணத்தின் விளிம்பிலேயே கொண்டு நிறுத்தி இருக்கிறது. நாம் மீண்டு விடுவோம் என்கிற நம்பிக்கை ஒருவரது மனதிற்குள் உருவாகும் போது தான் அவரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பில் அவர் விரைவாக மீளமுடியும். இது தனிநபர்களின் மனநிலையைச் சார்ந்தது.ஆனால் இது போன்ற ஒரு பெருந்தொற்று உலகத்தையே சூறையாடும் போது, ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை எங்கிருந்து உருவாகும். அதை யார் ஏற்படுத்துவது? ஏன்இப்படியான பெருந்தொற்றுக் காலத்தில் அரசுகள் விதிக்கக்கூடிய கடுமையான ஊரடங்குகளை தங்களின் வாழ்வே அழியும் நிலை வந்தாலும் மதித்து பின்பற்றுகிறார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்குமான பதில்கள் மிக முக்கியமானவை. 

ஒரு மனிதன் அரசின் மீது வைக்கும் நம்பிக்கை எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் மனிதர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசு தனி மனிதனிடம் உருவாக்கும் நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்? குறிப்பாக பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகளில் மக்கள் நலனே முதன்மைப் பங்கு கொண்டதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஏனெனில் ஒரு அரசு கொடுக்கும் நம்பிக்கை தான், மக்களை, எப்படியான நோய்த்தொற்று தாக்கினாலும் அதிலிருந்து மீள முடியும் என்கிற பெரும் நம்பிக்கையை உருவாக்கும். ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு அதற்கான சிறு வழியைக் கூட ஏற்படுத்த முனையவில்லை என்பது தான் கடந்த இரண்டு வாரங்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலைக்கு காரணம். 

கம்யூனிஸ்ட்டுகள் அளித்த நம்பிக்கை
இந்தியாவில் மற்ற எந்த ஆட்சியாளர்களையும் விட இந்த பெருந்தொற்றுக் காலத்தில், அநேகமாக அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நாட்களைத் தவிர்த்து, தினசரி ஊடகங்களைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி முன்னேற்பாடுகளையும், மருத்துவத்தின் வழியையும் வெளிப்படையாக மக்களுக்கு அறிவித்துக் கொண்டே இருந்த ஒரே மாநில முதல்வர்கேரளத்தின் பினராயி விஜயன் மட்டும் தான் என்றால் மிகையல்ல. மொத்த கேரளமும் நம்பிக்கை பெற்றதற்கானமுக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று. 

இன்று வரை உள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோய் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது கேரளம். கேரளத்தின் மொத்த மக்கள் தொகை சுமார் மூன்றரை கோடி. அதில் கேரள அரசு இதுவரை செய்துள்ள பரிசோதனைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒன்றரைக் கோடிக்கும் அதிகம். இது மக்கள் தொகையில் சுமார் 50 சதவீதம். வேறு எந்த மாநிலத்திலும்இந்த விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வில்லை. செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில்பத்து இலட்சம் பேரில் 41, 576 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது.  

பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்படுகிற பரிசோதனைகளை இத்தோடு ஒப்பிட வேண்டியுள்ளது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 22.5 கோடி. அங்கே இதுவரை எடுக்கப்பட்டிருக்கிற பரிசோதனைகளின் எண்ணிக்கை சுமார் 4 கோடி . இது அந்த மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் குறைவு. அங்கே பத்து லட்சம் பேரில் 5125 நோய்தொற்று உறுதிபடுத்தப்படுகிறது. கேரளத்தின் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது, உத்தரப்பிரதேசத்தின் எண்ணிக்கையுடன் ஒப்பீட்டளவில் 8 மடங்கு அதிகம். இந்தியாவின் பரப்பளவிலும், மத்திய அரசின் அதிகாரத்திற்கு மிக நெருக்கமான இடத்திலும் இருப்பது உத்தரப்பிரதேசம். ஆனாலும் அங்கே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடக்கும் காட்சிகளை நாடேபார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அங்கே 17 கோடிக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்படாமல் இருக்கும் நிலையில் நிலைமை இன்னும் தீவிரமானால் அங்கே என்ன நடக்கும் என நினைத்தாலே நமக்கு நடுங்குகிறது. 

மற்றொரு புறம், கேரளத்தின் மக்களில் 21 சதவிகித (68,47,062) மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஒரு மாநிலம் அதிகபட்சமாக தடுப்பூசி எடுத்துக்கொண்டது. இதுவே, தினசரி சுமார்  30,000 க்கும் மேற்பட்ட தொற்று கேரளத்தில் உறுதி செய்யப்படும் நிலையில் அங்கே காணும் இறப்பு விகிதம் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் என்பது தான் இப்பெருந்தொற்றினை கேரளம் எப்படி அறிவியல் பூர்வமாக அணுகி இருக்கிறது என்பதற்கான சாட்சியம். 

பொதுவாக அரசினை அமைக்கும் அரசியல் இயக்கங்கள் செயல்படுத்த நினைப்பவற்றை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வலுவான, மட்டம் வரையிலான பெரும் கட்டமைப்பு மிக மிக அவசியம். இந்தியாவின் மற்ற மாநிலங்களின் கட்டமைப்புகளை விட கேரளத்தின் வலுவான மருத்துவக் கட்டமைப்பே அவர்களின் முதலீடு. சேவைத்துறைகளில் எல்லாம் தனியார்மயமும், தாராளமயமும் அமல்படுத்தபட்டது பொது மருத்துவத்தை எவ்வளவு மோசமாக்கி உள்ளது என்பதற்கான உதாரணம் தான் நிலைமை மோசமாக உள்ள மற்ற மாநிலங்கள். 

தங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை கேரள அரசு வழங்கினாலும் , தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட கேரள மக்கள் தாங்களாகவே முன்வந்து கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அதற்கான பணத்தினை அனுப்பி வைக்கும் பேரியக்கத்தினை நடத்திக் கொண்டிருக் கிறார்கள். இது தான் அரசு மக்களுக்கும் - மக்கள் அரசுக்கும் அளிக்கும் நம்பிக்கையின் அடையாளம். 

மற்றொரு உதாரணம் மதுரை
கம்யூனிஸ்ட்டுகளே மக்களின் நம்பிக்கை என்பதற்கு மற்றொரு சாட்சியாக மதுரை உள்ளது. மதுரை மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் பெருந்தொற்றுக்கால செயல்பாடுகள் தான் அந்த நம்பிக்கை. கடந்த முதல் அலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக உணவு வழங்கிய அன்னவாசல் திட்டம் துவங்கி, முதல் ஊரடங்கில் மக்களின் அன்றாடத் தேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்துடன் ஒன்றுபட்டு நின்று மதுரை மக்களுக்கான திட்டமிடுதலை உருவாக்கியது மிக முக்கியமானது. மக்களின் வீடுகளைத் தேடி காய்கறித் தொகுப்பினை கொண்டு சென்றதில் துவங்கி, காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது வரை நடந்த பணிகள் ஏராளம்.

அநேகமாக மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியினை கொரோனா தேவைகளுக்கு எடுத்துக் கொள்ளும் முன்பாகவே தனது தொகுதி நிதியினை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெண்டிலேட்டர்களையும் மற்ற உபகரணங்களையும் தானே நேரடியாக தலையிட்டு உடனடியாக மதுரைக்கு விரைவாக அவர் கொண்டு வந்து சேர்த்தது மதுரை மக்களின் நம்பிக்கைக்கு விதை போட்டது என்றால் மிகையாகாது. மதுரை மக்களுக்கு தினசரி தகவல்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற அடிப்படையில் “மதுரை மக்கள் அவை” என்னும் தொடராக அவரின் கொரோனா கால தலையீடுகள் மக்களின் வரவேற்பைப் பெற்றது. 

அதேபோல கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 6000 லிட்டர்திரவ ஆக்சிஜனுக்கான கொள்கலன் மட்டுமே இருந்தது. அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன்இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை உடனடியாக அதிகப்படுத்துவது என அதிகாரிகளோடு ஆலோசித்து சென்னையிலிருந்து வாங்கவேண்டிய அனுமதியைப் பெற்றுக் கொடுத்து, அதன் விளைவாக கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே 6000 லிட்டர் திரவ ஆக்சிஜன்கொள்கலன் 20000 ஆயிரம் லிட்டர் கொள்கலனாக மாற்றப்பட்டது. 400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த இணைப்பு கூடுதலாக 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு மொத்தம் 1100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டது.

அதுவரை தோப்பூர் அரசுமருத்துவமனைக்கு சிலிண்டர் மூலம் 30 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன்தரும் வசதி இருந்தது. ஆனால் அதன் பிறகு புதிய கொள்கலன் அங்கு நிறுவப்பட்டு 130 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வசதியாக அது மாற்றப்பட்டது. அதையும் தாண்டி மதுரையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகாது; மக்கள் நம்பிக்கையோடு இருங்கள் என நம்பிக்கையை விதைக்கிறார் சு.வெங்கடேசன் எம்பி., மக்கள் நலன் என்கிற ஒற்றை நோக்கத்தில் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அதுவும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வளவு செய்ய முனையும் போது ஒரு மாநில அரசு எவ்வளவு செய்திருக்க முடியும். தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 7.5 கோடி . இதில் தற்போது வரை நடைபெற்றுள்ள பரிசோதனைகள் சுமார் 2.25 கோடி . அதில் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை வெறும் 53 இலட்சம் பேர். பெரும் மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் இவ்வளவு குறைவாக தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். ‘‘கடந்த முதல் அலையில் ஜாகிர் உசேன் என்கிற 70 சதவிகித நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு தொடர்ந்து 45 நாட்களாக சிகிச்சை கொடுத்து அவரை காப்பாற்றினோம். அதற்கு மிக முக்கியமான காரணம் மருந்து மாத்திரைகள் தாண்டி , அவருக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன். அவருக்கு மட்டும் அந்த நாட்களில் சுமார் 45 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. அந்த அனுபவத்தில் இருந்தே ஆக்சிஜன் கொள்ளளவினை உயர்த்த உழைத்தோம்’’ என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி., 
இதுவே இன்றைய தமிழகம் கண்டுணர வேண்டிய ‘மதுரை மாடல்’. 

‘‘முதல் அலை எப்படிப்பட்டது என நாம் அறிந்து வைத்திருக்கவில்லை. ஆனால் அதையே வெற்றிகரமாக எதிர்கொண்டோம். இரண்டாம் அலையில் நமக்கு எல்லாம் தெரியும். மாநிலத்தில் தேவையினை விட பலமடங்கு ஆக்சிஜன் வைத்துள்ளோம். மற்ற மாநிலங்களுக்கும் உதவுகிறோம். கேரளத்து மக்கள் பயங்கொள்ளத் தேவையில்லை; பாதுகாப்பாய் இருங்கள்;’’  என்கிறார் முதல்வர் பினராயி விஜயன். 

இது தேசத்ததிற்கே வழிகாட்டும் ‘கேரள மாடல்’. இரண்டுமே கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்கிய மாடல். கம்யூனிசமே மக்கள் நலன் காக்கும் மாடல்! 

கட்டுரையாளர் : எஸ்.கார்த்திக், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்

;