articles

img

வெற்றியடைந்த விவசாயிகளும் தோற்று நிற்கும் ஊடகங்களும் - பி.சாய்நாத் , பிரபல பத்திரிகையாளர்

இந்தியன் எக்ஸ்பிரஸ்,  டைம்ஸ் ஆஃப் இந்தியா என கிட்டத்தட்ட எல்லா நாளேடுகளும் அடிப்படையாகச் சொன்னது ஒரு விஷயத்தை மட்டும்தான். இந்த நாட்டுப்புறத்தான்களிடம் மென்மையாகவும் இனிமையாகவும் பேச வேண்டும் என்று மட்டும்தான் எழுதின. மற்றபடி சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியதில்லை என்றும் அச்சட்டங்கள் நன்மை பயப்பவை என்றே எழுதின. பிற ஊடகங்களும் இதையேதான் செய்தன.

உலகிலேயே பெரிய அளவில் அமைதியாக நடத்தப்பட்ட ஒரு ஜனநாயகப் போராட்டம் - தொற்று உச்சம் பெற்றிருந்த நிலையில் கூட பெரியளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்த போராட்டம் - பெரும்வெற்றி அடைந்திருக்கும் உண்மையை ஊடகங்கள் ஒருபோதும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள முடியாது. ஒரு பாரம்பரியத்தை முன்செலுத்தும் வெற்றி. ஆண், பெண் உள்ளிட்ட - பழங்குடி மற்றும் தலித் சமூகங்களையும் உள்ளடக்கிய - விவசாயிகள் இந்த நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனர். இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில் சுதந்திரத்துக்கான போராட்ட உணர்வை தில்லியின் எல்லையில் மீண்டும் விவசாயிகள் மீட்டெடுத்திருக்கின்றனர்.

“குறிப்பிட்ட சில விவசாயிகள்”

இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருக்கும் குளிர்கால கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுமென பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். ‘கடும் முயற்சிகள் எடுத்தும் குறிப்பிட்ட சில விவசாயிகளை சமரசத்துக்கு’ உடன்பட வைக்க முடியாததால் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கவனித்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட சில விவசாயிகள்தான். மூன்று வேளாண் சட்டங்கள் அந்தக் குறிப்பிட்ட சில  விவசாயிகளுக்கும் கூட நன்மை பயக்குமென பேசி  சமரசம் செய்ய முடியவில்லை என சொல்லி யிருக்கிறார் பிரதமர். வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டத்தில் இறந்துபோன 600க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை. அவருடைய தோல்வி என்பது அந்தக் ‘குறிப்பிட சில விவசாயிகளைக் கூட’ உண்மையின் ஒளியைப் பார்க்க வைக்க முடியாத அவரது திறமைக் குறை வினால்தான் என தெளிவுபடுத்தி இருக்கிறார். அவர்  குறிப்பிடும் தோல்விக்குள் வேளாண் சட்டங்களோ அல்லது தொற்றுக்காலத்தில் அவற்றைக் கட்டாயப்படுத்தி நிறைவேற்றிய அரசோ இல்லவே இல்லை.

அதாவது, திடுமென தற்போது ‘குறிப்பிட்ட சில விவசாயிகள்’ என்கிற நிலைக்கு ஏற்றம் பெற்றி ருக்கும் காலிஸ்தானிகள், தேசவிரோதிகள், போலிச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் திரு.மோடியின் அற்புதமான சமரச முயற்சிகளை நிராகரித்து விட்டார்களாம். சமரசத்தை மறுத்து விட்டார்களா? சமரசம் செய்யப்பட்ட முறையும் தன்மையும் என்ன?  தங்களின் குறைகளை சொல்ல தலைநகருக்கு வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பதுதான் சமரச  முறையா? அல்லது, குழிகளையும் முள்வேலி களையும் கொண்டு அவர்களின் பாதைகளை அடைப்பதா? அல்லது அவர்களின் மீது தண்ணீரை  பீய்ச்சியடிப்பதா? இல்லையெனில், அவர்களின் வசிப்பிடங்களை முகாம்களாக மாற்றுவதா? அல்லது  வணிக ஊடகங்கள் தினந்தோறும் விவசாயிகளை தீயவர்களாக்கிக் காட்டினவே, அப்படியா?  அல்லது வாகனங்களை ஏற்றி அவர்களைக் கொல்ல முயன்றதா? அதுவும் அந்த வாகனத்தின் உரிமை யாளராக ஒன்றிய அமைச்சர் அல்லது அவரின் மகனாக இருக்க வைத்ததா? சமரசம் என்பதற்கு இந்த அரசு கொண்டிருக்கும் கருத்து இதுதானா? இவைதான் இந்த அரசின் ‘சிறந்த சமரச முயற்சிகள்’ எனில், அந்த மோசமான முயற்சிகளை நாங்கள் பார்க்க விரும்பவில்லை.

இந்த வருடத்தில் மட்டும் பிரதமர் ஏழு வெளி நாட்டுப் பயணங்கள் (சமீபத்திய காலநிலை மாநாட்டுக் கான பயணத்தைப் போல்) மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் வீட்டிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள தில்லி எல்லையின் அருகே இருந்த சில லட்சம் விவசாயிகளைச் சந்திக்க மட்டும்  அவருக்கு நேரமில்லை. அவர் சொல்லும் சமரச முயற்சிக்கான நேர்மையான செயல்பாடுதானே அது? போராட்டங்கள் தொடங்கப்பட்ட முதல் மாதத்தி லிருந்து அவர்களால் எத்தனை காலத்துக்கு தொடர முடியும் என்கிற கேள்வி ஊடகங்களிலிருந்து சரமாரியாக என்னை நோக்கி தொடுக்கப்பட்டது. விவசாயிகள் அக்கேள்விக்கான பதிலைக் கொடுத்துவிட்டனர். அதே போல் இந்த அற்புதமான வெற்றி அவர்களின் முதல் அடிதான் என்பதையும் புரிந்து வைத்திருக்கிறார்கள். சட்டங்களை திரும்பப் பெறுதல் என்பது விளைவிப்பவனின் கழுத்தி லிருக்கும் கார்ப்பரேட்டின் காலை இப்போதைக்கு தள்ளி வைப்பது என்பதை அவர்கள் புரிந்திருக் கிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை, நேரடிக் கொள்முதல் முதலிய பிரச்சனைகள் தொடங்கி, பொருளாதாரக் கொள்கைகள் வரை தீர்வுகள் தேவைப்படும் பிரச்சனைகள் இன்னும் பல இருக்கின்றன.

தேர்தல் காரணமா?

தொலைக்காட்சியில் தோன்றும் செய்தியாளர் கள் ஏதோ ஓர் ஆச்சரியகரமான விஷயத்தைக் கண்டு பிடித்துவிட்டதைப் போல, சட்டங்களை திரும்பப் பெறும் இச்செயல் வரும் பிப்ரவரி மாதம் நடக்க விருக்கும் ஐந்து மாநில தேர்தல்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என சொல்கிறார்கள். 29 சட்டசபை இடங்களுக்கும் 3 நாடாளுமன்ற இடங்களுக்கும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த ஊடகங்கள் உங்களுக்கு ஒன்றையும் சொல்லாது. அந்தச் சமயத்தில் வந்த தலையங்கக் கட்டுரைகளை படித்துப் பாருங்கள். தொலைக்காட்சிகளில் எந்தச் செய்திகள் அலசப்பட்டன என யோசித்துப் பாருங்கள்.  ‘ஆளும்கட்சிகள்தான் வழக்கமாக இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும்’,  ‘பாஜகவுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை’ என்பன போன்ற அரைத்த மாவுகளையே அரைத்துக் கொண்டிருந்தன. சில தலையங்கக் கட்டுரைகள் மட்டும் இந்த தேர்தல் முடிவுகளுக்குக் காரணமாக இரண்டு விஷயங்கள் இருந்ததைப் பேசின - விவசாயிகள் போராட்டம் மற்றும் கோவிட் தொற்று கையாளப்பட்ட முறை.

இன்றைய மோடியின் அறிவிப்பு, குறைந்தபட்சம் இந்த இரண்டு விஷயங்களும் முக்கியமானவை எனப் புரிந்து கொள்கிற அறிவேனும் அவருக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் சில மாநிலங்களில் அவரது கட்சி பெரும் வீழ்ச்சி அடைந்திருப்பது அவருக்குத் தெரியும். பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில்தான் போராட்டங்கள் நடப்பதாக கிளி போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல் மாநிலங்களைத் தங்களின் ஆய்வில் எடுத்துக் கொள்வதில்லை.

பாஜக அல்லது சங் பரிவாரின் கூட்டு, ராஜஸ்தானின் இரண்டு தொகுதிகளில் மூன்று மற்றும்  நான்காம் இடத்தை அடைந்த காட்சியைக் கடைசி யாக எப்போது நாம் பார்த்தோம்? அல்லது இமாச்ச லைப் போல் மூன்று சட்டசபை இடங்களிலும் ஒரு நாடாளுமன்ற இடத்திலும் அது வாங்கிய தோல்விக்கான அடியைப் பார்த்திருக்கிறோமா?

ஹரியானாவின் போராட்டக்காரர்கள் சொல்வதைப் போல், “முதல்வர் தொடங்கி முடிவெடுக்கும் அதிகாரி வரை”யிலான மொத்த அரசும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தது. விவசாயி களின் பிரச்சனைக்காக பதவி விலகிய அபய்  சவுதாலாவுக்கு எதிராக காங்கிரஸ் முட்டாள்தனமாக வேட்பாளரை நிறுத்தியது. ஒன்றிய அமைச்சர்கள் அனைவரின் வலிமையுடனும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும் பாஜக தோற்றது. காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். எனினும்  சவுதாலாவின் வெற்றியில் ஒரு சிறு பகுதியை பறித்துக் கொண்டார். சவுதாலா 6000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விவசாயப் போராட்டத்தின் தாக்கம் மூன்று மாநிலங்களிலும் பிரதிபலித்தது. கார்ப்பரேட் அடிவருடிகள் போலல்லாமல் பிரதமர் அதைப் புரிந்து கொண்டார். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் விவசாயப் போராட்டத்தின் தாக்கத்துடன் லக்கிம்பூர் கெரி முதலிய படுகொலைகளும் சேர்ந்து, அடுத்த 90 நாட்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழல் அவருக்கு உண்மையின் ஒளியைக் கொடுத்திருக்கிறது.

வாக்குறுதி என்னாயிற்று?

அடுத்த மூன்று மாதங்களில் - எதிர்க்கட்சிக்கு கேள்வி கேட்க வேண்டும் என்கிற உணர்வு இருந்தால் - விவசாயிகளின் வருமானம் 2022ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்காக்கப்படும் என்கிற உறுதி என்ன ஆனது என்கிற கேள்விக்கு பாஜக அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும். 2018-19ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 77வது கட்டம், பயிர் விளைச்சலில் விவசாயிகளுக்கு பகிரப்படும் வருமானம் வீழ்ச்சி அடைந்திருப்பதைக் காட்டுகிறது. இரண்டு மடங்கு வருமானம் என்கிற விஷயம் எந்த மூலைக்கு? பயிர் விளைச்சலில் கிடைக்கும் வருமானம் மொத்தமாக சரிந்து விட்டதாகக் கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது.

இது விவசாய நெருக்கடிக்கான முடிவு அல்ல. அந்த நெருக்கடியின் பெரிய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போரின் புதுத் தொடக்கமே இது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு வதற்கான உறுதியைத் தாண்டி விவசாயிகள் பல விஷயங்களை செய்திருக்கின்றனர். அவர்களின் நெருக்கடி 2004ஆம் ஆண்டின் பொது தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தியது போல, அவர்களின் போராட்டம் இந்த நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது என்ன இதழியல்?

இங்கு இன்று பல வெற்றிகள் இருக்கின்றன. கார்ப்பரேட் ஊடகத்தை எதிர்த்து விவசாயிகள் அடைந்த வெற்றி அவற்றில் ஒன்று. விவசாயப் பிரச்சனையைப் பொறுத்தவரை (பிற பிரச்சனை களைப் போலவே) ஊடகம், அம்பானிக்கும் அதா னிக்கும் அதிக ஆற்றல் கொடுக்கும் AAA பேட்டரி (Amplifying Ambani Adani) போல் செயல்பட்டது. டிசம்பர் தொடங்கி அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் இரு பத்திரிகைகளின் (இரண்டுமே ராஜாராம் மோகன் ராயால் தொடங்கப்பட்டவை) 200ஆம் வருடக் கொண்டாட்டத்தில் இருப்போம். உண்மையான இந்திய ஊடகத்தின் தொடக்கம் என அறியப்பட்ட பத்திரிகைகள். அவற்றில் ஒன்றான ‘மிராத் உல்  அக்பர்’ பிரதாப் நாராயண் தாஸ்ஸை கொமில்லா (தற்போது வங்கதேசத்தில் இருக்கும் சிட்டகாங்) நீதிபதி வழங்கிய தீர்ப்பைக் கொண்டு கொன்ற  பிரிட்டிஷ் நிர்வாகத்தை அற்புதமாக அம்பலப்படுத்தி யது. ராயின் சக்தி வாய்ந்த தலையங்கக் கட்டுரை அந்த நீதிபதியை இழுத்துச் சென்று விசாரணைக் கூண்டில் நிறுத்தியது.

இந்தப் பிரச்சனையை, பத்திரிகைத்துறையை அச்சுறுத்துவதன் வழியாக எதிர்கொண்டார் கவர்னர் ஜெனரல். பத்திரிகைத் துறையை ஒடுக்கவென ஒரு அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார். அதற்கு  அடிபணிய மறுத்தார் ராய். கீழ்த்தரமான, அவ மதிக்கும் சட்டங்கள் மற்றும் சூழல்களுக்கு இணங்கிப்  போவதற்கு பதிலாக மிராத் உல் அக்பர் பத்திரிகை யை மூடுவதாக அறிவித்தார் ராய். (பிற பத்திரிகை களின் வழியாக தன்னுடையப் போரை தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருந்தார்). வீரத்தை அடையாளப்படுத்தும் இதழியல் அது. விவசாயப் பிரச்சனையில் நாம் பார்த்த ஆளும் வர்க்கத்திடம் சரணாகதி அடைந்து நட்பு பாராட்டும் இதழியல் அல்ல அது. பெயர் இடம்பெறாத தலை யங்கக் கட்டுரைகளில் விவசாயிகளுக்கான அக்கறை  என்கிற பூச்சைக் கொண்டு எழுதிவிட்டு, கருத்துக்  கட்டுரைகளில் அவர்களைப் பணக்கார விவசாயி கள் என்றும் ‘பணக்காரர்களுக்கான சோசலிசத்தை விரும்புகிறார்கள்’ என்றும் எழுதுவது அல்ல இதழியல். இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா என கிட்டத்தட்ட எல்லா நாளேடுகளும் அடிப்படை யாகச் சொன்னது ஒரு விஷயத்தை மட்டும்தான். இந்த நாட்டுப்புறத்தான்களிடம் மென்மையாகவும் இனிமையாகவும் பேச வேண்டும் என்று மட்டும்தான் எழுதின. மற்றபடி சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியதில்லை என்றும் அச்சட்டங்கள் நன்மை பயப்பவை என்றே எழுதின. பிற ஊடகங்களும் இதையேதான் செய்தன.

இந்த பத்திரிகைகளில் ஏதேனும் ஒன்றேனும் விவ சாயிகளுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையே நிலவும் பிணக்குகளை வாசகர்களிடம் விளக்கி யிருக்கிறதா? முகேஷ் அம்பானியின் தனிச்சொத்து மதிப்பு 84.5 பில்லியன் டாலர்கள் (ஃபோர்ப்ஸ் 2021). இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு  உற்பத்தி மதிப்பை (85.5 பில்லியன்) நெருங்கிக் கொண்டிருப்பதைச் சொல்லி இருக்கிறார்களா? அம்பானி மற்றும் அதானி (50.5 பில்லியன் மதிப்பு சொத்து) ஆகிய இருவரின் சொத்தும் சேர்ந்தால் அது பஞ்சாப் அல்லது ஹரியானாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தியை விட அதிகம் எனச் சொல்லியிருக்கிறார்களா? அதற்கு காரணமாக, பல சூழல்கள் இருக்கின்றன. இந்திய ஊடகத்தின் பெருமுதலாளி அம்பானி. அவருக்கு சொந்தமில்லாத ஊடகங்களில் அவர் பெரிய விளம்பரதாரராக இருக்கிறார். இந்த  இரண்டு கார்ப்பரேட் கோமான்களின் சொத்துகள் வழக்கமாக கொண்டாடப்படும் மனநிலையில் தான்  எழுதப்படுகின்றன. கார்ப்பரேட் அடிவருடிகளுக்கான இதழியல் முறை இது.

இது யாருடைய வெற்றி

எதிர்வரும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களை முன் வைத்து மேற்கொள்ளப்பட்ட தந்திரம் இது  என்பதைப் பற்றிய பேச்சு ஏற்கனவே குறைவாகத் தான் ஒலிக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து பதவி விலகி மோடியிடம், தான் பேச்சு வார்த்தை நடத்தியதில் விளைந்த வெற்றி இதுவென  ஏற்கனவே அமரிந்தர் சிங் சொல்லிக் கொண்டிருக் கிறார். இது அங்கிருக்கும் தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் எனவும் சொல்கிறார்.

ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அம்மாநிலத்தின் லட்சக்கணக்கான மக்க ளுக்கு இது யாருடைய வெற்றி என தெரியும். தில்லியின் மோசமான குளிர்காலம், கொளுத்தும் கோடை, பிறகு மழை, மோடி மற்றும் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்களின் கொடுமை கள் எல்லாவற்றையும் தாண்டி போராட்டக் களங்களில் இருந்தவர்களுடன்தான் பஞ்சாப் மக்களின் இதயங்கள் இருக்கின்றன.

போராட்டக்காரர்கள் சாதித்தவற்றிலேயே முக்கிய மான விஷயம் இதுதான்: எதிர்ப்பவர்களை சிறை யில் தூக்கிப் போட்டோ அல்லது வேட்டையாடி துன்புறுத்தியோ பழகியிருந்த அரசை எதிக்க முடியுமென்கிற உணர்வை பிற பகுதிகளுக்கும் இப்போராட்டம் கொண்டு சென்றிருக்கிறது. எந்தத் தடையுமின்றி பத்திரிகையாளர்கள் உள்ளடக்கிய குடிமக்களை ‘உபா’ சட்டத்தின் கீழ் கைது செய்தும் சுயேச்சையான ஊடகங்களை ஒடுக்கிக் கொண்டும் இருந்த அரசு இது. இந்த நாள் விவசாயிகளுக்கான வெற்றி மட்டுமல்ல. சமூக மற்றும் மனித உரிமைகளுக்கான போருக்கும் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தின் வெற்றி.

தமிழில் : ராஜசங்கீதன்


 


 
 

;