1.விரிவடையும் பிரிக்ஸ்!
2009-இல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2011இல் தென்னாப்பிரிக்காவும் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பாக மாறியது. அமெரிக்கா மற்றும் பணக்கார ஜி 7 நாடுகள் பின்பற்றுகிற மேலாதிக்க கொள்கைகளுக்கு எதிராக முடிவுகள் எடுப்பதில் பல நாடுகள் இணைந்து எடுக்கும் ஜனநாயக உலக ஒழுங்கமைப்பை கொண்டு வருவதே பிரிக்ஸின் குறிக்கோளாகும்.
2023 ஆகஸ்டில், தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாநகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அர்ஜெண்டினா பிரிக்சில் முழு உறுப்பினராக இணைவதற்கு வரவேற்கப்பட்டன. ஆனால் அர்ஜெண்டினாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஜேவியர் மிலே என்ற தீவிர வலதுசாரி ஜனாதிபதியாக தேர்வான பின்னர், அர்ஜெண்டினா இணையாது என்று முடிவு எடுத்தார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் அர்ஜெண்டினா அணி சேரும் என அறிவித்தார். எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா ,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஐந்து நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் முறைப்படி 2024 ஜனவரி 1 இல் இணைந்தன. பிரிக்ஸின் இந்த ஆண்டு தலைவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இதை அறிவித்தார். புதிய உறுப்பினர்களை வரவேற்றார்.
சர்வதேச பிரச்சனைகளில் பிரிக்ஸின் வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு எடுத்துக்காட்டு, பிரிக்ஸ் விரிவாக்கம் என்றார். விஞ்ஞானம், உயர் தொழில்நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு, இளைஞர் பரிவர்த்தனை மற்றும் சிவில் சமூகம் போன்றவைகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் இடையே ஒத்துழைப்பு வளரும் என புடின் கூறினார் . புதிய உறுப்பு நாடுகளுடன், உலகின் மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் பிரிக்ஸ் நாடுகளில் வாழ்கின்றனர். 2024 அக்டோபரில் ரஷ்யாவின் காஜன் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் லத்தீன் அமெரிக்காவின் மேலும் சில நாடுகள் இணைய உள்ளதாக புடின் கூறினார்.
2.காங்கோ தேர்தல்கள்!
ஆப்பிரிக்க நாடான காங்கோவில், 2023, டிசம்பர் 20இல் ஜனாதிபதி, நாடாளுமன்ற ,சட்டமன்ற ,உள்ளாட்சித் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக பெலிக்ஸ் ஷிசேக்கடி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் ஜனாதிபதியாக இருப்பார்.
நடைபெற்ற தேர்தல் சர்ச்சைக்கு உரியது .ஏன்? டிசம்பர் 20 -இல் மூன்றில் ஒரு பங்கு வாக்குப்பதிவு மையங்கள் திறக்கவே இல்லை. காங்கோவின் தேர்தல் சட்டப்படி, தேர்தல்கள் ஒரே நாளில் முடிந்திட வேண்டும் .ஆனால் தேர்தல் 2, 3 நாட்கள் அல்ல, ஒரு வாரம் நீடித்தது .இரண்டாவது நாளிலிருந்து தேர்தல் பார்வையாளர்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு வரவில்லை .மொத்த தேர்தல் செலவு 120 கோடி டாலர்; சுமார் ரூபாய் 10 ஆயிரம் கோடி. மக்கள் தங்களின் விருப்பம் தேர்தலில் பிரதிபலிக்கவில்லை என கருதுகின்றனர். காங்கோவில் நடைபெற்ற தேர்தல் குறித்து பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மனித உரிமை போராளி கம்பாலே முசவுலி மேற்கண்டவாறு கூறினார்.
3.இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்கா வழக்கிற்கு பெருகும் ஆதரவு!
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில், பன்னாட்டு நீதிமன்றம் (INTERNATIONAL COURT OF JUSTICE)உள்ளது. நாடுகளுக்கிடையே உள்ள தாவாக்களை விசாரிக்கும் சிவில் டிரிப்யூனலாகும். பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் (INTERNATIONAL CRIMINAL COURT) என்பது நாடுகளின் தனிநபர்களின் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்க முடியும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைக்கும் வழக்குகளை ஐசிசி விசாரிக்க முடியும். இஸ்ரேல் மற்றும் தென்னாப்பிரிக்கா, ஐநா-வின் உறுப்பினர்கள் என்ற முறையில் பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட வேண்டும். 1948 இல் மனிதாபிமான பிரச்சனைகள் குறித்து ஐநா உருவாக்கிய முதல் கோட்பாடு, இரண்டாவது உலக யுத்த முடிவில், இனப்படுகொலைகள் தடுப்பு மற்றும் இனப்படுகொலை குற்றங்களுக்காக தண்டனை வழங்கும் கோட்பாடாகும்.
1948 டிசம்பர் 9 -இல் ஐ.நா இக்கோட்பாட்டை நிறைவேற்றியது. 153 நாடுகள் இதை அங்கீகரித்துள்ளன. இஸ்ரேலும், தென்னாப்பிரிக்காவும் இதில் அடங்கும். 41 நாடுகள் இன்னமும் இதை ஏற்கவில்லை. காசா மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்கா அரசு பன்னாட்டு நீதிமன்றத்தில் 84 பக்க மனுவுடன் வழக்கு தொடுத்துள்ளது. ஜனவரி 11இல் பன்னாட்டு நீதி மன்றத்தின் 15 நீதிபதிகளுக்கு முன்னால் தென்னாப்பிரிக்கா தனது விவாதங்களை எடுத்துரைத்தது. தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேலைச் சேர்ந்த தலா ஒரு நீதிபதியும் இவர்களில் உள்ளனர்.
சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் குழுவை தென்னாப்பிரிக்கா நியமித்துள்ளது .ஜனவரி 7 -இல் இஸ்ரேலின் செய்தி நிறுவனத்தின் தகவல் படி ,200 இஸ்ரேலியர், இஸ்ரேலின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்பட தென்னாப்பிரிக்காவின் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா தொடுத்துள்ள மனுவில் 600-க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சம்:- “காசாவின் மக்களை முற்றிலும் அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது ;காசா மக்களை பட்டினி போடுவது, துன்புறுத்துவது, நாட்டை விட்டு துரத்துவது ஆகிய நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுத்து வருகிறது .பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலும் அழிப்பது என்பது மனித இனப்படுகொலையாகும். எழுத்தாளர், டாக்டர்கள் ,மருத்துவ ஊழியர், பத்திரிகையாளர், ஆசிரியர்கள் மற்றும் அப்பாவி மக்களை திட்டமிட்டரீதியில் பெருமளவு இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது”.
ஜனவரி 12 -இல் வழக்கு குறித்த தனது பதில் அறிக்கையை இஸ்ரேல் பன்னாட்டு நீதிமன்றத்தில் அளித்தது. தென் ஆப்பிரிக்காவின் வழக்கை எதிர்த்து அனைத்து நாடுகளும், அரசியல்வாதிகளும் அறிக்கைகள் வெளியிட வேண்டும் என இஸ்ரேல் அரசு , உலகம் முழுவதும் தந்தி அனுப்பி உள்ளது. “காசா வாழ்வதற்கு தகுதியில்லாத பிரதேசமாக மாறியுள்ளது. மிகப்பெரும் அளவில் உணவு பாதுகாப்பு இன்மை, பஞ்சம் தலை விரித்தாடுகிறது” என ஐநா-வின் மனிதாபிமான இலாக்கா உயர் தலைமை அதிகாரி மார்ட்டின் கிரிப்பித்ஸ் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, பன்னாட்டு நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கிற்கு பொலிவியா மற்றும் மலேசியா ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டன .பொலிவியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நவம்பர் 17- இல் பாலஸ்தீனத்தில் நடை பெறும் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
ரோம் சந்திப்பு ROME STATUTE என்பது 1998 ஜூலையில் நிறை வேறியது. உலகில் இனப்படுகொலை ,மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் இது அமலுக்கு வந்தது. ரோம் சந்திப்பின்படி, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் இந்த வரலாற்று ரீதியான முயற்சிக்கு ,மலேசியா, ஜோர்டான், துருக்கி மற்றும் 57 உறுப்பினர் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறு வனம் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் உள்ள 900-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர அமைப்புகள் தென் ஆப்பிரிக்கா பன்னாட்டு நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கை ஆதரித்து உலக நாடுகள் அறிக்கை விடுமாறு வலியுறுத்தியுள்ளன .
4.ஜெர்மனியின் விவசாயிகள் போராட்டம்!
விவசாய பம்பு செட்டுக்கான டீசல் மீதான வரி நிவாரணத்தை குறைக்கவும், விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்களுக்கான வாகன வரிகளில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை வாபஸ் பெறவும், ஜெர்மன் முதலாளித்துவ அரசு 2023 டிசம்பரில் முடிவு செய்தது. இதற்கு எதிராக ஜெர்மன் விவசாயிகள் சங்கம் மற்றும் ஜெர்மனியை இணைக்கும் விவசாயம் என்ற அமைப்புகள் சார்பில், டிராக்டர் பேரணிகள் நடத்தப்பட்டன ;சாலைகள் மறிக்கப்பட்டன. ஜனவரி 4-இல் வடக்கு ஜெர்மனியில் படகில் இருந்து இறங்கி வந்த பொருளாதார அமைச்சரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
விரிவான போராட்டங்களுக்கு அடிபணிந்து ,ஜெர்மன் அரசு விவசாய வாகனங்க ளுக்கான வரி விலக்கை தொடரப்போவதாகவும், விவசாயத்திற்கான டீசல் மீதான மானியம் 2024 முதல் 2026 வரை படிப்படியாக குறைக்கப் போவதாகவும் சமிக்ஞை காட்டியது. ஆனால் இவை விவசாய சங்கங்களை திருப்திப்படுத்தவில்லை . ஜனவரி 8 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த சங்கங்கள் முடிவு செய்தன .பெர்லின் மாநகரில் தேச அளவில் ஜனவரி 15-இல் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. இப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களும் பங்கேற்கின்றன. அரசு, மீனவர்கள் ஆதரவு நிதியில் வெட்டு ஏற்படுத்தவும், கடற்கரை மேம்பாட்டு செலவை குறைக்கவும் உத்தேசித்துள்ளது. அரசு பல வகைகளில் விரயச் செலவுகள் செய்கின்றது.
உதாரணமாக, உக்ரைனு க்கு ஆயுதங்கள் தளவாடங்கள் சப்ளை. குறைந்த வருமானம் உள்ளோர், ஓய்வூதி யர்கள், எரிவாயு, மின்சார செலவின அதிகரிப்பால் அவதிப்படுகின்றனர் என இடது சாரி எம்பி சுட்டிக் காட்டினார்.
சமீபத்தில், மிக கனமழை காரணமாக பல மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற் பட்டுள்ளன. அரசுக்கு எதிரான கோபத்தை ,தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள தீவிர வலதுசாரி ,ஜெர்மனிக்கான மாற்று போன்ற குழுக்கள் விவசாயிக ளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரதான விவசாய சங்கங்கள், இந்த தீவிர வலதுசாரி குழுக்களை பொருட்படுத்த வேண்டாம்; தேர்தல் ஆதாயம் அடைய அவர்கள் நாடகமாடுகின்றனர் என தங்களது உறுப்பினர்களிடம் தெரிவித்து வருகின்றன . ஜனவரி 5-இல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி, போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஓலாப் சூல்ட்ஸ் தலைமையிலான ஜெர்மனி அரசு தனது ஆயுத ஏற்றுமதியை 40 சதவீதம் உயர்த்தியுள்ளதாக கம்யூனிஸ்ட் தலைவர் கூறுகிறார். தொழி லாளர் மற்றும் விவசாயிகளின் தேசம் தழுவிய ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு உழைக்கும் மக்கள் தயாராக வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.