articles

img

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் மோடி -

இந்தியாவில் சாதி, மதம், வயது அல்லது இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் ஊடக வியலாளர்களுடன் மேற்கொண்ட தன்னுடைய அரிய  சந்திப்பின்போது கூறியது முற்றிலும் பொய் என்பது உடனடியாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஈத் பண்டிகை யின்போது மதச் சிறுபான்மையினருக்கு எதிராக ஏவப்பட்டுள்ள தாக்குதல்களும், அவ்வாறு தாக்குதல் தொடுத்த கயவர்களுக்கு ஆட்சியாளர்களே வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதுகாப்பு கொடுப்பது என்பதும் முன்னுக்கு வந்து, பாஜக அரசாங்கத்தின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் கூர்மையாக வெளிக்கொணர்ந்திருக்கிறது. 

அமெரிக்க செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் பேசிய 24 மணி நேரத்திற்குள்ளாகவே, அதாவது ஜூன் 24  அன்று, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜடூரா கிராமத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் இந்திய ராணு வத்தின் மேஜர் ஒருவர் தலைமையில் ராணுவத்தினர் புகுந்து, அங்கே குழுமியிருந்த முஸ்லீம்களை, “ஜெய்  ஸ்ரீராம்” கோஷம் எழுப்பிட வற்புறுத்தி இருக்கின்றனர். மேலும் அவர்கள் தெற்கு காஷ்மீரில் மிகப் பெரிய மசூதி யாகத் திகழும் ஜூம்மா மசூதியையும் சேதப்படுத்தி, முஸ்லீம்களின் மதச் சுதந்திர உரிமையையே காலில் போட்டு மிதித்துள்ளனர். மதச்சார்பற்ற நிறுவன மான இந்திய ராணுவமே, அரசமைப்புச் சட்டத்தின்  நெறிமுறைகள் அனைத்தையும் மீறி, ஒருதலைபட்ச மாக, இத்தகைய தாக்குதலை நடத்தியிருப்பது, பாஜக -வின் ஆட்சியில் எந்த அளவிற்கு நிலைமைகள் மோசமாகி இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றது.

பசுக் குண்டர்களின் வெறியாட்டம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா, இந்தியாவில் முஸ்லீம் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி விமர்சிக்கும் வகையில் பேசியதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும், மோடிக்கு வக்காலத்து வாங்கியும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் ஊடகங்களில் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில்தான், ஜூன் 25 அன்று  மும்பையிலிருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றார் என்று கூறி ஓர் இளைஞர் கொல்லப்பட்டி ருக்கிறார். இது, 15 நாட்களுக்குள் மும்பைக்கும் நாசிக்கிற்கும் இடையே இதேபோன்று நடந்துள்ள  இரண்டாவது சம்பவமாகும். இவ்விரு சம்பவங்களி லும் தாக்கப்பட்டவர்கள் பஸ்மந்தா முஸ்லீம்களாவர்.  பஸ்மந்தா முஸ்லீம்களின் நலன்களை நாங்கள்தான்  பாதுகாக்கிறோம் என்று கூறிவரும் ஆர்எஸ்எஸ்/பாஜக -வினரின் இரட்டை வேடத்தை இந்த சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன. பலியான இருவரும் தினக் கூலிகள்; காய்கறி மற்றும் இறைச்சி ஆகியவற்றைக் கொண்டுசென்று ஜீவனம்  செய்து வந்தவர்கள். இவர்களை ராஷ்ட்ரிய பஜ்ரங்  தளம் என்னும் பதாகையின்கீழ் பசுப் பாதுகாப்புக் குழுவினர் என்று கூறிக்கொள்ளும் 10-15 குண்டர்கள் தாக்கியிருக்கின்றனர்.  

சங் பரிவார் சித்தாந்தத்தின் தாக்கம் அரசு எந்திரத்தில் எந்த அளவிற்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு, விலங்குகள் வதைத் தடைச் சட்டத்தின்கீழ் ஒரு சிலரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது  செய்திருப்பதாகும். உண்மையில் இவர்கள்  எவ்விதமான விலங்குகளையும் கொண்டுசெல்ல வில்லை. ஷிண்டே-ஃபட்னாவிஸ் அரசாங்கத்தின் கீழ், பசுக்குண்டர்கள் மிகவும் ஊக்கமடைந்திருக் கின்றனர். இதன் விளைவு, பசுக் குண்டர்களின் தாக்குதல்கள் மகாராஷ்டிராவில்  கொலை செய்யும் அளவிற்குச் சென்றிருக்கிறது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் இத்தகைய இரண்டா வது நிகழ்வு நடைபெற்றபின் இரண்டு தினங்களில், மகாராஷ்டிர மாநில சட்டமன்ற பேரவையின் தலைவர், காவல்துறையினருக்கு ஒரு கட்டளை பிறப்பித்திருக் கிறார். (உண்மையில் இவ்வாறு கட்டளை பிறப்பிப்பதற்கு இவருக்கு எவ்வித அதிகாரமும் கிடை யாது.) அவர் அந்தக் கட்டளையில், “பொய்க் குற்றச் சாட்டுகளின்” கீழ், பசுக் குண்டர்களை  துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பசுக் குண்டர்களைப் பாதுகாத்திட மதவெறி ஆட்சி யாளர்கள் எந்த அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. 

பீகாரில்...

இவர்கள் நாடு முழுதும் கொலைபாதக செயல்களில் ஈடுபடுவது மிகவும் கொதிப்பை ஏற்படுத்துகின்றது. மகாராஷ்டிராவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றபின் ஒரு சில தினங்களி லேயே, பீகாரில் சரண் மாவட்டத்தில் ஈத் பண்டிகை யின் போது, மற்றுமொரு தாக்குதல் நடைபெற்றிருக் கிறது. தொழிற்சாலை ஒன்றுக்கு விலங்குகளின் எலும்புகளை எடுத்துச் சென்ற 55 வயது ஊனமுற்ற முஸ்லீம் ஓட்டுநர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த எலும்புகள், தொழிற்சாலையில் மருந்துகள் தயாரிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டவையாகும். அங்கே அந்த தொழிற்சாலை கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

உத்தர்காண்டில்...

உத்தர்காண்டில் உள்ள புரோலாவில் முஸ்லீம் கடைக்காரர்களை மிரட்டி, அவர்களின் கடைகளை மூடிவிட்டு நகரை விட்டே ஓடிவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இவர்களின் மிரட்டலையும் மீறி அங்கே இருப்பவர்களை வேட்டையாடுவது என்பது இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. விசுவ இந்து பரிசத், முஸ்லீம்கள் தங்கள் வீடுகளுக்குள்கூட, ‘நமாஸ்’ செய்யக்கூடாது என்றும், அவ்வாறு செய்வது தங்களை ஆத்திரமூட்டுவதாக இருப்பதாகவும் கூறி அவர்களை மிரட்டியிருக்கின்றனர்.

நாடகம் கூட தவறாம்!

குஜராத் மாநிலத்தில் முந்த்ராவில், ஈத் தினத்தன்று, தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்கள் ஈத்-அல்-அதா நாடகத்தை அரங்கேற்றும்போது மண்டை ஓடு அணிந்திருந்த வீடியோ சமூக ஊடகங் களில் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து, அந்தப்  பள்ளிக்கூடத்தின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்ப ட்டிருக்கிறார். அந்தப் பள்ளி நிர்வாகம் அந்த முதல்வருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி  நிர்வாகத்தை நிர்ப்பந்தித்திருக்கிறார். இந்த செயலை  நியாயப்படுத்தி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலு வலர், முஸ்லீம்களால் அணியப்படும் மண்டை ஓடுகளை அணியும் பழக்கத்தை இந்து மாணவர் களும் அணிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் பட்டிருப்பது ஒரு ‘ஈனச் செயல்’ (‘heen krutya’  (lowly act) என்று கூறியிருக்கிறார். சமூகத்தில்  இந்து மதவெறி எந்த அளவிற்கு வேரூன்றியிருக் கிறது என்பதற்கு இது மேலும் ஓர் எடுத்துக்காட்டாகும். மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் எந்த அளவிற்கு மதவெறி சித்தாந்தத்து டன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை யும் இவை காட்டுகின்றன. மதவெறி வெறுப்பைப் பரப்பும் இத்தகைய நிகழ்வுகள் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் மட்டும் சுருங்கிடவில்லை. அசாம் முதலமைச்சராக இருக்கும்  ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா போன்றவர்கள் கூட, இந்தியாவில் உள்ள ‘பல உசேன் ஒபாமாக்களும் கவனிக்கப்பட முன்னுரிமை அளிக்கப்படும்’ (“They would prioritise taking care of  the many Hussain Obamas in India”)  என்று  கூறியிருப்பதன் மூலம் இவர்கள் வெறுப்பை  விதைப்பது என்பது நாடு முழுதும் பரவிக்கொண்டி ருக்கிறது என்பதைக் காண முடியும். ‘இந்தியாவில் முஸ்லீம்கள் தங்களை மற்றவர்களுக்குச் சமமாகக் கருதக் கூடாது, அவர்கள் நாட்டில் இரண்டாம் தர குடிமக்கள் மட்டுமே என்றும் மாற்றியிருப்பது’ தெள்ளத் தெளிவாகும். 

ஈத் பண்டிகையை குறி வைத்து...

மேலே கூறிய அனைத்து சம்பவங்களும்  ஈத் திருநாளை முஸ்லீம்கள் கொண்டாடிக்கொண்டி ருக்கும் சமயத்தில் நடைபெற்றிருப்பது என்பது தற்செயலானவை அல்ல. இந்துக்களின் பண்டிகை களாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லீம்களின் பண்டிகைகளாக இருந்தாலும் சரி, இந்துத்துவா வாதிகளின் தாக்குதல்கள் என்பவை சிறுபான்மை யினருக்கு அதிர்ச்சியளிக்கக்கூடியவிதத்தில், “நீங்கள் இங்கே வாழ்வதற்கு எவ்விதமான உரிமை களும் கிடையாது, நீங்கள் நாங்கள் கட்டளையிடு கிறபடிதான் செயல்பட வேண்டும். உங்களை எவரும் எந்த சக்தியும் காப்பாற்ற வரப்போவதில்லை,” என்று மிரட்டும் நோக்கத்துடனேயே அமைந்திடும். சமூகத்தில் இந்துமத வெறியை விசிறிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயங்கள் அடைய முனைவது ஆர்எஸ்எஸ்/பாஜகவினரின் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருப்ப தால், இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள்  முடுக்கிவிட்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள், அதிகார வர்க்கத்தின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் தங்களு டைய இந்துத்துவா சித்தாந்தத்தைப் பரப்பி, அவர்களைத் தங்கள் நோக்கத்திற்கு இணங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். சர்வதேசப் பார்வை யாளர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் பிரதமர் மோடி ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்தெல்லாம் பேசினாலும், இவர்கள் சிறுபான்மை யினர் மீது ஏவிவரும் தாக்குதல்களை மறைத்திட முடியாது. 

நாட்டில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்பட வேண்டுமானால், சிறுபான்மை யினருக்கு எதிரான ஒவ்வொரு தாக்குதலும் எதிர்த்து, முறியடிக்கப்பட வேண்டும். பாசிச இந்துத்துவா
சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொண்டுவரும் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக பெரும் திரளாக மக்களை அணிதிரட்டும் விதத்தில் இடது மற்றும் ஜனநாயக சக்திகள் இடைவிடாது தொடர்ந்து செயல்பட வேண்டும்.

ஜூலை 5, 2023
- தமிழில்: ச.வீரமணி