articles

img

புதிய சூழலில் மாநிலங்களின் உரிமைகளை மீட்போம்! - பேரா.அருண்குமார்

2024 பொதுத் தேர்தல்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளன. மாநிலத்தின் பிராந்தியக் கட்சிகள் சிறப்பாகச் செயல்படுவதால் நாட்டில் ஜனநாய கச் சூழல் மேம்படும் வாய்ப்புகள் தெரிகிறது. எதிர் எதிர் வரிசையில் இடம் பிடித்தாலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே பன்முகத்தன்மை கொண்ட நம் தேசத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டாட்சியை வலுப்படுத்த  வேண்டிய இச்சூழல் சமீப காலம் வரையில் மிக மோச மாக இருந்தது. பொதுத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஒன்றிய- மாநில உறவுகளில் சர்ச்சைகள் தோன்றின. “400 பார்”, ஒரே நாடு ஒரே தேர்தல், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஊழல்வாதிகள், சிறையில் அடைக்கப்படுபவர்கள் என்ற பிரதமரின்  வெறுப்புப் பேச்சாலும்  எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் அச்சுறுத்தப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு!

ஒன்றிய அரசின் மாற்றாந் தாய் மனப்பான்மை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னுடைய உரிமையை நிலைநாட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு கோரி அணிவகுத்ததை பார்த்தோம். வறட்சி நிவாரணம் (கேரளா),100 நாள் வேலைத்திட்டம் (கர்நாடகா), நிதி பரிமாற்றம் (மேற்குவங்கம்) என வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஒன்றிய, மாநில அரசுகள் தங்களுக்குள்ளே  பேசி  இதற்கான தீர்வை எட்டவேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் விலகியது. 2014 இல் பாஜக ஆட்சி கூட்டுறவு, கூட்டாட்சி என சத்தமாக பேசியது. மாறாக, 2017-இல் அது கொண்டு வந்த ஜிஎஸ்டி அதன் உள்நோக்கத்தை அம்பலப் படுத்தியது. ஒன்றிய, மாநில அரசுகளுக்குள் இதன் அமலாக்கம் குறித்த முரண்பாடுகள் கூட்டாட்சி முறையை முழுமை யாகச் சிதைத்தது. மாநிலங்களுக்குள் பல்வேறு மாறுபட்ட தன்மை உண்டு. குஜராத்தும் அசாமும் ஒன்றல்ல. தமிழ்நாடும் இமாச்சலப் பிரதேசமும் ஒன்றல்ல. ஒரு பொதுவான அணுகுமுறை பல்வேறு மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு உகந்ததல்ல. அவர்கள் சொந்த தனிப்பட்ட முறைகளில் பிரச்சனை களை தீர்க்க அதிக சுயாட்சி தேவை. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி இரண்டையுமே உள்ளடக்கி அணுகு முறை இதற்குள் அடங்கியுள்ளது.

மாநிலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

கல்வி, சுகாதாரம், இதர சமூகப் பிரச்சனைகள் மாநிலங்களின் உள் பிரச்சனை. ஆனால், உள்கட்ட மைப்பு, நீர் பங்கீடு போன்றவைகள் அப்படி அல்ல. இதர மாநிலங்களுடன் ஒரு சுமூக உடன்பாட்டுக்கு வர வேண்டியது அவசியம்.நிதி நிர்வாகம் மற்றும் பாது காப்பு ஆகியவற்றுக்கும் பொதுவான அணுகுமுறை தேவை. ஒன்றிய அரசின் இணக்கமான உதவியும் தேவை. இலக்குகளை அடைய செலவினங்களுக்கு நிதி அளிக்கும் போது மோதல் ஏற்படும். வரிகள், வரி  அல்லாத ஆதாரங்கள் மற்றும் வளங்கள் மூலம் வருவாயை உயர்த்த வேண்டும். மையப்படுத்தப்பட்ட முறையில் வரிகளை வசூலிக்க ஒன்றிய அரசாங் கத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. தனிநபர் வருமானம் வரி,கார்ப்பரேஷன் வரி, சுங்கவரி, கலால்  வரி ஆகியவை ஒன்றிய அரசால் வசூலிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி ஒன்றிய மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு பிறகு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனவே பெரும்பா லான நிதியாதாரங்களை ஒன்றிய அரசு கட்டுப்படுத்து கிறது. பிறகு மாநிலங்களுக்கு அவற்றின் பொறுப்பு களை நிறைவேற்ற உதவும் வகையில் பகிர்ந்து அளிக்கிறது. ஒன்றிய அரசுக்கு ஆதரவாக ஒரு சார்பு நிலையை இது ஏற்படுத்துவதால் மாநிலங்களிடையே மோதல் ஏற்படவும் காரணமாகிறது.மேலும், மாநிலங்களுக்கு நிதி பொறுப்பு (fiscal responsibility )இல்லை என்ற  ஒரு வாதமும் முன் வைக்கப்படுகிறது. மாநிலங்களை குறைத்து மதிப்பிடுகிறது.தன்னிடம் தேவையற்ற கோரிக்கைகளை வைப்பதாகவும் ஒன்றிய அரசை கருதத் தூண்டுகிறது. வருவாயின்  அதிக பகிர்வைப்  பெற மாநிலங்க ளும் தங்கள் கோரிக்கைகளை  முன்வைக்கின்றன. ஆணையத்திடமிருந்து அதிக ஒதுக்கீடுகளை பெற குறைந்த வருவாய் வசூல் மற்றும் அதிக செல வினங்களை காட்ட முயல்கின்றன.  இது மாநிலங் களை விண்ணப்பதாரர்களாகவும் ஆணையத்தை நடுவ ராகவும் மாற்றுகிறது.

மாநிலங்களுக்கு இடையிலான மோதல்: ஒன்றிய -மாநில உறவு

மாநிலங்களும் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டத்தில், வளங்களின் பயன்பாட்டில் இருப்பதால் ஒரு பொது வான நிலைபாட்டை எடுக்க முடியாது. பணக்கார மாநிலங்கள் அதிக வளங்களை கொண்டுள்ளன. அதே நேரம் ஏழை மக்கள் வளர்ச்சியின் பயன்களைப் பெற அதிக வளங்கள் தேவை. எனவே, உரிய விகிதாச்சா ரப்படி அதிக நிதியை ஏழை மாநிலங்களுக்கு நிதி ஆயோக் பரிந்து அளிக்க வேண்டும். இதுவரை 15 நிதி ஆணையக் குழு வந்துவிட்டாலும் இதில் இடைவெளி அதிகமாகவே நீடிக்கிறது. அதிக பங்களிப்பை செய்யும் பணக்கார மாநிலங்கள் குறைவான பகிர்வைப் பெறும் பொழுது இதை எதிர்க்கின்றன. ஏழை மாநிலங்கள் தான் அவர்க ளுக்கு சந்தையை வழங்குகின்றன என்பதை அவை மறந்து விடுகின்றன. இதுவே அவற்றின் நிறைவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஏழை மாநிலங்கள் தங்கள் சேமிப்பின் பெரும் பகுதியை இழக்கின்றன. (மும்பை மாநகராட்சி வசூலிக்கும் வரிகள் அதிகம். எனவே அது அதிக வருவாய் பெற வேண்டும் என கூறப்படுகிறது. மும்பை நிதித் துறையின் தலைநகரம். பெரும்பாலான நிறுவனங்கள் அங்கிருந்து இயங்குவ தால் செலுத்தும் வரியும் அதிகம்.ஆனால் உற்பத்தி எதுவும் அங்கே நடைபெறுவதில்லை.) ஒன்றிய அரசு இரண்டு வழிகளில் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்குகிறது. ஒன்று நிதி ஆயோக் மூலம். இரண்டாவது மாநிலங்களின் உண்மையான அலகுகள் மூலம்.

ஒன்றிய அரசு  கருத்து உருவாக்க மட்டுமே. அது  செய்யும் அனைத்துச் செலவுகளும் மாநிலங்களின் வளர்ச்சிக்காகத் தான். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதுவே ஒன்றிய அரசின் பரிமாற்றமாகும். இதுவும் மோதலுக்கு வழிவகுக்கிறது. மாநிலத்தின் வேலை வாய்ப்புகளையும் செழிப்பையும் உருவாக்க மையம் நிதியை செலவழிக்கிறது. செலவழித்ததற்கு ஏற்ப அந்த மாநிலத்தின் நன்மைகள் அதிகரிக்கும். இத னாலே ஒவ்வொரு மாநிலமும் அதிக நிதியை பெறுவதில் கவனம் செலுத்துகின்றன. திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தன் அரசியல் விளை யாட்டை ஆடலாம். உதாரணமாக குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயலாற்றுவதாகக்  கூறப்படுகிறது. மாற்றாந் தாய் மனநிலையில் மையம் இருப்பதாக எதிர்க்கட்சிகளின் குறை கூறலும் இப்படித்தான். இதிலிருந்து தான் மாநிலங்கள் ஒன்றிய அரசு டன் இசைவாக இருப்பது, இரட்டை எஞ்சின் அரசு என்ற சித்தரிப்புகள் எல்லாம் வருகிறது. இது  மாநிலங்க ளின் சுயாட்சியையும் சிதைத்து கூட்டாட்சியைப் பல வீனப்படுத்துகிறது. சுயாட்சி என்பதை சுதந்திரமான செயல்பாடுகளோடு போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. பரந்த நன்மைக்காக ஒரு தேசிய கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டிய அவசியத்தால் இது வரையறுக்கப் பட்டுள்ளது. பன்முகத்தன்மை மக்களுக்கு இடையே உள்ள ஒரு பொதுவான சமநிலையை குறிக்கிறது.

கூட்டாட்சி எதிர்கொள்ளும் சவால்

16ஆவது நிதி ஆணையம் பணியை தொடங்கி யுள்ளது. கூட்டாட்சி முறையின் சரிவை தடுத்து நிறுத்த வும் மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தவும் அது முயற்சிக்க வேண்டும். அதிகரிக்கும் சமத்துவமின்மையை கட்டுக்குள் கொண்டு வரவும் அனைத்து மாநிலங்களை யும் சமமாக நடத்துவதற்கும் ஏழை மாநிலங்க ளுக்கு விகிதாச்சாரப்படி அதிக வளங்கள் மாற்றப்படும் பொழுது பணக்கார மற்றும் ஏழை மாநிலங்களுக்கி டையே ஏற்படும் உரசல் குறைக்கப்படவும் ஆணையம் பரிந்துரைக்கலாம். முதலீட்டு உற்பத்தித்திறன், வளர்ச்சியின் வேகம் ஆகியவை குறித்தும் கவனம் தேவை. ஊழலும் கூட்டுக் களவாணித்துவமும் சமூக நலன்களைக்  களவாட வழிவகுக்கும். மையத்தின் அதிகார வரம்பை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்படும் நிதியை 49 சதவிகிதம் என்றும் தற்போதைய அளவி லிருந்து உயர்த்தலாம். மையத்தின் பங்கை குறைக்க லாம். பொது விநியோக முறையும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டமும் கூட்டுத் திட்டங்கள். அதற்காக மாநிலங்கள் தங்களிடம் கையேந்த வேண்டும் என ஒன்றிய அரசு நிர்ப்பந்திக் கிறது. அதற்கு உடன்படாத மாநிலங்களை அது வஞ்சிக்கிறது. மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புக ளும் தான்  களத்தில் செயலாற்றுபவை. அங்குதான் பொருளாதாரம் இயங்குகிறது. வளங்கள் உருவா கின்றன. ஒன்றிய அரசின் அரசியலமைப்பு கோட்பாடு களை மாநிலங்கள் ஏற்கின்றன. அடிபணிபவர்கள் என்ற நிலையில் இருந்து அல்ல; சமமான பங்காளிகள் என்ற நிலையில். அந்த சமத்துவத்தின் உணர்வில் நாட்டின் வளங்களை மையமும் மாநிலங்களும் பயன் படுத்துவதை கூட்டாக முடிவு செய்ய வேண்டிய நேரம் இதுதான். 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சூழல் இதனை சாத்தியமாக மாற்றியுள்ளது.

கட்டுரையாளர்: ஜவஹர்லால் நேரு 
பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர். 
நன்றி : தி இந்து 8/6/24. 
தமிழில் : கடலூர் சுகுமாரன்


 

;