articles

img

நீலமும் சிவப்பும் விரும்பும் எதிர்கால உலகம்! - இரா.சிந்தன்

தலித்துகளின் அரசியல் விடுதலைக்குத் தேவை காரல் மார்க்ஸ், புத்தரல்ல என்று ஒருவர் பேசும்போது இயல்பாகவே அதன் மீது ஈர்ப்பு உருவாகிறது. அண்மையில்  ரவிக்குமார் எம்.பி.,அவர்கள்  பகிர்ந்த ‘காரல் மார்க்சா? கெளதம புத்தரா?’ என்ற  கட்டுரை அவ்வாறே முத்தாய்ப்பாக தெரிவித்தது. அதனாலேயே அது பரவலாக வரவேற்கப்பட்டது. புத்தரா அல்லது காரல் மார்க்சா என்ற விதத்தில் அவர் கேள்வியை முன்வைத்துள்ளார். அது கட்டுரை யாளரின் சொந்த விருப்பத்தில் இருந்து எழவில்லை. ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் இருவரையும் ஒப்பிட்டு, மார்க்சினை நிராகரித்து எழுதியதால், இன்று  அம்பேத்கர் வழி இயங்கும்  இயக்கங்கள் மார்க்சை உதாசீனப்படுத்திடக் கூடாது என்ற அக்கறையின் பால் எழுதப்பட்டதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.  இருப்பினும் அதன் காரணமாகவே சில விசயங்கள் அக்கட்டுரையில் முழுமையாக அணுகப்படவில்லை. மார்க்சின் தேவையை உணர்வதற்கு, விரித்துரைக் கப்பட வேண்டிய மிக அவசியமான நான்கு  அம்சங்களை  கவனப்படுத்த வேண்டியுள்ளது.

வர்க்கப் போராட்டம்  அன்றி வேறில்லை

முதலாவது, உலகை மாற்றியமைப்பதைப் பற்றியது.  “இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதா யத்தின் [எழுதப்பட்ட] வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்” என்கிறார் மார்க்ஸ்.  எனவே எத்தனை மன்னர்கள் இந்த மண்ணை ஆண்டிருந்தாலும், அதற்கு எவ்வளவு தொன்மை இருந்தாலும் அதன் பிரம்மாண்ட சாதனைகளையும், காவியப் பெருமைகளையும் தாண்டி, அந்தந்த காலகட்டத்தில் நிகழ்ந்துவந்த உற்பத்தியையும், அந்த தளத்தில் உடைமையாளருக்கும், உழைப்பவருக்கும் இடையில்‌ ரத்தமும் சதையுமாக தொடர்ந்து வந்த முரண்பாட்டையும், போராட்டத்தையும் மார்க்சியமே அடையாளம் காட்டுகிறது. இன்று வரையில் அந்த போராட்டம் தொடர்ந்து நடப்பதையும், ஒடுக்குவோருக்கும், ஒடுக்கப்படு வோருக்கும் இடையிலான போராட்டம் ஒவ்வொரு முறையும் “சமுதாயம் முழுவதையும் புரட்சிகரமாக மாற்றியமைப்பதிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுவான அழிவிலோதான் முடிந்தி ருக்கிறது” என்பதையும் அறுதியிடுகிறது.

மேற்சொன்ன முடிவுகளை, அடிப்படையில்லாமல் மார்க்ஸ்  முன்வைக்கவில்லை. உற்பத்தி முறை ஒரே மாதிரியாக நீண்ட காலத்திற்கு தொடராது என்பதும், உற்பத்தி உறவுகளில் மாற்றம் ஏற்பட்டால் அது மனித உறவுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் அதற்கு அடிப்படையாக அமைந்த உண்மைகள் ஆகும். அதனால்தான், ஆதியில் அனைவருக்கும் சொந்த மாக இருந்த பூமியில் அடிமை நிலை உருவானது; அடிமைகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் நிலவுடைமைச் சமூகத்தை தோன்றச் செய்தது ; அதுவும் அப்படியே நிலைக்கவில்லை. கலகங்கள் தொடர்ந்து எழுந்தன; புரட்சிகர மாற்றங்களும் நிகழ்ந்தன. இன்று நாம் வாழும் முதலாளித்துவ சமுதாயத்தில், தனிச் சிறப்பான பாட்டாளி வர்க்கம் உருவாகியிருக்கிறது. அதன் தலைமையிலான புரட்சிகரப் போராட்டம், சுரண்டலுக்கும், ஆதிக்கத்திற்கும், பாகுபாட்டிற்கும் முற்றாக முடிவுகட்டக் கூடிய சோசலிசத்தை நோக்கிப் பயணிப்பது திண்ணம்.

 சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த இந்திய சூழலில், நீண்டகாலமாக புரையோடி யிருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு முற்றாக முடிவு கட்டுவது வர்க்கப் போராட்டம் அன்றி வேறு வழியில் சாத்தியமில்லை. ஆகப் பெரும்பான்மை யான பட்டியல் சாதி மக்கள், பாட்டாளி வர்க்கமாக உள்ளனர். மார்க்சியம்தான், சமூக ஒடுக்குமுறைக ளையும் பொருளாதாரச் சுரண்டலையும் வீழ்த்தி, வர்க்க அடிப்படையில், புரட்சிகர‌ உணர்வையும் ஒற்றுமையையும் கட்டமைக்க வழிகாட்டுகிறது.  

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்

இரண்டாவது அம்சம் அரசு உலர்ந்து உதிர்வ தைப் பற்றியது. சமூகத்தில் வர்க்கங்களிடையே‌ பகை தொடர்வ தன் காரணமாகவே, அரசுக்கான தேவை வருகிறது.  அரசு  என்பது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியே. புரட்சிகரப் போராட்டத்தின் வழியாக பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது உற்பத்தி முறையும்  புரட்சிகரமாக மாற்றிய மைக்கப்படும். அதுவும் வர்க்கப் போராட்டத்தின் பகுதியே. எனவே இந்தத் திசையில் சோசலிச சமூ கத்தை வழிநடத்திட அதற்குரிய அரசு நிர்வாகத்தை, அதற்குரிய சட்ட விதிமுறைகள்  ஏற்படுத்தப்படும். ‘இத்தகைய ‘அரசு’ உதிரும் என்று  கம்யூனிஸ்டு கள் சொல்கிறார்களே, எப்போது உதிரும்’ என்று அம்பேத்கர் எழுப்பிய கேள்விகள் புதியவை அல்ல. அவற்றிற்கு மாமேதை லெனின் மிகத் தெளிவாக பதில் கொடுத்துவிட்டார் (படிக்க – ‘அரசும் புரட்சியும்’). மேலும் அவரே, உலகின் முதல் சோசலிசப் புரட்சியை வழிநடத்தியதுடன்,   சோசலிச‌க் கட்டமைப்பை உரு வாக்கி, மக்களிடையே‌ வறுமையும், வேலையின்மை யும்‌ ஒழிக்கப்பட்ட மேம்பட்ட சமூகத்தைப் பார்க்க முடியும் என நிரூபிக்கவும் செய்தார்.

அண்ணல் அம்பேத்கர்‌ எதிர்பார்த்ததைப் போல,  அரசு நிர்வாகத்தின் இடத்தை மதம் (குறிப்பாக பெளத்தம்) நிரப்பிவிடும் என்பது கற்பனையான வாதமே.  ரவிக்குமார் எம்.பி., அவர்கள் தனது கட்டு ரையில் அந்த கற்பனையை நிராகரித்துவிட்டார். எனினும், ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்ற கோட்பாட்டில் கம்யூனிஸ்டுகளுக்கே நம்பிக்கை இல்லாததால், அரசு உதிரும் என்கிறார்கள் என அம்பேத்கர் சொன்னதை,  கட்டுரையாளர் சுட்டிச்  செல்கிறார். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பது, ஆதிக்க சக்திகள் தம்முடைய சுரண்டல் நடைமுறை களையும், பாகுபட்ட செயல்பாடுகளையும் தொடர முடி யாமல் தடுத்து நிறுத்திட - உற்பத்தி சக்திகளின் மீது பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசு செலுத்துகிற முழுமையான அதிகாரமே என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புதிய சமூகத்தைக் கட்டமைக்க, அநீதிகளுக்கு முடிவுகட்ட, திட்டமிட்ட புரட்சிகரச் செயல்பாடுதான் ‘பாட்டாளிவர்க்க சர்வாதி காரம்’. 

கம்யூனிசம் சகோதரத்துவமற்றதா?

மூன்றாவது அம்சம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் பற்றியது. மார்க்சிய சிந்தனைகள் சமத்துவத்தை உறுதி செய்திடும், ஆனால் சுதந்திரத்திற்கும், சகோதரத்து வத்திற்கும் அது உறுதியளிக்கவில்லை என்பது போ லச் சொல்வது மார்க்சியத்தின் மீதான அவதூறாகும். பொதுவாக, மார்க்சியவாதிகள் ‘முதலாளிகளை’ அவர்களின் சுயநலத்தை நோக்கி விமர்சனக் கணை களை வீசினாலும், அவர்கள் வீழ்த்த நினைப்பது சுரண்டிக் கொழுக்கும் மூலதனத்தையே அன்றி, தனி மனிதர்களை அல்ல. முதலாளித்துவம் விதந்தோதுகிற பிரெஞ்சுப் புரட்சியில் எழுந்த ‘சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம்’ என்ற முழக்கம் மிகவும் ஈர்ப்பானது. ஆனால் அதனை நோக்கி முதலாளித்துவ சமுதாயம் என்ன செய்திருக்கிறது?.

முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் கூட வறுமையும், வேலையின்மையும் ஒழிக்கப் படவில்லை. பசித்தவர்களுக்கும், வயிறு வீங்கி செரிக்க மாட்டாதவர்களுக்கும் இடையில் நிலவக்கூடிய ‘சகோதரத்துவம்தான்’ என்னே ஒரு போலியான  முழக்கம்! சுரண்டப்படுவதற்கும், சுரண்டிக் கொழுப்ப தற்கும் உள்ள ‘சுதந்திரம்’தான் எவ்வளவு அநாகரீ கமான ஒழுக்கம். சோசலிசம் மட்டுமே வறுமையை ஒழித்து, அனை வருக்கும் வீடு, உணவு, மருத்துவம், பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட வாழ்வியலின் அனைத்து அம்சங்க ளையும் உறுதி செய்து, நிரூபித்துக் காட்டியுள்ளது. ஒரு நாட்டின் எல்லைக்குள் இருக்கும் குறைந்தபட்ச சாத்தியங்களை வைத்து அனைவருக்குமான மேம்பட்ட வாழ்வை எட்டுவதற்கு மார்க்சியமே வெற்றி கரமாக வழிகாட்டியுள்ளது. அதுதான்  சகோதரத்துவத்தையும், சுதந்திரத்தையும் பெரும்பான்மை மக்களுக்கு உறுதி செய்துள்ளது. உலகில் வர்க்கப் போராட்டம் நடந்து வருவதை எடுத்துக் காட்டும் மார்க்சியம், அதனை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம், இன்றுவரை தம்‌ சூழ்நிலைமைகளின் கைதியாக உள்ள மனிதர்களை, தமக்குத் தாமே தலைமையேற்று வழிநடத்தவும், உல கினை அனைத்து உயிர்களுக்குமானதாக மாற்றிய மைக்கும் வல்லமை பெற்றிடவும் வழிநடத்துகிறது. 

சமகால ஒற்றுமை

ரவிக்குமார் அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரையின் ஊடாக இந்திய கம்யூனிஸ்டுகள் மீது வைக்கப் பட்டுள்ள விமர்சனங்கள், சமகாலத்தில் அண்ணல் அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் விமர்சித்தார்கள் என்ப தில் இருந்து எழுகிறது. காந்தியும், தந்தை பெரியா ரும், அவர்கள் காலத்தில் செயல்பட்ட கம்யூனிஸ்டுக ளும்  இன்னும் வேறு பல சிந்தனையாளர்களும் ஒருவ ருக்கொருவர் விமர்சனத்தை முன்வைக்காமல் வளர்ந்திருக்கவே இல்லை. ஆனால் அவை எவ்விதத்திலும் தனிப்பட்டவை அல்ல. எல்லோரும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசினார்கள். உழைத் தார்கள். ஆனால் எது இறுதித் தீர்வு என்பது சார்ந்த  தத்துவார்த்த நடைமுறை விமர்சனங்கள் தான் அவை. இருப்பினும் அதே கட்டுரையில், சம கால அனுபவமும் வருகிறது. தனது சொந்த அனுபவங்களில் இருந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பகமான தத்துவமாக மார்க்சியமே இருக்கிறது என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார் கட்டுரையாளர்.  ஒற்றுமை சம காலத்தில் வலுப்பட்டே உள்ளது.

எனவே தலித் என்பவர், ஆதிக்கத்திற்கும் சுரண்ட லுக்கும் பாகுபாட்டிற்கும் எதிரானவர் எனில், அதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கமே.  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொடர்பில்லாத வேறுபட்ட பகுதியாக கம்யூனிஸ்டுகளை முன்வைப்பது, நெருடலான ஒன்று. சுரண்டப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களும் தான் இந்திய மண்ணில் செங்கொடியை வளர்த்தார் கள். செங்கொடிக்கு தங்கள் உதிரத்தை வண்ணமாக வழங்கினார்கள்.  நீலமும், சிவப்பும் விரும்பும் ஓர் எதிர்கால உலகம், வர்க்கப் பாகுபாடுகளை சகித்துக் கொண்டதாகவும், சுரண்டலும், பாகுபாடுகளும் நீடித்த ஒன்றாகவும் நிலவிட முடியாது. அதற்கான தெளிவுடன் போராட காரல் மார்க்ஸ் என்றென்றைக்கும் வழிகாட்டி நிற்கிறார். 

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்

 

;