articles

img

சுடு மணலில் வெறும் காலில் சுவடு பதித்து செங்கொடி பிடித்து... - வீ.அமிர்தலிங்கம்

தமிழக கிராமப்புற இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் எஃகு கோட்டையாக விளங்கிய நிலப்பிரபுத்துவக் கோட்டையைத் தகர்த்த உளிகளாக விளங்கிய தளபதிகளில் ஒருவராக, நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் - விவ சாயிகள் - குத்தகை வார விவசாயிகளின் வாழ்வா தார உரிமைக்காக களம் கண்ட, காலம் தந்த கள நாயகனாக ஜொலித்தவர்தான் தோழர். கோ.வீரய் யன். செங்கொடியின் பாதையில் 60 ஆண்டுக ளுக்கும் மேலாக மக்கள் பணியில் தடம் பதித்த தலைவராகத் திகழ்கிறார். 

பள்ளிப்படிப்பைத் துறந்து - பண்ணைத் தொழிலாளியாக...

அன்றைய நன்னிலம் வட்டம் சித்தாடி கிராமத்தில் ஏழை குத்தகை விவசாயியின் மகனாக பிறந்த தோழர்.வீரய்யன் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப் பட்டார். முதல் வகுப்பிலேயே குடும்பச் சூழ்நிலை காரணமாக சித்தாடி கிராமத்தின் அருகேயுள்ள செருகளத்தூர் பண்ணையில் விவசாயக் கூலி வேலை க்குச் செல்வதற்காக பள்ளிப்படிப்பைத் துறந்தார். பகல் முழுவதும் பண்ணையில் வேலை செய்துவிட்டு மாலைப் பொழுதில் அந்த கிராமத்தின் திண்ணைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் கல்வி பயின்றார். அவருக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பு அவ்வளவு தான் என்றாலும் இது நான்கு வகுப்புகளாக அன்று கருதப்பட்டது. எத்தனை வகுப்பு படித்தீர்கள் என்று கேட்குமளவு அல்லாமல், எத்தனை நாட்கள் பள்ளிக் கூடம் சென்றீர்கள் என்று கேட்குமளவுக்கு தான் இருந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்கும் அளவுக்கும், நடைமுறை கணக்குகளைப் புரிந்து கொள்ளும் அள வுக்குமே திண்ணைப் பள்ளி அவருக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. 

தஞ்சை செங்கொடி இயக்கத்தின் தளபதியாக...

1948ஆம் ஆண்டு ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தனது 16ஆவது வயதில் சேர்ந்த அவர், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட கடும் அடக்குமுறைக ளுக்கு எதிராகவும் முன்நின்றார். நன்னிலம் வட்டம் முழுவதும் தனது 15 ஆண்டுகால பணிகளால் கிராமப் புற மக்களை ஈர்த்தார். 1964ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது அதன் முன்ன ணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். தஞ்சை  மாவட்டத்தின் தலைவர்களில் ஒருவராக உயர்ந்த தோழர்.ஜி.வீ மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்க ளை நோக்கி அன்றாடம் பயணித்தார். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில், குறிப்பாக கூலி உயர்வுக்கான போராட்டங்கள் நூற்றுக் கணக்கான கிராமங்களில் முன்னெடுக்கவும், களம் காணவும் மாவட்டச் செயலாளராக இருந்து வழி நடத்தி வெற்றி கண்டார்.  தஞ்சை மாவட்டத்தில் 18 ஆண்டுகள் மாவட்டத் தலைவர்களில் ஒருவராக செயல்பட்ட அவர்,

பல்வேறு கிராமங்களுக்கு நடந்தே சென்று மக்களை அணிதிரட்டினார். சாலை வசதி, போக்குவரத்து வசதி கள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் பல துன்ப துயரங்களைக் கடந்தே அன்றைய தலைவர்கள் செங்கொடி இயக்கத்தை கட்டமைத்தனர்.  ஒன்றுபட்ட அன்றைய நாகப்பட்டினம் தாலுகா வின் இன்றைய நாகை, கீழ்வேளூர் ஒன்றிய பகுதிக ளான ஆவராணி, புதுச்சேரி கிராமங்களுக்கு இலுப்பூர் சத்திரம் சாலையிலிருந்தும், ஆலங்குடி, வடுகச்சேரி, இருக்கை, இராதாமங்கலம் உள்ளிட்ட கிராமங்க ளுக்கு தேவூர் சாலையிலிருந்தும் கோடையின் சுட்டெ ரிக்கும் வெயிலில், புதை மணலில் தகிதகிக்கும் மண் சாலையில் காலில் செருப்புமின்றி நடந்த நிகழ்வை தோழர்.ஜி.வீ ஒருமுறை நினைவு கூர்ந்தார். இவ்வா றாக கீழத்தஞ்சையின் கிராமங்கள் முழுவதும் கட்சி, விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத் தின் கட்டமைப்பை பலப்படுத்திட மகத்தான பங்க ளிப்பைச் செலுத்தினார்.  சமூகக் கட்டுமானம் உருவாக்கி வைத்துள்ள சாதியக் கட்டமைப்பில் தலித் அல்லாத குடும்பத்தில் தோழர்.ஜி.வீ பிறந்திருந்தாலும், தஞ்சை மண்ணிலும் - தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிரான அடக்குமுறை - ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களை யும் அணிதிரட்டி களம் கண்டார்.

விவசாயிகள் இயக்கத்தின் தலைவர்

கிராமப்புற இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவ ராக வளங்கிய தோழர்.ஜி.வீ தமிழகத்தில் விவசாயி களையும் - விவசாயக் கூலித் தொழிலாளர்களையும் அணிதிரட்டி அவர்களின் வாழ்வுரிமைக்கானப் போராட்டங்களை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திய தலைவராவார். 1974ஆம் ஆண்டு ஜனவரி 4-6 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 17ஆவது மாநில மாநாட்டில் மாநிலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார். அவர் செயலா ளராகச் செயல்பட்ட காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல கிராமங்களுக்குச் சென்று விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், கோரிக்கைகளை நிறைவேற்றிட குத்தகை விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளை அணிதிரட்டி களம் கண்டு வெற்றி கண்டார்.  

பின்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளராக 1992 ஏப்ரல் 8,9 தேதிகளில் திருச்சி மாவட்டம் லால்குடி யில் நடைபெற்ற மூன்றாவது மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டும், அதன் பிறகு மாநிலத் தலைவ ராக 2010ஆம் ஆண்டு வரையும், சிறப்பாகச் செயல் பட்டுள்ளார். விவசாயிகள் - விவசாயத் தொழிலா ளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை நுட்பமாக ஆய்வு செய்து - போராட்டங்களுக்குத் திட்டமிடுவதில் மகத்தான பங்களிப்பை தோழர்.ஜி.வீ செய்தார். விவசா யிகள் இயக்கத்தில் அவர் செயல்பட்ட காலத்தில் தான், நலவாரியச் சட்டம் உருவாக்கிடவும், நிலம் -  மனைப்பட்டாவுக்கான போராட்டங்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு போராட் டங்கள், வேலையைப் பறிக்கும் எந்திரப் பயன் பாட்டிற்கு எதிரான போராட்டங்களும் உச்சக்கட்டத் தில் நடந்தன. லட்சக்கணக்கான விவசாயிகள் - விவ சாயக் கூலித் தொழிலாளர்கள் அணி திரட்டப்பட் டார்கள். கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட்டன.  தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்களின் மாவட்ட அமைப்புகளை பலப்படுத்திட ஆக்கப்பூர்வ மான வழிகாட்டுதலை - உதவியை செய்துள்ளார். இரண்டு அமைப்புகளின் வலுவான மாநில மையச் செயல்பாட்டிற்கு தோழர்.ஜி.வீ பெரும் பங்காற்றி யுள்ளார். 

வர்க்கப் போரின் வழித்தடமாக...

கிராமப்புற உழைக்கும் வர்க்கத்தை ஒட்டுமொத்த மாக அணிதிரட்டிய அனுபவ வெளிச்சத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சென்று மக்களின் வர்க்கப் போருக்கு வழிகாட்டிய முன்னோடிகளில் ஒருவராக விளங்கினார்.  இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக செயல் பட்ட காலத்தில், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் துயரங்களையும் - அதற்கான மாற்றுத் திட்டங்க ளையும் சட்டமன்றத்தில் முன்வைத்தார். அரசு அமைத்த பல வேளாண் உயர்நிலைக்குழுக்களில் பங்கேற்றுச் செயல்பட்டார். அனைவரும் அணுகும் சட்டமன்ற உறுப்பினராக திகழ்ந்து நாகை தொகுதி மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் மக்களின் மனம் கவர்ந்த தலைவராக அரும்பணியாற்றினார். கட்சி யிலும் - விவசாயிகள் இயக்கத்திலும் ஏராளமான தலைவர்களை உருவாக்கிய தலைவராக அவரின் மகத்தான செயல்பாடுகள் இருந்தன. இயக்க வேலை யாக மாநிலம் முழுவதும் செல்லும் போதெல்லாம் கூட எடுத்துச் செல்லும், பத்திரிகை தாள்களையே படுக்கை விரிப்பாக மாற்றி உறங்குவார் என்று தோழர்கள் நினைவு கூரும் அளவிற்கு எளிய வாழ்க்கையை அவர் மேற்கொண்டார். 

செங்கொடியின் வழியில் திரட்டுவோம்!

கிராமப்புறங்களின் தன்மை இன்று வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. விவசாய நிலைமைகளில் பெரும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை கார்ப்ப ரேட் மயமாக்கி சிறு- குறு விவசாயிகளிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நவீன முயற்சிகளைத் துவக்கி யுள்ள காலமாக இது இருக்கிறது. நிலமற்ற ஏழை - விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு விவசா யத்தின் மூலம் கிடைத்து வந்த வேலைநாட்கள் குறைந்து - வருமானமிழந்து கிராமப்புற மக்களின் வாழ்க்கை நொறுங்கிக் கிடக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தை சிதைத்து - சீரழிக்கும் வேலையில் ஆட்சி யாளர்கள் அணுதினமும் ஈடுபட்டுள்ளனர்.  வாழ்க்கைக்கான உத்தரவாதத்தை இழந்து வரும் விவசாயிகள் - விவசாயக் கூலித் தொழிலாளர்க ளை நமது அன்புத் தலைவர் தோழர்.கோ.வீரய்யன் காட்டிய திசை வழியில், செங்கொடியின் பாதையில் அணிதிரட்டுவோம்!


கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்

இன்று (நவ.18)தோழர். கோ.வீரய்யன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்!

 

 

;