articles

img

இந்தி வழி சமஸ்கிருதமே மோடி அரசின் மொழிக் கொள்கை! - அருணன்

சமஸ்கிருதமும் இந்தியும் இந்திய மொழிகள்; அவற்றின் மீது நமக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அவற்றின் ஆதிக்கம் பிற இந்திய மொழிகளின், அதனால் பிற இந்தியர்களின் நியாயமான உரிமைகளைப் பறிக்கக் கூடியது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை  பாதுகாப்பு மாநாடு”  (ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை

இந்திய அரசின் மொழிக் கொள்கை சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் மற்றும் அன்று நிலவிய குறைவான தொழில்நுட்ப வசதியால் தீர்மானமானது. அந்நியர் ஆட்சிக்கு எதிரான போ ராட்டம் அந்நிய மொழிக்கு எதிரான போராட்டமாக வும் மாறியிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி ஒழிய வேண்டும் எனும் உணர்வு ஆங்கில மொழி ஒழிய வேண்டும் எனும் உணர்வாகவும் மாறியிருந்தது. ஒரு நாட்டின் அரசுக்கு ஒரு மொழிதானே அலுவல் மொழி யாக இருக்க முடியும் எனும் எண்ணமும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம், இந்தியர் ஆட்சி யில் இந்தி என்பதாக அது முடிந்தது! சுதந்திர இந்திய அரசியல்சாசனத்தின் சரத்து 343 கூறியது: “ஒன்றியத்தின் அலுவல் மொழியாக தேவ நாகரி வரிவடிவிலான இந்தி இருக்கும்”. போனால் போகிறது என்று இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஆங்கில மும் அலுவல் மொழியாக இருக்கும் எனப்பட்டது. தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழிகளின் கதி..? எட்டாவது அட்டவணையில் “மொழிகள்” எனும் தலைப்பில் வெறுமனே அவை பட்டியலிடப்பட்டன!

கமிஷன் அமைத்து கொடுமை

இதிலே இன்னும் கொடுமை என்னவென்றால்  “எட்டாவது பட்டியலில் உள்ள பல மொழிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு கமிஷன் அமைக்கப்படும். அதன் கடமை ஒன்றியத்தின் அலுவல்களுக்கு இந்தியைக் கூடுதலா கப் பயன்படுத்துவது பற்றி பரிந்துரைகள் தருவது” என்று பணித்தது சரத்து 344. அதாவது விரைந்து தற் கொலை செய்து கொள்வது எப்படி என்று சம்பந்தப் பட்டவர்களே பரிந்துரை வழங்க வேண்டும்! மொத்தத் தில், இந்திய அரசின் மொழிக் கொள்கையானது ஒன்றி யத்தில் இந்தியே என்று வரையறுக்கப்பட்டு, அதை இந்தி பேசாதவர் மீது திணிப்பதாக அமைந்து போனது. 1950இல் நடப்புக்கு வந்த அரசியல்சாசனத்தின்படி 1965இல் ஆங்கிலத்தின் பயன்பாடு நீக்கப்பட்டு இந்தி மட்டுமே ஒன்றியத்தின் அலுவல் மொழியாக மாற இருந் தது. இதை எதிர்த்துத்தான் தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்தது, வேறு மாநிலங்களிலும் அது எதிரொலித் தது. இந்தச் சூழலில்தான் 1959இல் நாடாளுமன்றத் தில் கீழ்வரும் உறுதிமொழியை பிரதமர் நேரு தந்தார்:

இந்தி பேசாத மக்கள் தான்  முடிவு எடுக்க வேண்டும்

“எவ்வளவு காலத்திற்கு மக்கள் விரும்புகிறார்க ளோ அதுவரையில் ஒரு மாற்று மொழியாக ஆங்கி லத்தை நான் வைத்திருப்பேன். இதற்கான முடிவு கூறும் உரிமையை இந்தி பேசும் மக்களிடம் விடமாட்டேன், இந்தி பேசாத மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்”. இது இந்தி பேசாத மக்களை ஓரளவு ஆசுவாசப் படுத்தியது. நேரு மறைவிற்குப் பிறகு 1964இல் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் இந்தி திணிப்பு தீவிர மானது.1965இல் இந்தி மட்டுமே ஒன்றியத்தின் அலுவல் மொழி எனும் நிலையை நோக்கி அவரின் அரசு வேகமாகச் சென்றது. இதனால் தமிழ்நாட்டில் மாபெரும் மொழிப் போராட்டம் வெடித்தது.1964இல் உதயமாகியிருந்த மார்க்சிஸ்ட் கட்சி அந்தப் போராட் டத்தை ஆதரித்தது. அதன் 8ஆவது மாநில மாநாட்டு அறிக்கை கூறியது: “1965 ஜனவரி இறுதியில் காங்கிரஸ் சர்க்காரின் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துப் பெரும் இயக்கம் வெடித்தது.  அசுர அடக்குமுறை கொண்டு காங்கிரஸ் ஆட்சி மக்களைத் தாக்கியது. பல இடங்களில் இந்த அடக்கு முறையை மக்கள் எதிர்த்து நின்றனர். இந்த அடக்கு முறையை வன்மையாக நமது கட்சி கண்டித்தது. இந்த இயக்கத்தையொட்டி எண்ணற்ற நமது கட்சித் தொண்டர் களும் மாநிலம் முழுவதும் சிறைப்படுத்தப்பட்டனர்”.

போராட்டமும் அரசின் சமரசமும்

போராட்டத்தின் வீச்சையும் வேகத்தையும் கண்டு அதைத் தணிக்கும் வகையில் ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும் எனும் சமரசத்திற்கு இந்திய அரசு வந்ததேயொழிய அதன் அடிப்படைக் கோட்பாடு மாற்றப்படவில்லை. இன்றுவரை ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்திதான், தமிழ் உள்ளிட்ட இதர மொழிகள் வெறுமனே எட்டாவது அட்டவணையில்தான்! இந்த மொழிக் கொள்கையால் பயன் அடைந்தது இந்தி பேசுவோர் மட்டுமே. அவர்களது தாய்மொழி அவர்களது மாநிலத்திலும் அலுவல் மொழி, ஒன்றி யத்திலும் அலுவல் மொழி. தமிழ் உள்ளிட்ட பிறரின் மொழிகள் அவரவர் மாநிலத்தில் மட்டுமே அலுவல் மொழி. ஒன்றியத்தோடு தொடர்பு கொள்ள இந்தி அல்லது ஆங்கிலம் எனும் ஒரு வேற்று மொழியை அவர்கள் நம்பியிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது மொழிச் சமத்துவத்தை காவு வாங்கியது.

மும்மொழித் திட்ட அறிவிப்பு

இது நேரடியாக கல்வியில் எதிரொலித்தது. இந்தி பேசுவோர் இந்தி மட்டும் படித்தால் போதும். பிற மொழிக்காரர்கள் தத்தம் தாய்மொழியோடு இந்தி அல்லது ஆங்கிலத்தை படித்தாக வேண்டும். இந்தச்  சூழலில்தான் 1968இல் மும்மொழித் திட்டம் என்பதை அமலாக்கப் போவதாக அறிவித்தது ஒன்றிய அரசு. அதன்படி இந்தி பேசும் பகுதிகளில் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு ஒரு நவீன இந்திய மொழி என்றும், இந்தி பேசாத பகுதிகளில் பிரதேச மொழியோடு இந்தி மற்றும் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என்றும் அறிவிக் கப்பட்டது. ஆக இந்தியா முழுக்க அனைவரும் இந்தி படிப்பார் கள்! இந்திக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை, அது அவர்களின் தாய்மொழி. மற்றவர்களோ இந்தி, ஆங்கி லம் எனும் இரு வேற்று மொழிகளைப் படித்தாக வேண்டும். இந்திக்காரர்களும் ஆங்கிலம் மற்றும் இன் னொரு இந்திய மொழி படிப்பார்களே என நினைக்க லாம். ஆனால் அதற்கு அவசியம் இல்லை. காரணம் ஒன்றியத்திலும் இந்தி தான் இருக்கிறது, பிறகு ஏன் படிக்க வேண்டும்? அதுதான் நடந்தது.

இந்தி பேசுவோருக்கு  ஒரு மொழித் திட்டம்

1968முதல் இன்றுவரை எத்தனை இந்திக்காரர்கள் பிற இந்திய மொழிகளை படித்திருக்கிறார்கள்? கணக்கு தருமா அரசு? நடப்பில் என்னாயிற்று என்றால், இந்தி பேசாதவருக்கு மும்மொழித் திட்டம், இந்தி பேசுகிறவருக்கு ஒரு மொழித் திட்டம்! இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கணிசமானோர் என்பது உண்மையே. அதேநேரத் தில் பிறமொழிகளைப் பேசுவோரும் கோடிக்கணக் கில் இருக்கிறார்கள். உதாரணமாக 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ் பேசுவோர் ஏழு கோடிப் பேர். இன்று அவர்கள் எட்டு கோடிப் பேராக இருப்பர். இப்படித்தான் பல மொழியினரும். இவர்க ளது மொழிகளுக்கு ஒன்றியத்தில் இடமே இல்லையா? இல்லை என்பது மட்டுமல்லாது, இந்தி எனும் ஒரே யொரு மொழி இதர அத்தனை கோடிப் பேர் மீதும் திணிக்கப்படும்போது ஏற்படும் விளைவு நிச்சயம். நல்லதாக இருக்காது.

ஐரோப்பிய ஒன்றியத்தின்  அலுவல் மொழிகள் 24

எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிக ளையும் எப்படி ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக ஆக்க முடியும் என கேட்கலாம். இந்த நவீன யுகத்தில் அது சாத்தியமே. ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு  நாடுகள் உள்ளன, அதன் அலுவல் மொழிகள் 24. நவீன மொழிபெயர்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒன்றியத் தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் கூறுகிறது: “ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகன் என்ற முறை யில் அதன் நிறுவனங்களோடு 24 அலுவல் மொழிகளில் எந்த ஒன்றின் மூலமாகத் தொடர்பு கொள்ளவும், அதே மொழியில் பதில் பெறவும் ஒருவருக்கு உரிமை உண்டு”.

ஆர்எஸ்எஸ்சின் கொள்கையும் புதிய கல்விக் கொள்கையும்

இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு இத்தகைய ஜனநாயகத் தீர்வே சரியானதாக இருக்கும். முந்தைய ஆட்சியாளர்களுக்கே இத்தகைய பார்வை இல்லை என்றால், பாஜக ஆட்சியாளர்கள் பற்றிச்  சொல்ல வேண்டுமா? பாஜக என்பது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் பிரிவு. அதன் மொழிக் கொள்கையோ மகா அடாவடித்தனமானது. அதைப் பொறுத்தவரை சாம்ராஜியவாதிகள் காலம் போல சமஸ்கிருதமே அரசில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் லட்சி யம் கொண்டது. அதற்கு முதல் படியாக ஆங்கிலத்தை சுத்தமாக அகற்றிவிட்டு, இந்தியை மட்டுமே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி ஆக்க வேண்டும் என  ஆசை கொண்டு அலைவது. மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையில் அது அப்படியே வெளிப்படுவதை நோக்குங்கள்: “மும்மொ ழித் திட்டம் தொடரும். அந்த மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவில் பிறந்த மொழிகளாக இருக்கவேண்டும்”. (பத்தி 4.13) இதன் பொருள் ஆங்கிலத்தோடு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைக்கூடக் கற்கலாம். புதிய கொள்கை அடுத்துச் சொல்கிறது: “சமஸ்கிருதம் ஒரு முக்கியமான நவீன மொழி. அது பள்ளி மற்றும் உயர் கல்வியின் அனைத்து மட்டங்களிலும் வழங்கப்படும். மும்மொழித் திட்டத்திலும் ஒரு விருப்ப மொழியாக இருக்கும்”. (பத்தி 4.17) இதுவெல்லாம் வெறும் கொள்கை அறிவிப்பு அல்ல. நடைமுறைத் திட்டத்தோடு இணைந்த திட்ட மிட்ட பயணம். புதிய கொள்கை பிற்பகுதியில் அறி விக்கிறது: “பெரும் எண்ணிக்கையிலான சமஸ்கிருத ஆசிரியர்கள் தொழில்முறையினராக நாடு முழுவ தும் உருவாக்கப்படுவார்கள். அதற்காகக் கல்வி மற்றும் சமஸ்கிருதத்தில் இரட்டைப் பட்டங்கள் தரும் பி.எட். படிப்பு வரும்”.(பத்தி 22.15)

அனைத்தும் அலுவல் மொழியாக அரசியல் சாசனத்தை திருத்த...

சுதந்திர இந்திய அரசின் மொழிக் கொள்கையா னது ஒன்றியத்தில் இந்தி, அதற்கேற்ற கல்வி என்பதா வே இருந்து வந்தது. அதுவே அரசியல்சாசனத்திலும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த நவீன காலத்தில் இதை மாற்றியாக வேண்டும். ஒன்றிய அரசு அனைத்து மொழி யினர் தருகிற வரிப்பணத்தில் இயங்குவது என்பதால் அனைத்து மொழிகளும் அங்கே அலுவல் மொழிக ளாக இருக்க வேண்டும், அதற்கேற்ப அரசியல் சாச த்தை திருத்த வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பாக ஒன்றியத்திலே இன்று அமர்ந்திருப்பது இந்த ஜனநாயகக் மொழிக் கொள்கை க்கு நேர் எதிரான லட்சியத்தைக் கொண்ட ஒரு சனாதன பாசிசத்தன்மை கொண்ட அரசு. அது சமஸ்கிருத ஆதிக்கத்தைக்கொண்டுவர இந்தித் திணிப்பில் தீவிர மாக இறங்கியிருக்கிறது. மோடி அரசின் திணிப்பு வேலை களை இப்படி சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமஸ்கிருதமும் இந்தியும் இந்திய மொழிகள்; அவற்றின் மீது நமக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அவற்றின் ஆதிக்கம் பிற இந்திய மொழிக ளின், அதனால் பிற இந்தியர்களின் நியாயமான உரி மைகளைப் பறிக்கக் கூடியது. ஆகவே அவற்றின் திணிப்பை எதிர்க்கிறோம். மொழிகளின் சமத்துவம் நாட்டின் ஒற்றுமைக்கு அஸ்திவாரம், வளத்திற்கு உத்தரவா தம். அத்தகைய நோக்கிலேயே மொழிப் பிரச்சனைக் கான நியாயமான தீர்வை முன்மொழிகிறோம்.