articles

img

ஜிஎஸ்டி வசூல் வேட்டை - மாநிலங்களுக்கு இழப்பீடு நீட்டிப்பு வழங்க மறுப்பதா?

நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

புதுதில்லி,ஆக.2- ஒன்றிய பாஜக அரசு ஜிஎஸ்டி வரி வசூல் வேட்டையை அமோகமாக நடத்திவிட்டு, மாநில அரசுகளுக்கோ “இழப்பீடு நீட்டிப்பு” மறுப்பது ஏன் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: “ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு கோரிக்கை: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது கவுன்சில் கூட்டம்”- இப்படித்தான் 2022 ஜூன் 30  செய்திகள் கூறின.  மாநிலங்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து இந்த கோரிக்கையை வைத்ததாகவும் செய்திகள் தெரி வித்தன.  இது குறித்து நான் நாடாளுமன்றத்தில் கேள்வி  எழுப்பியிருந்தேன். 

அதில் ஜி.எஸ்.டி விகிதங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என்ன? மாநிலங்களுக்கு நிலுவையாக உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை எவ்வளவு? மாநில அரசுகள் இந்த இழப்பீடு முறைமை நீடிக்க வேண்டு மென்ற கோரிக்கை வைத்த விவரங்கள் என்ன? சி.ஜி.எஸ்.டி: எஸ்.ஜி.எஸ்.டி பகிர்வு விகிதத்தில் மாற்றங் கள் கொண்டுவரப்படுமா? ஆகியன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தேன்.  இதற்கு நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்துள்ளார். 

47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் வரி விதிப்பில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் பற்றி அவர் விவரித்துள்ளார். அவை எல்லாம் ஏற்கெனவே மக்களின் கோபத்திற்கு ஆளாகி இருப்பவைதான்.  அது போல ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு நிலுவையாக 30.06.2022 அன்று உள்ள ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை ரூ. 35,266 கோடிகள். அதில் தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவை ரூ. 2493 கோடி. புதுச்சேரி நிலுவை ரூ. 146 கோடி. இவை எல்லாம் விவரங்கள். ஐந்தாண்டுகளாக இழப்பீடு முறைமை நடைமுறையில் இருந்தாலும் அத் தொகைகளை பெறுவதற்கே மாநிலங்கள் போராட வேண்டி இருந்தது. தற்போது 30.06.2022 உடன்  அம் முறைமை முடிவுக்கு வந்து விடும் என்ற நிலை யில்தான் மாநிலங்களின் குரல் “நீட்டிப்பு வேண்டும்” என கவுன்சில் கூட்டத்தில் ஓங்கி ஒலித்தன. இதில் பா.ஜ.க ஆளும் மாநில குரல்களும் இருந்தன. ஆனாலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.  இப்போதைய பதிலில் ஐந்து அம்சங்கள் மிக முக்கியமானவை.  

ஒன்று, அரசியல் சாசனத்தின் 102 வது திருத்த சட்டம் 2016, பிரிவு 18 இன் படி ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே இழப்பீடு நீடிக்கும் என்று இருக்கிற நிலையை அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார். இதன் பொருள் எத்தனை மாநிலங்களின் குரல் எவ்வளவு உரக்க கேட்டாலும் ‘எங்கள் செவிகள் கார்ப்பரேட்டுகளின் தனிச் சேவைக்கு மட்டுமே’ என்கிறார்கள்.  இரண்டாவது, இந்த இழப்பீடுக்காக விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி இழப்பீடுக்கான செஸ் வரி வசூல் தொடரும், அது பழைய பாக்கிகளுக்காகவும், கடந்த கால இழப்பீடு தொகைக்காக ஒன்றிய அரசு பட்டுள்ள கடன்களை திரும்பச் செலுத்தவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதன் பொருள் மக்களி டம் செஸ் வரி வசூல் தொடரும், ஆனால் அது மாநிலங்களுக்கு இனி போகாது என்பதே. 

மூன்றாவது, எந்தெந்த மாநிலங்கள் இழப்பீடு முறை நீட்டிக்கப்பட வேண்டும் அல்லது வேண்டிய தில்லை என்று கேட்கப்பட்டதற்கு “சில” மாநிலங்கள் நீட்டிப்பு கேட்டன என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத் திற்கு கூட எத்தனை மாநிலங்கள் என்ன நிலை எடுத்தன என்பதை தெரிவிக்க மாட்டார்கள் என்றால் அது என்ன ஜனநாயகம். கூட்டாட்சி உணர்வை புறக்கணிக்கிறோம் என்று அம்பலப்பட்டு விடுவோம் என்பதாலா?  நான்காவது, ஜி.எஸ்.டி வசூல் அமோகமாக இருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஜூலை மாதத்தில்  ரூ.1.45 லட்சம் கோடிகளை தொட்டு ஆண்டு உயர்வு விகிதம் 56  சதவீதமாக  இருக்கிறது. மாநில அரசுகளுக்கு வருகிற வருவாயில் இந்த இழப்பீடு பெரும் பங்காக இருக்குமா? என்று கேட்டதற்கு “இல்லை” என்று அமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒரு பக்கம் ஒன்றிய அரசின் வசூல் வேட்டை அமோ கம். இன்னொரு பக்கமோ, மாநில அரசுகளுக்கு “இழப்பீடு நீட்டிப்பு” மறுப்பு. 

ஐந்தாவது, சில மாநிலங்கள் சி.ஜி.எஸ்.டி : எஸ்.ஜி.எஸ்.டி பகிர்வு விகிதம் மாற்றப்பட வேண்டும் என்ற மாற்று ஆலோசனைகளையும் வைத்தன என்பது செய்திகள். அது குறித்த நேர்மறை அணுகுமுறை ஒன்றிய அரசிடம் என்ன என்ற எனது கேள்விக்கு  “இல்லை” என்று ஒரு வரி பதில்.  ஒன்றிய கல்லாவில் குவிப்பதற்கு மட்டும் ஓராயிரம் வரிகளைப் போடுகிற ஒன்றிய அரசு மாநிலங்க ளின் குரலுக்கு மட்டும் “இல்லை” என்று ஒரு வரியில் பதில் சொல்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு முற்றிலும் விரோத மானது. இதற்கு எதிராக மாநிலங்களின் குரல் ஓங்கி முழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.