articles

img

“அன்புள்ள சைனுவுக்கு, நான் இங்கு நலம், நீயும்…” - மு. இக்பால் அகமது

கேரளாவின் கிராமம் ஒன்றில் ஆற்று மணல் அள்ளும்தொழில் செய்பவன் நஜீப்.  எப்போதும் நீரோடு விளையாடும் தொழில் ஆதலால் அடிக்கடி இருமலும் காய்ச்சலும் அவனை வாட்டுகின்றது.  அம்மாவின் வற்புறுத்த லுக்கு இணங்க சைனுவை திருமணம் செய்து  கொள்கின்றான்.  சைனு நான்கு மாதக்கர்ப்பிணி யாக இருந்தபோதுதான் கருவட்டாவில் இருந்த ஒரு நண்பர், சவூதி அரேபியா செல்வதற்கான ஒரு விசா விலைக்கு இருப்பதாக சொல்கின்றார்.  இந்தத் தொழிலின் அவஸ்தையும் பட்ட கடன்களும் அவனுக்குள் வேறு ஒரு ஆசையைவிதைக்கின்றன.   உம்மாவையும் ஆறு மாதக்கர்ப்பிணியான சைனுவையும் பிரிந்து பம்பாயில் விமானம் ஏறி சவூதி அரேபியாவின் ரியாத்தில் வந்து இறங்குகின்றான்.  இவனுடன் அதே ஊர்க்காரனான ஹக்கீம் என்ற இருபது வயதுக்கும் குறைவான இளைஞனும் வருகின்றான்.  பம்பாயில் இரண்டு வாரங்கள் இருந்தபோது ‘ஹக்கீம், நீ இங்கேயே இருந்து ஹிந்தி சினிமாவில் சான்ஸ் தேடு, கண்டிப்பாக உனக்கு வாய்ப்பு வரும்!’ என்று நஜீப் அவனிடம் சொல்கின்றான், அந்த அளவுக்கு ஹக்கீம் ஒரு அழகன்.  விசயம் என்னவெனில் நஜீபை வேலைக்கு அனுப்பியவர் அவன் என்ன வேலைக்காகப் போகின்றான் என்று அவனிடம் சொல்லவும் இல்லை, இவனும் கேட்கவில்லை!  ரியாத் விமானநிலையத்தில் தன் முதலாளி வந்து அழைத்துச் செல்வார் என்று பல மணி நேரம் காத்திருந்தபின் இரவு நேரத்தில் அங்கு வந்த ஒரு அரேபியன் இவர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு நடக்கின்றான், அவன் ஆடை மிகவும் அழுக்கடைந்து நாற்றம் வீசுகின்றது, அவன் மேனியில் இருந்தும் மிகக்கெட்ட துர்வாடை வீசுகின்றது, அவனது ஆடையும் அப்படியே.  இருவரும் அவன் பின்னால் நடக்க, ஒரு துருப்பிடித்த பிக்அப் (சிறிய சரக்கு வாகனம்) வண்டியின் பின்னால் உட்கார்ந்து இரவு முழுக்க பாலை வனத்தின் ஊடாகப்பயணிக்கின்றார்கள்.  வழியில் ஒரு இடத்தில் வண்டி நிற்க ஹக்கீமை இறக்கிவிடு கின்றான்.  மீண்டும் பயணித்து மையிருளில் நஜீப் வந்து சேர்ந்த இடம் எது? அங்கே வீசிய சாணம், மூத்திர வாடை ஆகியவற்றை வைத்து கால்நடைகள் அடைக்கப்பட்ட இடம் என்பதை உணர்ந்து கொள்கின்றான்.  

கட்டிலில் ஒரு கொடூரமான ஒருவம் படுத்துள்ளது.  அவன் உடலில் இருந்து வீசும் நாற்றமோ எல்லாவற்றையும் தாண்டியதாக  மிகக்கொடூரமாக உள்ளது.  சகிக்கமுடியவில்லை.  வேறு கட்டில் எதுவும் இல்லாதபடியால் வெற்றுத்தரையில் மணலில் படுத்து உறங்கு கின்றான்.  விடியும்போது அவனைப்பார்க்கின்றான்.  மிக நீண்டும் சிக்குப்பிடித்தும் தொங்கும் தலை முடியுடனும் தாடியுடனும் பல வருடங்களாக வெட்டப்படாத நகங்களுடனும் நிறம் மாறி  அழுக்கடைந்துபோன உடையுடனும் இருக்கும்  அவனிடம் இவன் பேச முயற்சிக்க அவனோ ஒரே ஒரு சொல்லைக்கூட பேசாமல் வெறித்துப் பார்க்கின்றான்.   வெளிச்சத்தில்தான் தெரிகின்றது, எல்லையற்ற மிக மிக நீண்ட மணலைத்தவிர வேறு எதுவும் அற்ற, புல் பூண்டு செடி கொடி எதுவுமற்ற, கண்ணுக்கு எட்டிய தொடுவானம் வரை ஒரே ஒரு மனிதனும் இல்லாத ஒரு பாலைவனத்தின் நடுவே தான் இருப்பதை பார்க்கின்றான்.  ஆடுகளையும் ஒட்டகங்களையும் பார்க்கின்றான்.  தான் இருப்பது அவற்றை மேய்க்கவும் கட்டவும் ஆன மஸாரா என்ற தொழுவம் என்று உணர்கின்றான்.  சற்றுத் தொலைவில் உள்ள ஒரு கூடாரத்தில் தன்னை அழைத்துவந்த அர்பாப் (முதலாளி) இருப்பது தெரிகின்றது.  இவனுக்கு ஒரு விசயம் தெளிவாகப் புரிகின்றது, தான் இனி எப்போதுமே மீள முடியாத நரகத்தில் வந்து விழுந்துவிட்டதை உணர்கின்றான்.  ஆடுகளுடனும் ஒட்டகங்களுடனும்தான் தன்  எதிர்காலம் கழியப்போகின்றது என்ற உண்மை,  ஒரே நாளில் தன் வாழ்க்கை பெரும் பாதாளத்தில் வீழ்ந்துவிட்ட உண்மை சுள்ளென உரைக்கும்போது கையாலாகாமல் மனம் குமைந்து அழுகின்றான்.  வெட்டவெளியில் (தனியாக அதற்கென இடம் இல்லாததால்) மலம் கழித்து வந்தபின் வாளியில் தண்ணீர் எடுத்து கழுவப்போகும் நொடியில் அவன் மீது பெல்ட் அடி விழுகின்றது.  புரிந்துகொள்ளும் முன் அர்பாப் அவனை தன் பெல்ட்டால் அடித்துப் புரட்டி துவைத்து விடுகின்றான்.  தண்ணீர் மிக அரியபொருள், குண்டி கழுவப்பயன்படுத்தும் உன்னை கொன்றுவிடுவேன் என்று கடுமையாக எச்சரிக்கின்றான்.  ஆற்றுநீரில் விளையாடுவதே வாழ்க்கையென இருந்த நஜீப்புக்கு தண்ணீர் இங்கே கிடைத்தற்கரிய பொருளாகின்றது.  குபூஸ் எனப்படும் ரொட்டியும் அதை நனைத்துச்சாப்பிட தண்ணீரும் தருகின்றான்.  காலை உணவு குபூசும் தண்ணீரும், மதிய உணவு குபூசும் தண்ணீரும், இரவு உணவு குபூசும் தண்ணீரும்.  தவிர அர்பாப்பின் கையில் எப்போதும் துப்பாக்கியும் பைனாகுலரும் இருப்பதையும் பார்த்து இங்கிருந்து தப்ப எண்ணு வதும் சாவதும் ஒன்றே என்பதை தெரிந்து கொள்கின்றான். 

பகலில் தீயெனச்சுட்டெரிக்கும், இரவில் மோசமாக குளிர்ந்துவிடும் பாலைவனத்தில் நக நுனியளவும் புல்லும் கூட இல்லை எனில் எதன் பொருட்டு இந்த ஆடுகளையும் ஒட்டகங்களையும் மேய்க்க வேண்டும்? இறைச்சிக்காகவே வளர்க்கப் படும் இந்தப் பிராணிகளை ஒரே இடத்தில் அடைத்து வைக்காமல் அவற்றுக்கு உடற்பயிற்சி அளிப்பதே இந்த மஸாராவின் நோக்கம்.  அவ்வளவு தான்.  அப்படியெனில் நேற்றிரவு ஹக்கீமையும் இப்படியான ஒரு மஸாராவில்தான் இறக்கி விட்டிருப்பான், அதுவும் இங்கே அருகில்தான் இருக்கக்கூடும்.  வெயிலிலும் குளிரிலும் பரந்துபட்ட ஆடு களையும் ஒட்டகங்களையும் மேய்ப்பது மட்டுமே இவன் வேலை.  நஜீப் நினைத்ததுபோல அது அப்படி ஒன்றும் எளிதான வேலையாக இல்லை.  மிகப்பரந்த எல்லையற்ற மணற்பெருவெளியில் உச்சந்தலையில் தீயை வைத்து எரிப்பதுபோல் அனல் கக்கும் பாலையில், ஆடுகள் திசைக்கொன்றாக ஓடும்.  காலையில் அவற்றை வெளியேற்றி அவற்றில் ஒன்று கூட தப்பாமல் ஒன்று சேர்த்து இருட்டுவதற்குள் மஸாராவிற்குள் அடைப்பது என்பது உயிர்போகின்ற பெரும் அவஸ்தையாக உள்ளது.  சிறிய தவறு நேர்ந்தாலும் அர்பாப் தன் பெல்ட்டால் அடித்து துவைக்கின்றான், கட்டி வைத்து அடிக்கின்றான், பட்டினி போடு கின்றான். 

வந்து சேர்ந்த தொடக்க நாட்களில் தன் நிலையையும் உம்மாவையும் சைனுவையும் பிறக்கப்போகும் குழந்தையையும் எண்ணி இரவுகளில் கண்ணீர் சிந்தி அழுதுகொண்டு இருந்த நஜீப்பின் நினைவுகளில் இருந்து காலப்போக்கில் அவர்கள் மறைந்து விடுகின்றார்கள், ஆடுகளும் ஒட்டகங்களும் மட்டுமே அவனுக்கு உறவுகளாகி விடுகின்றன.  ஆடுகளுக்கு அவன் பெயரும் வைத்து அழைக்கின்றான், அவற்றுடன் பேசுகின்றான், அதன் மூலம் மனிதர்களுடன் தான் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றான்.  நாளடைவில் அவனது தலைமுடியும் தாடியும் நீண்டு வளர்ந்து சிக்குப்பிடித்து தொங்குகின்றன, நகங்கள் வெட்டப்படாமல் அழுக்கடைந்து நீள்கின்றன, அணிந்திருக்கும் ஒற்றை ஆடையும் அழுக்கடைந்து முடைநாற்றம் வீசுகின்றது.  குளிப்பதே இல்லாததால் உடலில் அழுக்கு சேர்ந்து கொப்புளங்கள் தோன்றி துர்நாற்றம் வீசுகின்றது.  ஆடுகளிலிருந்தும் ஒட்டகங்களில் இருந்தும் வெளிப்படும் சிறு பூச்சிகளும் பேன்களும் அவனது உடலின் மறைவிடத்தில் வந்து குடியேறுகின்றன.  மனிதர்களுடன் பேச மறந்தவனாகின்றான்.  வந்து சேர்ந்த நாள் முதலாய் தான் பார்க்கும் கொடூர மனிதன் ஏன் தன்னுடன் ஒற்றை வார்த்தையும் பேசாமல் இருக்கின்றான் என்பதற்கான காரணத்தை நஜீப் புரிந்துகொள்கின்றான்.  ஒரு நாள் காலை இந்தக் கொடூரமனிதனும் காணாமல் போகின்றான்.  எப்படியோ அவன் தப்பித்து விட்டான்,  நன்றாக இருக்கட்டும் என்று அல்லாவை பிரார்த்திக்கின்றான்.  எல்லாம் வல்ல இறைவன் தனக்கும் ஒரு வழிகாட்ட வேண்டும் என்று கண்ணீ ருடன் வேண்டுகின்றான். 

தன் மேய்ச்சல் எல்லையையும் தாண்டி கண்ணுக்கு எட்டாத நெடுந்தொலைவுக்கு இவன் சென்று பார்க்கின்றான்.  பாலைவன மணலில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனிதனின் கை வெளியே தெரிய அதிர்ச்சி அடைகின்றான்.  கையில் இருக்கும் குச்சியால் மண்ணை தோண்டும்போது ஒரு இடுப்பு பெல்ட் வெளியே தெரிகின்றது.  அது அந்தக் கொடூர மனிதன் அணிந்திருந்த பெல்ட் அல்லவா! எனில் தன் வாழ்க்கை? யா அல்லாவே! இதுதான் உன் கருணையா? இதே பாலைவன மண்ணில்தானே நபிமார்களுக்கு காட்சியளித்து வசனங்களையும் அறிவுரைகளையும் வாரி வழங்கினாய் அல்லாவே, நஜீப்பின் வாழ்க்கையை இப்படியே நீ முடித்து விடுவாயா எல்லாம் வல்ல இறைவனே? நரகத்தையும் சொர்க்கத்தையும் குர் ஆனில் வாசித்துள்ளேன், உண்மையான நரகம் இதுதான்! மூன்று வருடங்கள் ஓடியபின் நரகத்தின் படுகுழியில் இருந்து தப்பிக்கும் அந்த ஒரே ஒரு பெருவாய்ப்பு, இனி என்றுமே வராத ஒரே வாய்ப்பு வந்து சேர்கின்றது.  மஸாராவில் இருந்து தப்பிக்கின்றான், அடுத்த மஸாராவில் இருக்கும் ஹக்கீமுடன் சோமாலியா தேசத்தவ னான இப்ராஹிம் காத்ரி காட்டும் வழியில் இர வோடு இரவாக நரகத்தில் இருந்து வெளியேறு கின்றார்கள்.  இந்த நெடிய பாலைவனத்தின் நீள அகலங்களையும் குணத்தையும் நன்கு அறிந்தவனும் வளர்த்தியும் உடல் வலுவும் கொண்டவனும் ஆன காத்ரி அல்லா அனுப்பிய தூதுவனாக நஜீப்புக்கு தெரிகின்றான்.  ஆனால் அந்த இரவில் அவனுக்கு திறக்கப்பட்டது வேறொரு  நரகத்தின் நுழைவாயில் என்பதை பொழுது விடியும்போது உணர்கின்றான் நஜீப்.  

“ஆடு மேய்ப்பவனாக வேலை கிடைத்தபோது என் கனவிலிருந்து அது எத்தனை தொலை வில் இருந்தது என்பதை வலியுடன் நினைத்துப் பார்த்தேன்.  தூரத்தில் இருந்து பார்க்க நன்றாகத் தெரிவனவும் என்னவென்றே தெரியாதனவும் குறித்து நாம் கனவு காண்பது கூடாது.  அத்தகைய கனவுகள் நனவாகும்போது அவை ஏற்றுக்கொள்ள முடியாதவைகளாக இருக்கின்றன” என்று நொந்து பேசும் நஜீப்பின் குரலில் ஒலிப்பது யாருடையது? நஜீப்பின் குரல் அல்ல.  தன் குடும்பத்தின் எதிர்காலத்தின் பொருட்டு பொருளீட்டும் ஒரே ஒரு ஒற்றை ஆசையில், பெற்றோரையும் மனைவி பிள்ளைகளையும் உறவுகளையும், விட்டுவிட்டு பல ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் அரேபிய பாலைவனங்களில் அடக்குமுறை எனும் நுகத்தடியை சுமந்தவாறே உழைத்து ஓடாகி மனித உணர்வுகள் மரத்துப்போய் வெறும் கூடாக திரியும் பல லட்சம் இந்திய உழைப்பாளிகளின் குரல் அது.   உண்டும் உண்ணாமலும் உறங்கியும் உறங்காமலும் எவனோ ஒரு அரேபிய முதலாளி யின் நலன்பொருட்டு தமது சொந்த மண்ணில் இருந்து சுமந்து வந்த சொர்க்கபுரிக் கனவுகள் அனைத்தையும் பாலைவன மண்ணில் புதைத்துவிட்டு “நான் இங்கு நலமாக உள்ளேன், நீ நலமா? சாப்பாட்டுக்கும் வசதிகளுக்கும் குறை வில்லை, எட்டு மணி நேரமே வேலை, நண்பர்களு டன் மகிழ்ச்சியாக பொழுது போகின்றது.  ஒரு குறை யும் இல்லை.  நீங்கள் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள்.  குழந்தைகளை தேடுகின்றது.  … எப்படியிருக்கிறாள்? … எப்படியிருக்கின்றான்? இன்னும் ஆறு மாதத்தில் வந்து விடுவேன் என்று பிள்ளைகளிடம் சொல்.  நீ எப்படி இருக்கின்றாய்? வரும்போது சின்னவனுக்கு வாட்சும் பெரிய வளுக்கு… ” என்று மனைவிக்கு எழுதும் கடிதங்களில் நஜீப் சொல்லும் அப்பட்டமான வெளிறிய பொய்கள் பொங்கி வழிகின்றன.  

தன்னைப்படைத்த அல்லா ஏதாவது ஒரு உருவத்தில் வழியைத் திறந்து விடுவான் என்று நஜீப்பும் ஹக்கீமும் இப்ராஹிம் காத்ரியும் தொடர்ந்து மூன்று இரவுகள்,  மூன்று பகல்கள், ஒரு சொட்டுத்தண்ணீரும் இல்லாமல் புல் பூண்டும் இல்லாத பாலைவனத்தில் ஓடுகின்றார்கள்.  தண்ணீரும் உணவும் இல்லாமல் ஒரு கட்டத்தில் பித்துப்பிடித்து இருவரையும் அடிக்கும் ஹக்கீம், ரத்த வாந்தி எடுத்து வாயில் நுரை தள்ளி நஜீப்பின் கண் முன்னே பாலைவனமண்ணில் சுருண்டு விழுந்து சாகின்றான்.  நஜீப் மயக்கமடைகின்றான்.  நஜீப் சொன்னபடி பாம்பேயில் இருந்திருந்தால் ஒருவேளை அழகிய இளைஞனான ஹக்கீம் ஹிந்திப்படங்களில் நாயகனாக வலம் வந்து இளம்பெண்களின் கனவுகளை தொந்தரவு செய்திருப்பானோ? பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம், வளைகுடா குறித்த பல கற்பனைகளையும் கதைகளை யும் கலைத்துப் போடுகின்றது.  வாசனை திரவியங்களின் பின்னே வீசும் ரத்தக்கவிச்சி நம் மூக்கை துளைக்கின்றது.  ஜொலிக்கும் தங்க நகைகள் கிலுகிலுக்கும் ஒலியின் பின்னால் பாலைவனத்தில் முறிபடும் எலும்புகளின் ஓசை கேட்பதை உணர முடிகின்றது.   இறை நம்பிக்கை, வாழ்க்கை, வளைகுடா நாடுகளின் பளபளக்கும் கொழுத்த வசதி வாய்ப்புக்களின் பின்னே ஒளிந்திருக்கும் இருட்டான பொருளாதார அரசியல், உழைப்புச் சுரண்டல் என பல்வேறு அடுக்குகளை தன் எழுத்தில் மறைத்துவைத்துள்ளார் பென்யாமின்.  இவற்றில் எதையுமே அவர் நேரடியாக நூலில் எங்குமே எழுதவில்லை, ஆனால் வாசிப்பவனை யோசிக்க வைப்பதில் வெற்றி பெறுகின்றார்.  2009  இன் கேரள சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு.  மலையாள மொழியில் எழுதப்பட்ட நூலை  தமிழில் எழுதப்பட்ட நூல் என்று உணரத்தக்க விதத்தில் மொழியாக்கம் செய்துள்ளார் விலாசினி, பாராட்ட வேண்டும். 

ஆடு ஜீவிதம், 
ஆசிரியர் : பென்யாமின், 
தமிழாக்கம்: விலாசினி, 
எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் சாலை, பொள்ளாச்சி 642002. 
விலை: ரூ.270