அரசியல் தலைவர் என்றால் வெள்ளை வேட்டியும், சட்டையும் தான் கண் முன்னே தெரியும். அவர்களுக் குள் ஒளிந்திருக்கும் வேறு திறமைகள் அவ்வளவு எளிதில் தெரிவதில்லை. அதில் ஒருவர் தான் மல்லை சி.ஏ.சத்யா. மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலையில் தேசிய அளவில் பதக்கம், சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம், போதிதர்மர், மாவீரன் நேதாஜி விருது கள், சிறந்த கிராண்ட் மாஸ்டர் லீ பதக்கம் வென்றிருக்கும் இவர், முழு நேர தமது அரசியல் பணிகளுக்கும் மத்தியில் கடல் கடந்து நாடு விட்டு நாடு சென்று குங்ஃபூ கற்றுக் கொடுக்கிறார். மதிமுகவின் துணைப் பொதுச் செயலாள ராகவும், மஞ்சூரியா குங்ஃபூ கலையின் சர்வதேச தலைவராகவும் செயல்படுகிறார். “நாடு முழுவதும் சமீப காலமாகவே போதைக்கு அடிமையாகி வரும் இளைஞர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறத்தில், தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட இளைஞர்கள் பலரும் உடல், மன வலிமையோடு உள்ளார்கள். தற்காப்பு கலையை கற்றுக் கொள்வதற்கு சாதி, மதம், இனம், பாலினம் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எட்டு வயது முதல் உடல் ஒத்துழைப்பு தரும் வரையில் பயிலலாம். இதற்கு ஒரே மூலதனம் உடல் மட்டுமே. உணவுக்காக வேட்டையாடுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்த ஆதி கால மனிதர்கள் இரும்பை கண்டுபிடித்து, சிந்திக்க துவங்கிய போது பிறந்தது நாகரீகம். அதுவரைக்கும் கல்லையும் கம்பையும் பயன்படுத்தியவர்களுக்கு தேவைப்பட்டது வலிமையான ஆயுதம். அப்போதுதான் ஈட்டி, வாள், கேடயம், கத்திகளை கண்டுபிடித்த னர். பரிணாம வளர்ச்சியில் அந்த ஆயுதங் களை கொண்டு தற்காப்பு கலையை உரு வாக்கினார்கள். அதற்கு சிலம்பம், களரி, வர்மம், கராத்தே, குங்ஃபூ, மல்யுத்தம், குத்துச் சண்டை, ஜூடோ, டேக்வாண்டோ, கிக் பாக்ஸிங் என்று பெயரிடப்பட்டன.
மஞ்சூரியா என்றால் என்ன?
உலக அளவில் நாகரீகங்கள் நதிக்கரை யில் தோன்றின. அந்த வரிசையில் சீனாவின் மஞ்சள் நதி நாகரீகம், அங்கு இருந்த பேரரசு மஞ்சு பேரரசு என்று அழைக்கப்பட்டது. சீனாவின் தென்கோடி முனையில் இருப்பது மஞ்சு பகுதி அதன் கிழக்கு எல்லையில் ஜப்பானும், மேற்கு எல்லையில் ரஷ்யாவும் எல்லைப்புற நாடுகளாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சையை போன்று சீனாவின் தானிய களஞ்சியமாக, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்தி ரம் போன்றது மஞ்சூரியா. இதன் மீது ஜப்பான் ஆதிக்கம் செலுத்தியது. இதற்கு எதிராக தேசிய சீனப் படை உருவாக்கப்பட்டது. மேலும், பாதுகாப்பை மேம்படுத்த உடற் பயிற்சி, விளையாட்டு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. சீனாவின் முடியாட்சிக்கு முடிவு கட்ட காடுகளில் தலைமறைவாக இருந்த கிளர்ச்சி யாளர்கள், போதிதர்மரால் கற்பிக்கப்பட்ட தற்காப்பு கலையை பயின்றனர். அதன் அடை யாளமாக கருப்பு சீருடை அணிந்து மஞ்சு பகுதியை மீட்டெடுத்தனர். அந்த மண் சார்ந்த தற்காப்பு கலைக்கு மஞ்சூரியா குங்ஃபூ என்று பெயர் வைத்தனர்.
தமிழ்நாட்டிற்கு வந்தது எப்படி?
முடியாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து உருவான இரண்டு நகரங்களுக்கு ‘நான்ஜிங்’ என்று பெயரிட்டது மக்கள் சீனக் குடியரசு. அந்தப் பகுதிகள் மிகப்பெரிய வணிக நகரமாக இருந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே சென்னை ஆழ்வார் பேட்டையில் ‘நான் கிங்’ சைனீஸ் உணவகம் துவங்கினர். அந்த உணவகத்தில் பணியாற்ற ஹாங்காங் நகரில் இருந்து வந்தவர் அச்சோளி லீ. இவர் மஞ்சூரியா குங்ஃபூ தற் காப்புக் கலையின் ஜாம்பவான். அவரிடம் இக்கலையை பயின்றவர் தேனாம்பேட்டை யைப் பூர்வீகமாகக் கொண்ட எங்கள் மாஸ்டர் ஹிங் ஷிஃபு ஆர்.சேகர். இந்த ராஜசேகர் ஹாங்காங் சென்று தற்காப்பு கலையில் மாஸ்டர் பட்டம் பெற்று, சர்வதேச அளவில் சாம்பி யன் பட்டம் வென்றார். பிறகு, சென்னை டிஎம்எஸ் வளாகம், நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் பயிற்சி வகுப்பை தொடங்கினார். தமிழ்நாடு முழுவதும் இருந்து என்னைப் போன்று லட்சக்கணக் கில் வீரர்கள் பயிற்சியாளர்களை உருவாக்கினார்.
உங்களின் அறிமுகம்?
சன் ரைஸ் உணவகத்தின் உரி மையாளர் கோபாலின் ஏற்பாட்டில் மாமல்லபுரம் கடற்கரையில் 1985ஆம் ஆண்டு மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது. அதில் மாஸ்டர் சேகர் பங்கேற்றார். தற்காப்பு கலையின் தாயகம் காஞ்சிபுரம். அந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவன் நான். அன்றைக்கு நானும் கலந்து கொண்டேன். அதன் தொடர் நிகழ்வாக இந்தப் பகுதியில் மஞ்சூரியா குங்ஃபூ கலை ஆழமாக காலூன்றியது. மாமல்லபுரம் அருகே வடுக்கம்பாடி மோகனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி மஞ்சூரியா கலைக்கு ‘குரு குலம்’ அமைத்தோம். இந்தக் கலையின் சர்வதேச தலைமையகமான இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர். தங்கும் வசதியுடன் இக்கலையை பயிற்று வித்து வருகிறோம். 2014 அக்டோபர் 29 அன்று மாஸ்டர் சேகரின் அகால மரணம் எங்களை நிலை குலைய வைத்தது. அதற்குக் காரணம், அவருக்கு நிகரான ஒரு வீரரை நாங்கள் பார்க்க முடியவில்லை. தனது ஆட்காட்டி விரல் மூலம் ஏழு ஓடுகளை உடைத்து உலக சாதனை படைத்தவர் அவர். அது மட்டுமல்ல, இந்தக் கலையில் வெல்ல முடியாத மாவீரனாக வார்த்தைகளால் அல்ல வாழ்ந்தும் காட்டியவர் அவர். சேகரின் மறைவுக்குப் பிறகு, இந்தக் கலையை பாதுகாக்க அவரிடம் தற்காப்பு கலையை பயின்ற பயிற்சியாளர்கள், மூத்த மாஸ்டர்கள் ஒன்று கூடி என்னை தலைமை தாங்கி வழிநடத்த வற்புறுத்தினர். அந்த நேரத் தில் நான் தீவிர அரசியலில் இருந்தேன். முழு நேர அரசியல்வாதியாக இருந்தா லும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இன்றளவும் தொடர்கிறேன். ஜப்பான் நாட்டின் பிரபல தற்காப்புக் கலையான சாமுராய் என்ற பயிற்சியையும் தற்போது நாங்கள் கற்றுக் கொடுத்து வருகிறோம். 40-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தி வருகிறோம்.
தணியாத தாகம்....
ஆரம்பத்தில் ஐந்தாம் நிலை ‘பிளாக் பெல்ட்’ பெற்ற நான், மணிப்பூரில் நடந்த உடல் தகுதி தேர்வில் ஏழாவது நட்சத்திர மான ‘கருப்பு பெல்ட்’ பெற்றேன். இப்போது கேரளம், கர்நாடகா, மணிப்பூர், அசாம் என பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பயிற்சி கொடுத்து வருகிறேன். பல்வேறு சிரமங் களுக்கு மத்தியிலும், நவ நாகரீகத்தின் தொட்டில் பூமியான பிரான்ஸ் நாட்டிற்கும் சென்று, மாஸ்டர் மேத்யூ நடத்தி வரும் பயிற்சி மையங்களில் காலையில் மாஸ்டர்களுக்கும் மாலையில் மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறேன். குறிப்பாக புலி, குரங்கு, பாம்பு போன்ற விலங்குகளின் ஸ்டைலில் கற்றுக் கொடுப்ப தால் அந்நாட்டு இளைஞர்களை வெகுவாக ஈர்க்கிறது. வெளிநாட்டு மாணவர்கள், இளைஞர்கள் அதிக ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்கிறார்கள். இதேபோல் தைவான், மலேசியா நாடுகளுக்கும் சென்று பயிற்சி கொடுத்துள்ளேன். அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கும் செல்கிறேன். ஆண்டுதோறும் எங்கள் ஆசானின் நினைவு தினத்தன்று கனத்த இதயத் தோடு அஞ்சலியை செலுத்துகிறோம். தற்காப்புக் கலையை அர்ப்பணிப்பு உணர்வோடு பயிற்று வித்து வரும் மூத்த ஆசான்களுக்கு சர்வதேச அளவில் போதிதர்மர் வாழ்நாள் சாதனை யாளர் விருதும் வழங்கி வருகிறோம். வெற்றிக்கு அடித்தளம் கடும் முயற்சி, பயற்சி, சரியான ஊட்டச்சத்து, உணவு, ஓய்வு. இவை அனைத்தும் கிடைத்தால் உலக அளவில் நமது வீரர்கள் சாதித்துக் காட்டு வார்கள். இதற்கு ஒன்றிய-மாநில அரசுகள் துணை நிற்க வேண்டும். மஞ்சூரியா குங்ஃபூ போன்ற தற்காப்பு கலைகளில் உலக அளவி லும் ஒலிம்பிக் போட்டியிலும் தங்கத்தை தட்டி வர முடியும். “வலிகள் இல்லாமல் வெற்றி இல்லை. அச்சமில்லாமல் நட” என்கிற தாரக மந்திரத் திற்கு ஏற்ப தற்காப்புக் கலையில் எனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்றார் சத்யா.