articles

img

வீரப்பன் தேடுதல் வேட்டையில் கூட நடக்காத பயங்கரம் - கே.ஜி.பாஸ்கரன்

பற்களை பிடுங்குவதற்கு முன் அவர் செய்திருக்கும் காரியம் மிகப்பெரும் பயங்கரம். ஒன்றரை இஞ்ச் ஜல்லி கற்களை வாயில் போட்டு கடிக்கச் சொல்வாராம். முடியாது என்று சொன்னாலோ, தயங்கி நின்றாலோ அடித்து, துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கடிக்கச் சொல்வாராம். வேறு வழியின்றி, வலியால் துடிதுடிக்க விசாரணைக்குச் சென்றவர்கள் கடிப்பார்களாம். ரத்தம் குடம் குடமாய் கொட்டும். பிறகு, கற்களை துப்பச் சொல்லி, பற்களை பிடுங்கி இருக்கிறார்.

ஒருவரைப் பார்த்த முதல் நொடியில், அவரை கவனிப்பது என்ன என்று ஒரு ஆய்வு நடத் தப்பட்டது. இதில் 47 சதம் பேர் சொன்ன  பதில், அவர்களின் சிரிப்பு. முகத்தில் முக்கியமாக இருப்பது பற்களும், சிரிப்பும் தான். முத்து மணிச்சர மாய்/ உதட்டுக் கதவுக்குள்/ உட்கார்ந்திருக்கிறாய்/ செப்பு மொழிக்கெல்லாம்/ செம்மை அளிக்கின்றாய்/ நடுவினிலே மறைகின்றாய்/ நாட்டியமும் ஆடு கின்றாய்/ பல் போனால் சொல் போகும்/ உள்ளே நீ இருந்தால் தான்/ கொள்ளை அழகு உண்டாகும்... என்றெல்லாம் கவிதைகள் கூட உண்டு. 

சொற்களை சரியாக உச்சரிக்கவும், சீராக பேசுவ தற்கும் பற்கள் மிக அவசியம். பல், நாக்கு, உதடுகள்  சேர்ந்தால் தான் பேச்சு வரும். உணவை ருசித்துச் சாப்பிடவும் பற்கள் அவசியம். தாடை எலும்புகளின் பலம் பற்களில் தான் இருக்கிறது. வாய் துர்நாற் றத்தில் இருந்தே நோயை அறிய முடியும் என்று கூட சொல்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் இருந்து, 12 வயது வரை முளைக்கும் பற்கள், பால் பற்கள். பல் முளைத்த உடன், அக்குழந்தைகளை வீடே கொண்டா டும். பால் பற்கள் விழுந்து பின் நிலையான பற்கள் முளைக்கும். எந்த பல் எந்த வயதில் விழ வேண்டு மோ, அந்த வயதில் தான் விழ வேண்டும் என்றொரு கணக்கு இருக்கிறதாம். பல் சிகிச்சைக்கென தனி மருத்துவமும் இருக்கிறது. பல்லை பிடுங்கும் முன்ன ரும், பின்னரும் ஏராளமான முன் ஏற்பாடுகள் இருக்கின் றன. பல்லைப் பிடுங்கிய பிறகு அதற்கான  மருந்து களை உட்கொள்வதும் அவசியம்.  இப்படியாகப்பட்ட பற்களைத் தான் ஐபிஎஸ் அதி காரி ஒருவர் பிடுங்கித் தள்ளி இருக்கிறார். ஒன்றல்ல, இரண்டல்ல... நாற்பதெட்டு பற்களை பிடுங்கி இருப்ப தாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. 

‘பல்’வீர் பயங்கரம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்ற பல்வீர்சிங், இந்த சித்ரவதையை அரங்கேற்றி வந்தி ருக்கிறார். வீரப்பன் தேடுதல் வேட்டையில் கூட இப்ப டிப்பட்ட சித்ரவதை இல்லை என மக்கள் கண்கா ணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் கூறுகிறார். எந்த ஒரு புகார் வந்தாலும், அந்த புகாரின் பேரில் அழைத்து வரப்படும் நபர்களை இப்படித்தான் சித்ரவதை செய்திருக்கிறார் பல்வீர் சிங்.  பற்களை பிடுங்குவதற்கு முன் அவர் செய்திருக்கும் காரியம் மிகப்பெரும் பயங்கரம். ஒன்றரை இஞ்ச் ஜல்லி கற்களை வாயில் போட்டு கடிக்கச் சொல்வாராம். முடியாது என்று சொன்னாலோ, தயங்கி நின்றாலோ அடித்து, துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கடிக்கச் சொல்வாராம். வேறு வழியின்றி, வலியால் துடி  துடிக்க விசாரணைக்குச் சென்றவர்கள் கடிப்பார்க ளாம். ரத்தம் குடம் குடமாய் கொட்டும். பிறகு, கற்களை துப்பச் சொல்லி, பற்களை பிடுங்கி இருக்கிறார். செல்லத்துரை என்ற நபரின் மூன்று பற்களை பிடுங்கிய  கொடுமையும் நடந்திருக்கிறது. ஒரு அடிதடி வழக்கில் விசாரணைக்குச் சென்ற இசக்கிமுத்து, செல்லத்துரை, மாரியப்பன் ஆகிய மூன்று சகோதரர்க ளையும் ஒரே அறையில் வைத்துக் கொண்டே, ஒவ்வொ ருவரது பற்களையும் பிடுங்கி இருக்கிறார். அவரது கால்களில் விழுந்து கெஞ்சிய பிறகும் கொடுமை நடந்திருக்கிறது. இரண்டு சிறுவர்கள் கூட இவரது கொடுமைக்கு தப்பவில்லை. 

சிறுவர்கள் என்றால் போலீசாரே கற்களால், பற்களையும் ஈறுகளையும் ஒருசேர தேய்ப்பார்க ளாம். கல்லால் பற்களை தட்டிக் கொண்டே இருப்பார்க ளாம். கடந்த மார்ச் 10 அன்று விசாரணைக்கு ‘பிடித்துச் செல்லப்பட்ட’ கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த அருண்குமாரை தேடிச் சென்ற, அருண்குமாரின் தம்பி மற்றும் அவரது நண்பரையும் கைவிலங்கு மாட்டி, 4 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். ஒரு சிறுவனது விரல் அடித்து உடைக்கப்பட்டு உள்ளது. இருவரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஒரு சிறுவனது தாயார் காவல் நிலையம் சென்ற போது,  தனது மகனை ரத்த வெள்ளத்தில் பார்த்து இருக்கிறார். மாற்று உடை எடுத்து வரும்படி போலீசார் கூறியதாக சொல்கிறார். சிறுவர்களை விசாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய சட்ட வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்பட வில்லை. அவர்களை சீருடைக் காவலர்கள் விசாரிக்க கூடாது. 24 மணி நேரத்திற்குள் சிறார் நீதி குழுமத்தில் ஒப்படைக்க வேண்டும். இவை எதுவும் பின்பற்றப்பட வில்லை. அருண்குமாரின் தம்பியும், அவரது நண்பரும் பள்ளி மாணவர்கள். போலீசார் அருண்குமாரை அடித்து இரண்டு பற்களை பிடுங்கி உள்ளனர். ஒரு பல்லை பாதி உடைத்து உள்ளனர். மாரிமுத்து என்பவ ரது உயிர்தடத்தில் கடுமையாக போலீஸ் தாக்கியதில் பாதிக்கப்பட்டு, தற்போது அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் எவரையும் ஏஎஸ்பி விசாரிப்பதே இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

மார்க்சிஸ்ட் கட்சி தலையீடு

மார்ச் முதல் வாரம் இந்தச் செய்தி வெளியே கசிந்தி ருக்கிறது. பற்கள் பிடுங்கப்பட்ட நபர்கள் கடுமையாக மிரட்டப்பட்டதாலும், அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாலும் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சொல்ல பயந்திருக்கிறார்கள். பற்களை பிடுங்கிய விவ காரம் மார்ச் இறுதியில் வெளியே வந்தது. மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு, காவல் சித்ரவதைக்கு எதிரான கூடியக்கத்துடன் இணைந்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களும் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டமொன்றை மார்ச் 31 அன்று  நடத்தியது. இதைத் தொடர்ந்து எப்ரல் 1 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக் குழு அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகளும் பங் கேற்ற பத்திரிக்கையாளர் கூட்டமும் நடைபெற்றது. இதில் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன் உள்பட அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக ளும் பங்கேற்றன. இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்ரல் 2 அன்று நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஸ்ரீராம் தலைமை யில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கலந்து கொண்டன. ஏப்ரல் 3 அன்று சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சேரன்மகாதேவி ஆர்ப்பாட்டத்தி ற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பின்னர் ஒலிபெருக்கி இல்லாமல் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப் பட்டது. இந்த போராட்டங்களுக்கு துண்டு பிரசுர மோ, சுவரொட்டிகளோ அச்சடிக்க கூடாதென அச்ச கங்களுக்கு காவல்துறை தடை உத்தரவொன்றும் வாய்மொழியாக போட்டிருக்கிறது. அதனால் இது  குறித்த நோட்டிசோ, போஸ்டரோ வெளியிட முடிய வில்லை. 

இதே வேளையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து வந்த நிலையில், பல கட்சிகளும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஏஎஸ்பி பல்வீர்சிங், இடைநீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட ஆட்சித்தலை வர், சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஏப்ரல் 10 வரையிலும் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக வந்த செய்தி, நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன், காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். எதிர்க்கட்சியான அதிமுக கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதிமுகவைச் சார்ந்த அம்பா சமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, “ஏஎஸ்பி பல்வீர்சிங் நல்லவர், வல்லவர்” என நியா யப்படுத்தி பேசி வருகிறார். பாதிக்கப்பட்டவர்களை, அவர்கள் “குற்றவாளிகள் தானே” என மனித உரிமை மீறலை நியாயப்படுத்தி, பல்வீர்சிங்கிற்கு வக்காலத்து  வாங்குகிறார். நாம் தமிழர், பாமக கட்சிகள் டிவிட்டரில் கண்டனத்தை மட்டும் தெரிவித்து விட்டு அமைதி யாகி விட்டன. பல்வீர்சிங் விசயத்தில் பாஜக மெளனம் காக்கிறது. பல்வீர்சிங், பாஜக ஆதரவாளர் என்றும் சொல்லப்படுகிறது. அவரது வாட்சப் டிபியில் தமிழ்நாடு கவர்னர் படம் முன்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பல்வீர்சிங் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது என அப்பட்டமான மனித உரிமை மீறலை ஆதரித்துப் பேசுவது மிக ஆபத்தானது. ஒருவர் ‘நேர்மையான’ அதிகாரி என்ப தால், சட்டத்தை மீறி, நானும் ரெளடி தான் என்பது போல செயல்படுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. நேர்மையாக இருப்பது அதிகாரிகளின் அடிப்படைக் கடமை என்பதை உணர்த்துவது அவசியம்.  

காவல்துறையின்  கீழ்த்தரமான செயல்

பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் இழைத்திருந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் காவல்துறை யினர் சட்டத்திற்கு புறம்பாக, மனித உரிமைகளை மதிக்காமல், மனிதாபிமானம் இல்லாமல் காட்டு மிராண்டித்தனமாக செயல்படுவதும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும் ஏற்புடையது அல்ல. இது குறித்து செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகை யாளர்களை காவல்துறையினர் படம் எடுப்பது, வீடியோ எடுப்பது என மிரட்டும் தொனியில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. ஓரிரு இடங்களில் பத்திரிகையாளர்கள் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து உள்ளனர். மறுபக்கம், பல்வீர்சிங்கிற்கு ஆதரவாகப் பேச காவல் துறையே சிலரை, சில அமைப்புகளை தூண்டி விடுகின்றனர். இதற்கு சில சாதி அமைப்புகளையும் காவல்துறையே பயன்படுத்துவது மிக கீழ்த்தரமான செயலாகும். பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் வேலையிலும் இறங்கி உள்ளனர். ‘கீழே விழுந்து தான் என் பல் உடைந்து போனது’ என பிறழ் சாட்சியான சூரி, வருவாய்த்துறைக்கு சொந்தமான வாகனத்தில் தான் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என இதுவரை தெரியவில்லை என  அவரது தாத்தா கூறுகிறார். பணம் கொடுப்பது, மிரட்டுவது என போலீசே சாட்சிகளை கலைப்பது நடக்கிறது. சிவந்திபுரம் செல்லத்துரை இதனை வெளிப்படையாகவே கூறுகிறார். உறவினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்களை வைத்து பணம் கொடுப்பதாக வும் போலீசாரோடு பகை எதற்கு, புகாரை வாபஸ் வாங்கு என பலர் பேசுவதாகவும் கூறுகிறார். 

சாத்தான்குளம்  வழக்கிற்குப் பிறகும்...

கடந்த 2020ம் ஆண்டு கொரனா காலத்தில் சாத்தான் குளம் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல் சித்ரவதையால் கொலையுண்ட பிறகு, காவல்துறை பின்பற்ற வேண்டிய பல வழிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், அவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதை இந்த வழக்கில் இருந்தும் தெரிந்து கொள்ள லாம். பற்கள் பிடுங்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்படாமல், சிறையில் அடைத்த நடவடிக்கை இதில் முக்கியமானது. பெனிக்ஸ், ஜெயராஜ் இருவரும் ரிமாண்ட்டுக்கு போகா மல், அச்சமயத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தால் ஒருவேளை உயிர் பிழைத்திருக்கக்கூடும். ஆனாலும் அதே தவறுகள் மீண்டும் மீண்டும் நடந்து வருகின்றன.  நீதிமன்றத்திலோ, மருத்துவமனையிலோ கேட்டால், யாரும் அடிக்கவில்லை எனச் சொல்ல வேண்டும்; இல்லை என்றால் ஜெயிலில் இருந்து வெளியே வர முடியாது என போலீசார் மிரட்டியதாக அருண்குமாரின் தம்பி கூறுகிறார். நீதித்துறை நடுவர், அடித்தார்களா என்று மட்டும் கேட்காமல், அவர் களை பேசச் சொல்லி இருந்தாலே உடைந்த பற்களை  பார்த்திருக்க முடியும். அதற்குக் கூட அவர்களுக்கு நேரம் இல்லை. 

காவல் நிலையங்களில் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற உச்சநீதி மன்ற உத்தரவும் முழுமையாக அமுலாகவில்லை. அம்பாசமுத்திரத்தில் சிசிடிவி கேமரா இல்லாத அறை யில் வைத்தே இந்த சித்ரவதைகள் நடந்துள்ளன. உள்ளூர் காவல் நிலையங்களில், உள்ளூர் சமூகங்க ளில் என்ன நடந்து வருகிறது என்பதை கவனிக்க வேண்டிய உளவுப்பிரிவும் மனித உரிமை மீறலுக்கும், காவல்துறை அராஜகத்திற்கும் உடந்தையாக இருந்தி ருக்கிறது.  தற்போது சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப் பட்டு  உள்ளனர். சில அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவல்துறையில் மனித உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட வேண்டும் என விதிமுறை கள் உள்ளது. இதில் ஏற்படும் தாமதங்களும், கண்டு கொள்ளாத போக்குகளும் தொடர் தவறுகளுக்கு காரணங்களாகின்றன. மனித உரிமைகளைப் பாது காக்க, காவல் சித்ரவதைகளை தடுக்க அரசியல் உறுதி யோடு தொடர்ந்து போராட வேண்டியதின் அவசி யத்தை அம்பாசமுத்திரம் சம்பவம் மிக நன்றாக உணர்த்துகிறது. 

தயக்கமின்றி நடவடிக்கை எடுத்திடுக!

தமிழக அரசு, ஏஎஸ்பி பல்வீர்சிங் மீதும், சித்ர வதைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் அதிகாரி கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அனை வரையும் கைது செய்ய வேண்டும். வழக்கை நீதிமன்றம்  விசாரிக்க வேண்டும். சார் ஆட்சியர் விசாரணை தேவை யற்றது. பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பும், மருத்துவ சிகிச்சையும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். போலீஸ் மீது வழக்கு பதிவு செய்தால் அவர்கள் மன உறுதியை இழந்து விடுவார்கள் என சொல்லப்படுவது உண் மைக்கு புறம்பானது. இது போன்ற குற்றச் செயல்க ளில் ஈடுபடும் காவல்துறையினர் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுத்தால் மட்டுமே அவர்களது தார்மீக பலம் கூடும். தமிழக அரசு எவ்வித தயக்கமுமின்றி இத்தகு மனித உரிமை மீறல்கள் மீது உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.அது தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பும்! 

கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

 

 

 

;