articles

img

இந்திய சுதேசி இயக்கத்தின் சிகரம் வ.உ.சிதம்பரனார்!

இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட மகத்தான தலைவர்க ளுள் குறிப்பிடத்தக்கவர் வ.உ.சிதம்பரனார். “லோகமான்ய பாலகங்காதர திலகர்தான் எனது அரசியல் குரு; 1893இல் எனக்கு 21 வயது ஆனதி லிருந்தே அவருடைய சொற்பொழிவுகளையும் எழுத்துக்களையும் கவனித்து வத்திருக்கிறேன். இந்தியா எனது நாடு, பிரிட்டிஷாரால் அடிமை கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது பிடியிலிருந்து இதை விடுவிக்க வேண்டும் என்பதை அவற்றி லிருந்து நான் கற்றுக் கொண்டேன்”. இவ்வாறு வ.உ.சி குறிப்பிட்டதிலிருந்து அவரது சமூக அக்கறையை, தேசப் பற்றை அறியலாம்.

விபின் சந்திரபால் கைது

“ அநீதியை வேரோடு கிள்ளி எறிவதற்காக கடவுள் நம்மிடையே பத்தாவது அவதாரம் எடுத்தி ருக்கிறார். இந்த முறை அவர் மனித உருவத்தில் இல்லை. அவரது அவதாரத்தின் பெயர் சுதேசி. அவரது ஆயுதம் புறக்கணிப்பு, அந்நியப் பொருள் எதையும் புறக்கணிப்பது; அவரது மந்திரம் ‘வந்தே மாதரம்’ “ என்றார் பாரதி. அத்தகைய சுதேசி இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்ப ட்டவர்தான் வ.உ.சி. 1906இல் தாதாபாய் நௌரோஜி தலைமை யில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. சுயராஜ்யம்,  புறக்கணிப்பு, தேசியக்கல்வி ஆகிய கொள்கைகள் அங்கு உருவாக்கப்பட்டன. எனினும் சுதேசி எனும்  சொல்லுக்கான விளக்கத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.இதனால் காங்கிரசில் மிதவாதிகள், தீவிர வாதிகள் என இரு குழுக்கள் உருவாகின. சுதந்திரப் போராட்ட வீரர் விபின் சந்திரபால் 1907 மே மாதத்தில் சென்னை வந்து போராட்டக்களத்தில் கைதானார்.

சுதேசிக்கப்பல் கழகம்

இந்த நிலையில் மூன்று நோக்கங்களோடு வ.உ.சி பிரச்சார இயக்கத்தைத் தொடங்கினார். சுதேசி கப்பல் கழகம் துவங்குவது, பாலின் விடுதலை, தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு என்பவையே அம்மூன்று நோக்கங்கள். இந்தியா முழுவதும் 20 சுதேசி கப்பல் கழகங்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு அக்காலத்திலேயே பத்து கோடி ரூபாயாக இருந்த போதிலும் பிரிட்டிஷ் கழகங்களின் கடும் போட்டிக்கு ஈடு கொடுக்க இயலவில்லை.  பிரிட்டிஷார் வ.உ.சி-க்களித்த இடையூறுக ளுக்கு மத்தியில் எஸ்.எஸ்.கலீலியோ மற்றும் எஸ்.எஸ்.லாவோ என்ற இரு நீராவிக் கப்பல்கள் கடைசியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன. பிரிட்டி ஷாரின் குயுக்தி நடவடிக்கைகள் மூலம் வ.உ.சி.யை கழக நிர்வாகத்திலிருந்து வெளியேறச் செய்தனர். இறுதியாக வ.உ.சி. சிறைப்பட்டபோது, கழகத்தின் கப்பல்களை அதன் பங்குதாரர்கள் பிரிட்டிஷ் கம்பெ னிக்கே விற்கச் செய்தனர்.  இது தொடர்பாக பாரதி “சிதம்பரம்! கௌரவம் முக்கியமானது! வெறும் சில சில்லறைக் காசுக ளுக்காக இந்தப் பாவிகள் கப்பல்களை எதிரிக ளுக்கு விற்றுவிட்டார்கள். இதைவிட அந்தக் கப்பல் களை அடித்து நொறுக்கி அதன் துண்டுகளை வங்கக் கடலில் வீசி எறிந்திருக்கலாம். இந்தச் சில்லறைக் காசுகளை இழப்பதனால் தமிழ்நாடு நாய்களிடம் போய்விடுமா? ஆண்மையற்றவர்கள்! ஆண்மை யற்றவர்கள்!!” என சினத்துடன் பேசியுள்ளார்.

கோரல் மில் வேலைநிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கோரல்மில் (பருத்தி ஆலை) கடுமை யான ஒழுங்கு விதிகளால் நடத்தப்பட்டது. தொழிற் சாலை சட்டங்கள் அமலாக்கப்படவில்லை.  தொழி லாளர்களை  பன்னிரண்டு மணி நேரம் வரை வேலை  வாங்கி உழைப்பு ஒட்டச் சுரண்டப்பட்டது. வார விடுமுறை, பண்டிகை விடுமுறை இல்லை. அற்பக் காரணங்களுக்காக தொழிலாளர்களுக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டதும் கசக்கும் உண்மை.  இக்கொடுமைகளை எதிர்த்து வ.உ.சி தொழிலாளர்க ளைத் திரட்டினார். சுப்ரமணிய சிவாவும், வ.உ. சியும் பிரிட்டிஷ் கம்பெனியின் மோசமான நட வடிக்கைகளை பொதுக்கூட்டங்களில் அம்பலப் படுத்தினார்கள். வேலை நிறுத்தம் 1908 பிப்ரவரி 27 அன்று தொடங்கியது. வேலை நிறுத்தத்தை ஒடுக்க சிறப்புப் படைகளை அனுப்பியது. வ.உ.சி, சிவா ஆகி யோரின் கூட்டங்களுக்குத் தடை விதித்தது. ஆனால் மக்கள் முழு ஆதரவளித்தனர். இறுதியில் தொழிலா ளர்களின் மகத்தான போராட்டம் வெற்றி அடைந்து 50 சதவீத ஊதிய உயர்வும் கிடைத்தது. இதற்கிடையில் போராட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் வ.உ.சி. ஈடுபட்டார். பிபின் சந்திரபாலை விடுதலை செய்யுமாறு கோரி அவரது படத்துடன் தடையை மீறி ஊர்வலமாகச் சென்றார். இது பற்றி விளக்கம் அளிப்பதற்காக நேரில் வர வேண்டும் என்று கோரி வ.உ.சி, சிவா,பத்மநாப ஐயங்கார் ஆகி யோர்க்கு கலெக்டர் விஞ்ச் சம்மன் அனுப்பினார். இறுதியாக வ.உ.சியும், சிவாவும் பிபின் சந்திர பாலை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு இயக்கத்தை உருவாக்கினார்கள்;  ஊர்வலம் நடத்தினார்கள்; அதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். 

முதல் அரசியல் வேலைநிறுத்தம்

அதைத் தொடர்ந்து ஒரு கேலிக் கூத்தான விசாரணை நடத்தப்பட்டது. இதைக் கேட்டதும் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கிளர்ச்சிகள் வெடித்தன. கடுங் கோபமடைந்த மக்கள் அரசு அலு வலகங்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள்; தந்திக் கம்பிகளை அறுத்தார்கள். இதைத் தொடர்ந்து நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிர் துறந்தனர். இதையடுத்து தூத்துக்குடி ஆலைத் தொழிலா ளர்கள் 1908 மார்ச் 14 அன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்கினார்கள். இது 19 ஆம் தேதி வரை நீடித்தது. அரசியல் கோரிக்கைகளுக்காக இந்தியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது என்பது  இதுவே முதல் முறை. பம்பாயில் திலகர் கைது செய் யப்பட்டபோது, 1908 ஜூலையில் அவருக்கு ஆதர வாக அரசியல் வேலைநிறுத்தம் நடைபெற்றது அதன் பின்னர் தான்.

40 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

வ.உ.சியும் சிவாவும் சென்னை உயர்நீதி மன்றத் தால் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் ராஜத் துரோகம் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறை வாசலிலேயே அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது. இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றி லேயே மிக நீண்டகால சிறைத்தண்டனை பெற்ற வர் வ.உ.சி.  “அந்த ராமனுக்கே 14 ஆண்டுகள் தானே..உனக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்ட னையா?” என   வ. உ . சி.யின் சகோதரர் அதிர்ச்சிய டைந்து  புத்திசுவாதீனத்தால் பாதிக்கப்பட்டார். ஆயினும் இன்றைய ஆட்சியாளர்களின் குருநாதர் வீரசாவர்க்கர் போல் மன்னிப்புக் கடிதம் எழுதவில்லை வ.உ.சி. இந்திய நாட்டை ஆள்வோருக்கும் இந்தியச் சுதந்திரத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லாத இக்கால கட்டத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகி களின் அளப்பரிய தியாகங்களை நினைவு கூர்ந்து  இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். செக்கிழுத்த செம்மல்  வ.உ.சி.யின் உறுதியான சுதேசி இயக்கத்தைத் திரும்பிப் பார்த்து இன்றைய விதேசிக்கொள்கை யைப் பின்பற்றும் கார்ப்பரேட் ஆதரவு  ஆட்சியா ளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து வலுவான இயக்கத்தைக் கட்டுவதே ஒப்பற்ற தியாகி  வ. உ.சி-க்கு  நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 

பெரணமல்லூர் சேகரன்


 

;