articles

img

அறியாமை இருளைப் போக்கிய ஆசிரியர் பிரகாஷ்; சரஸ்வதி சபதத்தை நிறைவேற்றிய மாணவி சங்கீதா -பி.மாரியப்பன்

‘அயலி’ வெப் சீரியலில் வரும் கிராமத்தைப் போன்று ஒரு கிராமம் தற்போது உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ‘அயலி’ வெப் சீரியலில் வரும் கிராமத்தைப் போன்று ஒரு கிராமம் தற்போது உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். 

இராஜபாளையம் தாலுகா ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கலங்காபேரி பஞ்சாயத்துக்குட்பட்ட ஒரு மலையடிவாரக் குக்கிராமம் கம்மாபட்டி. இக்கிராமத்தில் 15 குடும்பங்களின் வாரிசுகளான 290 பேர் வசித்து வருகின்றனர். இம்மக்களு டைய தொழில் விவசாயம், ஆடு, மாடு மேய்ப்பது ஆகும். 

பெண்கள் படிப்பது சுலபமல்ல என்ற நிலை

இந்த கிராமத்தில் கலைஞர் தொலைக் காட்சி வரும் வரை எந்த வீட்டிலும் தொலைக் காட்சி கிடையாது. தற்போது தொலைக்காட்சி இருந்தாலும் கேபிள் இணைப்பு கிடையாது. டிவி கூட பார்க்க முடியாத நிலை.

இந்த கிராமத்திற்கு மின் இணைப்பு, சாலை வசதி, பள்ளிக்கூடம் என ஒவ்வொன்றும் அரசு ஏற்படுத்தும் போது மக்களின் எதிர்ப்பு இருந்துள்ளது. 1985க்கு பின்பு தான் இந்த கிராமத்திற்கு மின் வசதியே வந்துள்ளது. 2009  வரை பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு கிடையாது. 2015 ஆம் ஆண்டு வரை கிரா மத்தில் பிரசவத்திற்காக பெண்கள் மருத்துவ மனைக்கு செல்வது கிடையாது. இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் பெண்கள் படிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. 

இத்தகைய கிராமத்தில் தான் கடந்த 01.06.24 அன்று இரண்டு மாணவர்களுக்கு பாராட்டு விழா அந்த கிராமத்தின் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  சங்கீதா என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கிராமத்தில் முதன்முதலாக கல்லூரி செல்ல காத்திருக்கிறார். அடுத்ததாக  கிருஷ்ணசாமி என்ற பத்தாம் வகுப்பு மாணவர்,  சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 459 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். இவர்களுக்கான பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. 

பிரகாஷ் என்ற ஆசிரியரின் விடா முயற்சி

இப்படி ஓர் ‘அதிசயத்தை’ நிகழ்த்த அந்த கிராமத்தில் 15 ஆண்டுகளாக போராடி இருக்கிறார் அக்கிராமத்தின் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ். 

2019ஆம் ஆண்டு சரஸ்வதி என்ற மாணவி தான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த முதல் மாணவி. அவர் கல்லூரிக்கு செல்ல ஆசைப் பட்டார். ஆனால் அவரது கனவு நிறைவேற வில்லை.

தலைமை ஆசிரியர் பிரகாஷ் மனம் தளரவில்லை. அடுத்த முயற்சியை தொடங்கி னார். சங்கீதாவையும் அவரது குடும்பத்தின ரையும் சந்தித்து தொடர்ந்து உரையாடி சங்கீதா வின் கல்லூரிப் படிப்புக்கு அனுமதி வாங்கி விட்டார். இந்தப் பின்னணியில் மாணவர்கள் சங்கீதாவுக்கும் கிருஷ்ணசாமிக்கும் நடந்த பாராட்டு விழாவில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் எனப் பலரும் வருகை தந்து தங்களுடைய குழந்தைகளை பாராட்டுவதைப் பார்த்த அக்கிராமப் பெரியவர்கள் வியந்து போய் மெய்சிலிர்த்தவாறு பார்த்துக் கொண்டே இருந்தனர். 

மக்கள் பிரதிநிதிகள் அந்த குழந்தைகளுக் கான கல்விக்கான உதவியை தாங்களே செய்வதாக வாக்குறுதி அளித்தனர். சட்டமன்ற உறுப்பினர் அந்த கிராமத்தின் பள்ளிக்கூடத் திற்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான கம்ப்யூட்டர் வசதி ஏற்படுத்தி தருவதாக கூறியுள்ளதோடு அந்த பள்ளியின் சுற்றுச்சுவருக்கு தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

பாராட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தை களுடைய கைதட்டல் ஓசை மலையைத் தாண்டியும் எதிரொலித்தது. அந்தக் குழந்தை களிடம் அயலி படம் பார்த்தீர்களா என்று கேட்ட போது பார்த்து விட்டோம் என்று கூறினர். அதில் உள்ள மாணவியின் பெயர் என்ன என்று  கேட்டபோது தமிழ்ச்செல்வி என்று உரக்கக் கூறி னர். அந்தக் குழந்தைகள் அனைவரும் தங்க ளை தமிழ்ச்செல்வியாகவே உணர்கின்றனர். 

இந்தக் கிராமத்திலும் பெண் குழந்தைகள் பூப்பெய்தி விட்டால் பள்ளிக்கு அனுப்புவ தில்லை. அந்தத் தடைகளை தாண்டி சரஸ்வதி யும் சங்கீதாவும் 12 ஆம் வகுப்பு முடித்துள் ளார்கள். அதற்கு உறுதுணையாக இருந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆசிரியர் பிரகாஷ். 

அறியாமையை அகற்ற பெரும் முயற்சி

படிப்பதற்கு இவ்வளவு போராட்டம் நடக்கும் ஊரில் பள்ளிக்கூடம் வருவது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்திருக்கும்! 2003 ஆம் ஆண்டு தான் இந்த ஊருக்கு  பள்ளிக்கூடம் வந்தது. அந்தப் பள்ளி வருவதற்கு அன்றைய வட்டார கல்வி அதிகாரி சென்னப்பன் எடுத்த முயற்சி அளப்பரியது. அந்தக் கிராமத்தில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்பதற் காக செருப்பை ஊருக்கு வெளியே கழற்றி  வைத்துவிட்டு இரண்டு ஆண்டுகள் அந்த  ஊருக்கு நடையாய் நடந்து ஊர் பெரியவர்களி டம் பள்ளி வருவதற்கு அனுமதி மட்டுமல்ல; அவர்களது சொந்த இடத்தையே வாங்கி பள்ளிக்கூடம் கட்ட வைத்து விட்டார் வட்டாரக் கல்வி அதிகாரி சென்னப்பன்.

கிராமத்தில் பெண்கள் கல்வி மட்டும் அல்ல ஆண்கள் படிப்பதும் குறைவுதான். அப்படியே அவர்கள் 12 வகுப்புக்கு மேல் படித்தால் ஐடிஐ, டிப்ளமோ மட்டுமே படிப்பர். படித்து முடித்துவிட்டு வெளியூருக்கு வேலைக்கு செல்ல மாட்டார்கள். இந்த கிராமத்தில் ஒருவர் கூட அரசுப் பணியில் கிடையாது. இப்படிப்பட்ட கிராமத்தில் 1970 களிலேயே குடும்பையா நாயக்கர் என்பவர் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். பத்தாம் வகுப்பு  பள்ளிக்கூடத்தில் சென்று படிக்க அனுமதிக்கப் படவில்லை. அஞ்சல் வழியில் படித்து தேர்வு எழுதியுள்ளார். 

1990ம் ஆண்டில் பள்ளிக்கூடம் சென்று முதன் முதலில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர் கிருஷ்ணசாமி. இவருக்கு அந்த ஊரில் வைத்த பட்டப்பெயர் ‘பள்ளிக்கூடம்’. இந்தப்  பள்ளிக்கூடம் கிருஷ்ணசாமியின் மகன்  சஞ்சீவி நாதன் தற்போது டிப்ளமோ முடித்துள்ளார். இவர்தான் முதன்முதலாக வெளியூரில் பணியாற்ற தயாராகி வருகிறார். 

இக்கிராமத்தில் முதன்முதலாக பன்னி ரண்டாம் வகுப்பு படித்தவர் சஞ்சீவி. 1995 ஆம்  ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த இவர் அன்றை க்கு எடுத்த மதிப்பெண் 967. இவர்தான் தற்போது அந்த கிராமத்தின் கல்வி மேலாண்மை குழு வின் தலைவராக உள்ளார். அவரிடம் பேசும்  போது, நான் படிக்கும் காலத்தில் எங்கள் கிராமத் தில் பிரகாஷ் போன்ற ஒரு ஆசிரியர் இருந்தி ருந்தால் என்னுடைய நிலை மாறி இருக்கும் என்று வேதனையை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டே கூறியது நம்மை வேதனைப்படுத்தியது.

கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வர போராடியவர் பிரகாஷ் என்றால் அந்த ஊரில்  பெண்களை மருத்துவமனைக்கு வர வைத்ததில் போராடி வெற்றி பெற்றவர் மருத்துவர் மந்திரி குமார். இவர் ரெட்டியபட்டி மருத்துவமனைக்கு பணிக்கு வந்த பின்பு கம்மாபட்டி கிராமத்தி லிருந்து பெண்கள் யாரும் பிரசவத்திற்கு வந்ததாக எந்தப் பதிவுகளும் இல்லாததால், நேரடியாக கிராமத்திற்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடமும் பெண்களிடமும் உரையாடி மருத்துவமனைக்கு வர வைத்துள்ளார். அவரின் நம்பிக்கையான பேச்சுக்குப் பின்பாக  2015 ஆம் ஆண்டிற்கு பின்பு பிரசவத்திற்காக பெண்கள் மருத்துவமனைக்கு வர ஆரம்பித்துள்ளனர். 

மாணவர்கள் சங்கீதாவுக்கும் கிருஷ்ண சாமிக்கும் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் நன்றியுரை ஆற்றிய ஆசிரியர் ஜெயந்தி, எங்கள் பிள்ளைகள் இவர்கள் இரண்டு பேரைப்  பாராட்டியதைப் பார்த்து உற்சாகமாக இருக் கிறார்கள்; நாங்களும் அவங்கள மாதிரி வரணும்னு எங்க கிட்ட கண்டிப்பா சொல்லுவாங்க என உற்சாகமும் சந்தோசமும் மிகுந்து தழுதழுத்த குரலில் கூறினார்.

இப்போதைய கம்மாபட்டி தொடக்கப் பள்ளியில் படிக்கும் 45 குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரம் சங்கீதா. அவருக்குப் பொறியியல் கல்லூரியில் படிக்க ஆசை. அவருடைய ஆசையை நிறைவேற்ற ஆசிரியர் பிரகாஷ் நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்.


 

;