நார்வே நாட்டில் பெரும் அளவிலான பாஸ்பேட் பாறைப் படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு சூரிய ஒளிப்பட்டைகள் மற்றும் பேட்டரிகளுக்கான உலகின் தேவையை இது பூர்த்தி செய்யும் என்கிறது அதன் உரிமை நிறுவனம். 2021இன் மதிப்பீட்டின்படி உலகின் மொத்த படிவங்கள் 71 பில்லியன் டன்கள். அதற்கு சமமான அளவில் இது உள்ளதாம். பாஸ்பேட் பாறைகளில் பசுமை தொழில்நுட்பங்களுக்கு தேவையான முக்கியப் பொருளான பாஸ்பரஸ் அதிக அடர்த்தியில் உள்ளது. இந்தப் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் பாஸ்பரஸ் பெருமளவு உரத்தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் அதிக ஆற்றல் திறன், கூடுதல் பாதுகாப்பு மற்றும் நீடித்த வாழ்நாள் ஆகியவற்றால் அது சூரிய ஒளிப்பட்டைகள், லித்தியம் பேட்டரிகள், செமிகண்டக்டர்கள் மற்றும் கணினி சிப்களிலும் பயன்படுகிறது. பாஸ்பரஸ் 1669இல் ஜெர்மன் விஞ்ஞானி ஹென்னிங் பிராண்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரஷ்யாதான் உலகின் அதிக அளவு பாஸ்பரஸ் பாறைகளைக் கொண்டிருந்தது. இப்போதைய கண்டுபிடிப்பு ஐரோப்பாவிற்கு சாதகமாக இருக்கும். சீனா,இராக் மற்றும் சிரியா ஆகியவையும் அதிக அளவு பாஸ்பரஸ் படிவங்களைக் கொண்டவை.