around-world

img

உலகின் பாதி ஈர நிலங்கள் அழிந்து போய்விட்டன

சிதம்பரம் இரவிச்சந்திரன்

கடந்த 300 ஆண்டுகளில் உலகில் 20 சதவீத ஈர நிலங்கள் அழிந்துவிட்டன. ஐரோப்பா, அமெரிக்க கண்டத்தில் பாதி ஈர நிலங்கள் அழிந்துவிட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன. யு கே, அயர்லாந்து, ஜெர்மனியில் 75 சதவீத ஈர நிலங்கள் இதே காலத்தில் அழிந்துள்ளன. உலகளவில் இந்தியாவின் பரப்பிற்கு சமமான பகுதிகள் காணாமல் போய்விட்டன. இதுவரை நடந்த ஆய்வுகள் மூலம் உலகம் முழுவதும் இருந்த ஈர நிலங்கள் எந்த அளவிற்கு அழிக்கப்பட்டது என்பது பற்றிய துல்லியமான விவரங்கள் இல்லாமல் இருந்தது. கடந்த ஆய்வுகள் 1970களில் இருந்து 28 சதவீத முதல் 87 சதவீத வரை இந்த நில அமைப்புகள் அழிந்ததாகக் கூறின. ஆனால் முதல்முறையாக இந்த புதிய ஆய்வில் விஞ்ஞானிகள்வரலாற்றுப் பதிவுகள் மற்றும் இன்றுள்ள ஈர நிலங்களின் வரைபடங்களை ஒருங்கிணைத்து முன்பை விடத் துல்லியமான புதிய உலக ஈர நில வரைபடத்தை தயாரித்துள்ளனர்.

ஐரோப்பாவிற்கே முதலிடம்
இதில் இருந்து அனைத்து வகையான 20 சதவீத ஈர நிலங்கள் பூமியில் இருந்தே அழிந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பாவே ஈர நிலப்பகுதிகளின் அழிவில் உலகில் முதலிடத்தில் உள்ளது. அயர்லாந்து அதன் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஈர நிலங்களையும், ஜெர்மனி, லித்துவேனியா மற்றும் ஹங்கேரி ஆகியவை அவற்றின் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான ஈர நிலங்களையும், யு கே, நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவை அவற்றின் ஈர நிலங்களில் 75 சதவிகிதத்தையும் இழந்துள்ளன. சில பகுதிகளில் இந்த அழிவு நிகழ்ந்துள்ளது என்றாலும் உலகில் இன்னும் பாதுகாக்கப்படவேண்டிய பகுதிகள் பல உள்ளன. இவற்றைக் காக்க இன்னமும் காலம் இருக்கிறதுஎன்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் எடியண்ட் ப்ளூட் சூயினார்டு கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயிகள் இந்த நிலங்களை மலட்டு நிலங்களாகக் கருதி அழித்தனர். கடந்த நூற்றாண்டில் இந்த அழிவு மிக வேகமாக நடந்தது. இதனுடன் சேர்ந்து காலநிலை மாற்றம், நிலத்தடி நீர்எடுத்தல், காட்டுத்தீ மற்றும் உயரும் கடல்நீர் மட்டம் போன்றவை ஈர நிலங்களை உலகில் மிகுந்த ஆபத்துக்குள்ளாகும் சூழல் மண்டலமாக மாற்றியுள்ளது என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. ஈர நிலங்கள் பற்றி பிரதேசரீதியாக மக்கள் அதிகம் வாழாத இடங்களில் முந்தைய ஆய்வுகள் நடந்தன. வடக்கு கனடா, சைபீரியா, காங்கோ மற்றும் அமேசானில் மக்கள் வாழும் இடங்களில் இந்த நிலப்பகுதிகள் இன்றும் அதிகமாக உள்ளன. ஆனால் இவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அந்த ஆய்வு முடிவுகள் துல்லியமானதாக இல்லை.

ஈர நிலங்களை அழித்து வயல்வெளிகள்
உலகில் 60 சதவீத ஈர நிலங்கள் உயர் நிலப்பகுதிகளில் பயிர் வளர்ப்பதற்காக அழிக்கப்பட்டன. நெல் வயல்களை உருவாக்க 18 சதவீத ஈர நிலங்கள் அழிக்கப்பட்டன. 8 சதவீத நகரமயமாக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. புல்வெளிப்பகுதிகளில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவை புற்களுக்காக அழிக்கப்பட்டன. காடுகள் போலவே கார்பனை உறிஞ்சுவதில் சதுப்புநிலப் புற்பரப்புகள் முக்கியப்பங்கு வகிப்பதால் காலநிலை மாற்றத்தைக் குறைக்க உதவும் இலக்குகளை அடைய இவை பாதுகாக்கப்படவேண்டியது முக்கியம். இந்த நிலப்பகுதிகள் உயிர்ப் பன்மயத்தன்மையைக் காக்க பெரும்பங்காற்றுகின்றன. பூமியில் வாழும் 40 சதவீத உயிரினங்கள் இந்த நிலப்பகுதிகளிலேயே வாழ்கின்றன. இனப்பெருக்கம் செய்கின்றன. இவை நீரை சுத்திகரிக்கின்றன. வெள்ளப்பெருக்குகளைத் தடுத்து நிறுத்துகின்றன. நகர மக்களின் ஆரோக்கியத்தைக் காக்க உதவுகின்றன. 1950களில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகள் இந்த நிலங்களை அழித்து விவசாயிகள் இவற்றை வயல்களாக மாற்றி உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், காடுகளை உருவாக்கவும் மானியம் கொடுக்கப்பட்டது. ஐரோப்பாவில் ஸ்பெயின் மட்டுமே தன் ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான ஈர நிலங்களை பாதுகாத்துவருகிறது.

வரலாற்றுப்பதிவுகளும் வரைபடங்களும்

ஈர நிலப்பகுதிகள் இழக்கப்பட்டதும் அதன் மூலம் இழக்கப்பட்ட நன்மைகளும் இப்போது துல்லியமாகத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் பூமியின் நிலப்பகுதிகளை குறிப்பாக ஈர நிலப்பகுதிகளை திறம்பட மேலாண்மை செய்யமுடியும். இந்நிலப்பகுதிகளின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் 1900கள் முதல் டிஜிட்டலாக்கப்பட்ட வரலாற்றுப்பதிவுகள் ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் இருக்கும் அழிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட 3,000 நிலப்பகுதிகள் பற்றிய தரவுகள் ஆராயப்பட்டன. 1850களில் இது பற்றிய விவரங்கள் தெளிவானதாக இல்லை. கடந்த டிசம்பர் 2022இல் கனடாவில் நடந்த காப்15 உலக உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டில் பூமியின் 30 சதவீத நிலம், கடல் மற்றும் உள் நாட்டு நீர்வழிகளைக் காக்க உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் இந்த நிலங்கள் பாழ்நிலங்களாகக் கருதப்படாமல் பாதுகாக்கப்படும் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. டான்யூப் நதியின் குறுக்கே இருந்த ஒரு பழுதான அணைக்கட்டு இடிக்கப்பட்டதால் அங்குள்ள உயிரிப் பாதுகாப்புப் பகுதிக்கு நீர் மீண்டும் வரத்தொடங்கியுள்ளது. இதனால் இயற்கை இங்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. முன்பு நினைக்கப்பட்டிருந்ததை விட இப்போது இந்த நிலங்களின் அழிவு குறைவாக உள்ளது என்றாலும் இதுவும் கவலை தரக்கூடிய ஒன்றே என்று பேங்கர் (Bangor) பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் பிரிட்டிஷ் சூழல் சங்கத்தின் வெல்ஷ் கொள்கை வகுப்புக் குழுவின் தலைவர் டாக்டர் கிறிஸ்டியன் டன் கூறுகிறார். இயற்கை உலகில் ஈர நிலங்கள் சூப்பர் ஹீரோக்களாக செயல்படும் சூழல் மண்டலங்கள். அவை காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்க இயற்கையின் அடிப்படையில் அமைந்த தீர்வுகளைத் தரும். அதனால் இழக்கப்பட்ட 20 சதவீத நிலங்களை மீட்பது மட்டும் இல்லாமல் மொத்த நிலப்பரப்பில் இவற்றின் பரப்பை அதிகரிக்கவும் நாம் உடனடியாக செயலில் இறங்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

;