tamilnadu

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ... சட்டமன்றத்தில் மசோதா நிறைவேறியது

சென்னை:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் செவ்வாயன்று நிறைவேறியது.2017-18ஆம் கல்வியாண்டில் இருந்து நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்வி நிலையங்களில் இளநிலை மற்றும் முதுநிலை அளவிலான பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பிற்கு அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து விட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு கடந்த மார்ச் 21ஆம் தேதி அமைக்கப்பட்டது.எம்பிபிஎஸ் படிப்புக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் சேர்வதற்கான காரணங்களை ஆய்வு செய்தும் கண்டறிந்தோம். தீர்வு காணவும் நீதிபதி வி.கலையரசன் தலைமையிலான ஆணையம் பல்வேறு தரப்புகளில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.சாதி, பெற்றோரின் தொழில், பெற்றோரின் கல்வி, வருமானம், பாலினம் மற்றும் பொருளாதார காரணங்களால் இடைவெளி ஏற்பட்டு உள்ளதையும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை காட்டிலும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதும் குறைந்து வருவதையும் அரசுக்கு அந்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உளவியல் சார்ந்த மற்றும் சமூக-பொருளாதார குறைபாடுகள் ,சில மாதங்கள் தீவிர பயிற்சி அளிப்பதன் மூலமும் இலவசமாக வழங்கப்பட்டாலும் கூட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் குறைபாட்டை நீக்க முடியாது என்றும் அந்தக் குழு அரசுக்கு தெரிவித்துள்ளது.இந்தக் குறைபாட்டை களைவதற்காக, அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை படிப்பு வரையில் படித்த மற்றும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவக் கல்லூரி படிப்புக்கான சேர்க்கையில் 10 விழுக்காடு இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், இந்த ஆணையம் தெரிவித்துள்ள இட ஒதுக்கீடானது தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி அளவுகோலாக குறித்துரைக்கப்பட்டுள்ள அனைத்து படிப்புகளுக்கும் நீக்கப்படலாம் என பரிந்துரைத்துள்ளது.ஆகவே, ஆணையத்தின் அறிக்கையில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையில் உண்மையான ஏற்றத்தாழ்வுகள்உள்ளன என்பது தெளிவாகி இருக்கிறது.இத்தகைய சூழ்நிலையில் ஆணையத்தின் பரிந்துரையை கவனமாகப் பரிசீலனை செய்த அரசு, எம்பிபிஎஸ் மற்றும் கூறப்பட்ட தேர்வினை மாநிலத்தில் தகுதித் தேர்வாக குறைக்கப்பட்டு உள்ள பிற மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்ற அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் படித்த மாணவர்களுக்கு இடையே உண்மையான சமத்துவத்தை கொண்டுவருவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்காக தமிழக அரசு சட்ட முன்வடிவை கொண்டு வந்திருக்கிறது.

இந்த சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் செவ்வாயன்று அரசினர் தீர்மானமாக தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு பள்ளிகளில் பயின்ற மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் தகுதியான மாணவர்களுக்கு மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதியில் இளநிலை படிப்புக்கான சேர்க்கையில் முன்னுரிமை வழங்க முன்னாள் நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்ட மசோதா கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார்.பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா செவ்வாயன்றே நிறைவேறியது.

;