சனா, மே 17- ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தக ரீதியாக இயங்கும் விமானம் முதன்முறையாகத் தரையிறங்கியுள்ளது. ஏமன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் சவூதி அரேபிய ராணுவம் இந்த விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்வதைத் தடை செய்திருந்தது. இது பெரும் தொல்லைகளை ஏமன் மக்களுக்கு ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்ல முடியாமல் அவதிப்பட்டார்கள். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்முயற்சியால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இரண்டு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் உடன்பாடு எட்டப்பட்டது. எகிப்த் மற்றும் ஜோர்டானில் இருந்து வாரத்திற்கு இரண்டு விமானங்கள் சனாவிற்கு வந்து செல்லும் என்ற அம்சத்தின் அடிப்படையில், முதல் விமானம் வந்திறங்கியிருக்கிறது.