world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேதன்யாகுவிற்கு எதிராக  இஸ்ரேலியர்கள் தொடர் போராட்டம் 

பாலஸ்தீனத்தின் மீதான போரை உடனடியாக நிறுத்தி பணயக்கைதிகளை மீட்க வேண்டும், நேதன்யாகு ஒரு போர்க் குற்றவாளி, அவர் பதவி விலக வேண்டுமென இஸ்ரேலியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இந்த போராட்டம் தலைநகர் டெல்அவிவ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும்  நடைபெற்று வருகிறது. மேலும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள்  பிரதமர் அலுவலகம் முன்பு  கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் வெள்ளம்: 13 பேர் பலி 

இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாநிலத்தில்  ஏற்பட்ட வெள்ளத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். சனிக்கிழமை முதல் பெய்து வரும்  கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், டெர்னேட் நகரில் உள்ள  வீடுகளை   சேதப்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த கனமழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்பதால் சில சிறிய தீவுகளில் உள்ள  மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளார்.

பாக் பேருந்து விபத்தில்  35 பேர் பலி 

பாகிஸ்தானில்  இரண்டு மணி நேர இடைவெளியில் இரண்டு வெவ்வேறு இடங்களின் நடந்த பேருந்து விபத்துக்களில் 35 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த விபத்தில் 20க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்து ள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஹஜ் யாத்திரை மேற்கொண்டு விட்டு ஈராக்கில் இருந்து ஈரான் வழியாக திரும்பிய ஷியா முஸ்லிம் பயணிகள் பயணித்த பேருந்து , கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்த்த விபத்தில் தான் இந்த 35 பேர் பலியாகியுள்ளனர். 

பிரான்சில் ஆட்சி அமைப்பதில்  தொடரும் இழுபறி

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த  கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி தொடர்கிறது. கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி மக்ரோனு டன் இடதுசாரிகள் கூட்டணி நடத்திய பேச்சு வார்த்தையில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்தி சுமூக முடிவெடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இடதுசாரி பிரதி நிதிகள் கொண்ட எந்த அமைச்சரவையையும் ஏற்க மாட்டோம் என தீவிர வலதுசாரியான தேசிய பேரணி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரோவின் வெற்றியை  உறுதி செய்தது நீதிமன்றம்

வெனிசுலாவின் ஜனாதிபதியாக வென்ற நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக அவர் மீது தேர்தல் முறைகேடு குற்றம் சுமத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அந்நாட்டு நீதிமன்றத்தின் சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு விசாரணை முடிவில் தேர்தலில் எந்த மோசடியும் நடைபெறவில்லை என மதுரோவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொய் குற்ற சாட்டுகளை பரப்பிய எதிர்கட்சித்தலைவர் எட்மண்டோ கோன்சாலஸ் மீது குற்றவியல் வழக்கு பதிவாகியுள்ளது.