நியூயார்க், ஜூலை 16- நாடுகளின் வளங்களை (பணத்தை) போருக்கு பதிலாக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக் குறியீட்டை அடைய பயன்படுத்தவும் என ஐ.நா அவை துணைப்பொதுச் செயலாளர் அமீனா முகமது அறிவுறுத்தியுள்ளார். உலகளவில் நிலையான வளர்ச்சிக் குறியீட்டை அடைய தடுமாறி வரும் நிலையில் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உடனடி மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். காசா, சூடான், உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் நடந்து வரும் போர்கள் உலக நாடுகளின் அரசியல் கவனத்தை வளங்களை அதிகரிப்பது, வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவது காலநிலை பேரழிவைத் தடுப்பது உள்ளிட்ட அவசர வேலைகளில் இருந்து திசை திருப்புகின்றன என்றும் அவர் பேசியுள்ளார். இந்த சூழல் தொடருமானால் 2030 நெருங்கும் போது நிலையான வளர்ச்சிக்குறியீட்டில் 17 சதவீத இலக்குகளை மட்டுமே அடைய முடியும். இது போதுமானதல்ல. எனவே ராணுவத்திற்கான செலவுகளை குறைத்து, அதற்குப் பதிலாக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு நிதிகளை பயன் படுத்துங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு நாடும் திட்ட மிட்டுள்ள காலநிலை செயல் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். மேலும் பசுமை எரிசக்தி, டிஜிட்டல் பரிவர்த்த னைகள் என மாற்றத்தை முன்னெடுக்க வேண்டும். உலகளவில் நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள நிதி ஏற்றத்தாழ்வுகளை குறிப்பிட்ட அவர் பாதிக்கப்படக்கூடிய மக்கள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலை நாட்ட வேண்டும், பாலின சமத்துவமின்மையை எதிர்த்துப் போராட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் 2030 ஆம் ஆண்டு நிலையான வளர்ச்சி குறியீட்டை அடைய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.