world

உக்ரைன் : களைகட்டும் ஆயுத வியாபாரம்

லண்டன், ஜன.19- உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கப் போவதாகச் சொல்லி, அந்நாட்டின் தலையில் ஏராளமான ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் கட்டி வருகின்றன. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ், “பல்வேறு பாதுகாப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவெடுத்திருக்கிறோம். முதல் கட்டமாக ஏற்கனவே பல ஆயுதங்களை அனுப்பி விட்டோம்” என்று குறிப்பிட்டார். எத்தகைய ஆயுதங்கள் என்பதை அவர் விளக்கிக் கூற வில்லை. ஆனால், போர் தொடுக்கப்பட்டால் பாதுகாப்புக்குப் பயன்படும் வகையில் ஆயுதங்களை வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். பிரிட்டன் வழங்கும் ஆயுதங்கள் தூரம் குறைவுள்ள இலக்கு களைக் கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிட்ட வாலஸ், சுய பாதுகாப்பை மனதில் கொண்டு இந்த ஆயுதங்கள் உக்ரைனின் படைப்பிரிவுகளில் இணைக்கப்படும் என்றார். ரஷ்யாவால் உக்ரைன் தாக்கப்படலாம் என்பதால்தான் இத்தகைய நடவடிக்கை கள் எடுக்கப்படுகின்றன என்ற அவர், உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் குவிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார்.

ஆயுத விற்பனை பற்றி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய பிரிட்டன் அதிகாரிகளில் ஒருவர், “பீரங்கித் தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உதவும் ஆயுதங்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ரஷ்யாவிடமிருந்து தாக்குதல் வர வாய்ப்புள்ள நிலையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உக்ரைனுக்கு இந்த ஆயுதங்கள் உதவும்” என்று குறிப்பிட்டார்.  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்காவும், பிரிட்டனும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இது பொய்ப் பிரச்சாரம் என்று ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் ஆயுத வியாபாரத்தை முடுக்கி விட்டுள்ளன. ஏற்கனவே அமெரிக்கா தனது ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியுள்ளது. தற்போது பிரிட்டனும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

;