world

img

சரிவடைகிறது பிரிட்டன் பொருளாதாரம்

லண்டன், ஜூன் 10- 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் பொருளாதாரம் சரிவடையும் என்று ஆய்வொன்றில் கிடைத்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த புள்ளிவிபரத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு வெளியிட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றிலிருந்து பிரிட்டன் மீண்டு வந்து கொண்டிருந்தது. அந்த மீட்சியைக் காலி செய்யும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் உள்ளன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. பிரிட்டன் மட்டுமல்ல, பல்வேறு நாடுகள் மோசமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன என்று எச்சரிக்கிறார்கள்.

2021 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரங்களை வெளியிட்டே வருங்காலம் எப்படி இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் பிரிட்டனை விட, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படப் போகின்றன. ஜப்பான்தான் பெரும் அடி வாங்கப் போகிறது. இருந்தாலும், 2023 ஆம் ஆண்டில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியே இருக்காது என்று கணித்துள்ளனர். அதே வேளையில், யூரோ மண்டலத்தில் உள்ள நாடுகளின் வளர்ச்சி 1.6 விழுக்காடாக இருக்கும். சிறப்பு நடவடிக்கை என்று ரஷ்யாவால் அழைக்கப்படும் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு எதிராகத் தடைகளைப் போடுவதற்கான வேலைகளை பிரிட்டன்தான் முன்நின்று பார்த்துக் கொண்டது.

ரஷ்யாவின் எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை குறைந்த அளவே பிரிட்டன் நம்பியிருப்பதால், ரஷ்யாவை தனிமைப்படுத்த வேண்டும் என்று பலத்த குரலில் கோரி வருகிறது. ஆனால், உலகம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்பு பிரிட்டனை விட்டுவைக்கவில்லை. மேலும், வரலாறு காணாத பணவீக்கத்தை நோக்கி பிரிட்டன் பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பின் பொதுச் செயலாளரான மத்தியாஸ் கோர்மன் கூறுகையில், “உலகம் முழுவதும் பண்டங்களின் விலைகள் கடுமையாக எகிறியுள்ளன. இதனால் பணவீக்கம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. வருமானம் மற்றும் செலவினம் ஆகிய இரண்டிற்கும் ஏராளமான தடைக்கற்கள் போடப்படுகின்றன. இது மீட்சியைத் தாமதப்படுத்துகிறது” என்றார். உணவு தானிய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் உக்ரைன், தனது இருப்பை ஏற்றுமதி செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. அதுவும் விலையேற்றத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.