world

img

இமயத்தின் உச்சியைத் தொட்ட தமிழ் மங்கை!

சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. உலகத்தில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொடும் முயற்சி வெற்றிகரமாக நிறைவேறிய தால்தனது முயற்சிக்கு ஊக்கம் அளித்து உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து முத்துச்செல்வி அனுப்பியது.  சிறு வயது முதலே மலை ஏற்றத்தின் மீது ஆர்வமும் காதலும் அளவு கடந்தது. தொழில்முறை வீராங்கனை யாக மாறப்போகிறேன் என்று கூறிய போது அவரது குடும் பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். எதையும் கண்டு கொள்ள வில்லை.  இலக்கு மட்டுமே நோக்கமாகக் கொண்டு இமயத்தின் 24 ஆயிரம் அடி உயர சிகரத்தில் முகம் பதித்தார். கடுமையான பனிச்சரிவால் காயமடைந்தார். ஓரளவு தேறிய பிறகு பய ணத்தை தொடர தயாரா? என்று கேட்டபோது சற்றும் யோசிக் காமல் சரி என்றார். உத்தரகண்ட் மாநிலத்தில் நகுரி என்கிற ஒரு கிராமத்தில் பிறந்து, மரணத்தின் அருகே வரை சென்றும் முன்வைத்த காலை பின் வைக்காமல் பயணத்தை தொடர்ந்தார். 1984 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி தனது பிறந்த நாளுக்கு முந்தைய நாள், எவரெஸ்ட் சிகரத்தை தனது காலடிக்கு கீழே கொண்டுவந்தார். உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற மகத்தான வரலாற்று சாதனை படைத்தார் பச்சேந்திரி பால்.

அவரைத் தொடர்ந்து, ஜம்மு பகுதியைச் சேர்ந்த சங்கீதா  சிந்திப்பால், 53 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய மூத்த இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார். 7 மலை முகடுகளையும் உலகின் ஏழு உயர்ந்த கண்ட சிகரங்களை யும் ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமைக்கு சொந்த மானவர் பிரேமலதா அகர்வால். இவர்களுடன் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபிகா ரத்தோர் எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை ஏறி சாதனை படைத்தார். விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும், தமிழ் நாட்டைச் சேர்ந்த கோவளம் ராஜசேகர் சில தினங்களுக்கு முன்பு எவரெஸ்ட் மலை சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது. இரண்டு கால்கள் அவ சியம் இல்லை என்பதை நிரூபித்தும் காட்டினார் 25 வயதான வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா. லக்னோவில் இருந்து தலைநகர் தில்லிக்கு ரயிலில் பயணம் செய்த போது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாக தாக்கி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது. இதில் தனது இடது காலை இழந்தார். ஆனாலும் தனது வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப் பில் இருந்ததால் சோர்ந்து போய் முடங்க விரும்பவில்லை. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். 40 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் இந்த சாதனை முயற்சியில் வெற்றி பெறவில்லை. தற்போது, ஒரு பெண் சிகரத்தை அடைந்துள்ளார். அவரது பெயர் முத்தமிழ் செல்வி. சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டி கிராமம்.

விடாமுயற்சி...

பச்சேந்திரி பால் போன்று, இவரும் சிறு வயது முதல் மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். உலகின் மிக உயர மான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பது இவருக்கும் சிறு வயது கனவு. தாய்,தந்தை இரு வரும் படிப்பறிவு இல்லாதவர்கள். மகளின் இந்தப் பயணம் கொஞ்சம் பிடிக்கவில்லை. இதனால், ஆதரவும் ஒத்து ழைப்பும் கிடைக்கவில்லை. தனது லட்சிய பயணத்தில் இருந்து பின் வாங்காமல் அதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டார். மறு புறத்தில் படிப்பையும் தொடர்ந்தார். ஆரம்ப காலகட்டத்தில் தடகள போட்டிகளில் பங்கேற்று வந்தார். கல்லூரி படிப்பை  முடித்து, ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வரும் முத்தமிழ் செல்வி, மென்பொருள் பொறியாளர் குணசேக ரனை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.  இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதால் குடும்பம், வேலை என்று சுருங்கிக் கொள்ளாமல் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டுப் பார்க்க வேண்டும் என்கிற தனது லட்சியப் பய ணத்தை தொடர்ந்தார். நண்பர்கள் உதவியுடன் அதிக உயரம் கொண்ட மலைகளில் கவனமாகவும் தீவிரமாகவும் ஏறி பயிற்சியும் மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மலைப்பட்டு மலையின் 155 அடி உச்சியிலிருந்து கண் களைக் கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 8 மகளிர் தினத்தன்று சாதனை படைத்தார் முத்தமிழ் செல்வி. பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2021 டிசம்ப ரில் ஹிமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் ஒரு சிறுமியை முதுகில் கட்டிக் கொண்டும், மற்றொரு சிறுமியை கையில் பிடித்துக் கொண் டும் 165 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்திற்குள்ளாக இறங்கி சாதித்துக் காட்டினார். வீரமங்கை வேலுநாச்சியார் புகழை மக்கள் மத்தியில் பரப்பும் வகையில் 2022 ஆம் ஆண்டு குதிரையில் 3 மணி நேரம் அமர்ந்து 1,389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார். மேலும், இமாச்சல பிரதேசம், லடாக் பகுதி, காங் யெட்சே பீக் -2 (Kang Yatse Hill) மலையில் 5500 மீட்டர் வரை ஏறி சாதனை படைத்தார். இத்தனை சாதனைகளுக்கு பிறகு தான், உலகிலேயே மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இந்திய நாட்டின் மூவர்ணக் கொடியை பறக்க விட வேண்டும் என்கிற அந்த முயற்சிக்கு, ஏசியன் டிரெக்கிங் எனும் தனியார் நிறுவ னத்தை அணுகியுள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு மலை யேறும் படிப்பை முடிக்க வேண்டும் அல்லது 5 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்கிற விதிமுறைகளை தெரிவித்துள்ளனர்.

மலையேறும் படிப்பை முடிக்காத முத்தமிழ்செல்வி, சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் உள்ள 6 ஆயிரத்து 496 மீட்டர் உயரம் கொண்ட பனிமலை உச்சிக்கு  தனி பெண்ணாக சென்று முத்திரை பதித்தார். இந்த சாதனை மூலம் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்கு  முதல் தமிழ் பெண்ணாக தகுதி பெற்றார். எவரெஸ்ட் சிகரம் ஏற தகுதிபெற்ற அதே நேரத்தில்,  சுமார் 50 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இது பெரும் தொகை என்பதால், பொருளாதார நெருக்கடி தடையாக நின்றது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் 20 லட்சம் ரூபாய் மட்டுமே திரட்ட முடிந்தது. பயணத்தை துவக்க குறுகிய காலமே இருந்ததால், எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழ்நாடு அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட ஆட்சி யராக பணிபுரிந்து வரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினருமான மேகநாத ரெட்டி மேற்கொண்ட நடவடிக்கை கை கொடுத்தது. அரசு சார்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய  இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மீதம் தேவைப்பட்ட 15 லட் சத்தை ஸ்பான்சர்கள் மூலமாகவும் கொடுத்து உதவினார். அடுத்து, தனது பயணத்தை திட்டமிட்டபடி துவக்கி னார்.  ஏப்ரல் 2 அன்று சென்னையில் இருந்து தில்லி புறப் பட்டார். அங்கிருந்து நேபாள் தலைநகர் காட்மாண்டு  சென்று,  ஆசிய மலையேற்றத்தின் 37 உறுப்பினர்களுடன் 400 பேர் கொண்ட குழுவில் தமிழ்நாட்டில் இருந்து அங்கம் வகித்தார். இந்த பெரும் முயற்சி விருதுநகர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கு பெருமையை சேர்த்தது. 

சாதனை நாயகி!

தனது 38 நாள் பயணத்தை முடித்து 7,150 மீட்டர் தூரம் ஏறி சாதனை படைத்த வீரமங்கை முத்தமிழ் செல்வி, எவ ரெஸ்ட் சிகரத்தில் இருந்து தனது அனுபவத்தை வீடியோ பதிவு செய்து அனுப்பியதுடன், “எவரெஸ்ட் தொடும் தனது முயற்சிக்கு ஊக்கமளித்து உதவி செய்த தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். மீதமிருந்த 1,699 மீட்டர் தூரத்தையும் அடுத்த பத்து நாட்களில் மே 18 அன்று மவுண்ட் எவரெஸ்டுக்கு பயணத்தை தொடங்கி, ஐந்து நாட்களில் மே 23 ஆம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்து சாதனையை வசப்படுத்தினார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சாதனை நாயகி வீரமங்கை முத்தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். எந்த ஒரு சாதனையின் உச்சத்தையும் எவரெஸ்ட் சிகரத் தோடு தான் ஒப்பிடுகின்றோம். சிறிய வயது முதலே மலை யேறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்செல்வி, 33 வயதில் தனது கனவு லட்சியத்தை அடைந்துள்ளார். அவரது இந்த சாதனைப் பயண வெற்றி மேலும் தொடர வாழ்த்துவோம். 

- சி.ஸ்ரீராமுலு

 

;