world

img

சிரியாவின் லைலா முஸ்தபாவுக்கு உலகின் சிறந்த மேயர் விருது

உலகின் சிறந்த மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார் சிரிய நாட்டின் ரக்கா நகரைச் சேர்ந்த லைலா முஸ்தபா.  2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருது பட்டியலில், லைலா முஸ்தபாவின் பெயர் மட்டுமே தேர்வானது. லைலா முஸ்தபா (34) ஒரு குர்திஷ் பெண். வடக்கு சிரியாவின் ரக்காவில் பிறந்தார்.சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற இவர், ரக்கா சிவில் கவுன்சிலின் இணைத் தலைவராக இருந்துள்ளார். 2017 அக்டோபர் 17 சிரியா ஜனநாயக படைகளால் (எஸ்.டி.எஃப்) ஐ.எஸ் குழு ரக்காவில் வீழ்த்தப்பட்டது. அப்போது முதல் லைலாவின் தலைமையின் கீழ், ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் போரால் அழிக்கப்பட்ட தங்களுடைய நகரை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இடைவிடாது வேலை செய்கிறார்கள்.ரக்கா மீட்கப்பட்ட பிறகு எஸ்டிஎஃப் மூலம் பல பிராந்திய அமைப்புகளில் நகர சபை நிறுவப்பட்டது. ரக்கா நகரின் புனரமைப்பில் லைலா தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியை அங்கீகரிக்கும் வகையில் லைலா உலக மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.

உலக மேயர் திட்டம் (இது சர்வதேச ஆராய்ச்சி சிந்தனைக் குழுவான தி சிட்டி மேயர்ஸ் ஃபவுண்டேஷனால் இயக்கப்படுகிறது) 2004 முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஈராண்டுகளுக்கும் இந்த திட்டம், வெவ்வேறு கருப்பொருள்களை கொண்டு விருது பெறுவோரை தேர்வு செய்கிறது. 2016ஆம் ஆண்டில், இந்த திட்டம் அகதிகள் நெருக்கடியில் கவனம் செலுத்தியது. 2018இல், உள்ளூர் நிர்வாகப் பதவிகளில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவத்தில் கவனம் செலுத்தியது. பிறகு இந்த ஆண்டு, பெருந்தொற்று நோய்களின் போது நகரங்களின் நிலைமை தொடர்பாக அறக்கட்டளை கவனம் செலுத்தியது. லைலா முஸ்தபாஃபா உட்பட உலகம் முழுவதிலுமிருந்து ஒன்பது மேயர்கள் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் வெற்றிப் பட்டியலில் இடம்பெற்றது இவர் மட்டுமே. ரக்காவை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை லைலா முஸ்தஃபா மேற்கொண்டபோது, அந்த நகரில் போரில் சுக்குநூறான சிதைவுகள் மற்றும் இடிபாடுகள் தவிர எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. நகரில் மின்சாரமோ குடிநீர் வசதியோ இல்லை. பொது சேவைகள் கிடையாது. ஒரு சில சுகாதார சேவைகள் மட்டுமே இயங்கின.ஆனால் 2020ஆம் ஆண்டில் நகரின் பல்வேறு கலாசாரம், மதம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படும் ரக்கா அருங்காட்சியகம் மீண்டும் உருவாக்கப்பட்டு புதிய அடையாளத்துடன் விளங்குகிறது.

“அழிவின் அளவோடு ஒப்பிடும்போது, அது ​​95% அழிவை எட்டியிருந்தது. நாங்கள் அதை அங்குலம் அங்குலமாக கட்டியெழுப்பி சாதித்தோம்,” என்றார் லைலா. முன்பு சிறை போல இருந்த நகரம், இப்போது பாதுகாப்பான நகரமாகியிருக்கிறது. மின்சாரம், குடிநீர் வழங்கல் மற்றும் மருத்துவமனைகள், பள்ளிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட பிற உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படு கின்றன. வீடுகள், வீதிகள் உள்ளிட்ட இதர பொது சேவைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன என்கிறார் லைலா. இவரது மேற்பார்வையின் கீழ், 390க்கும் மேற்பட்ட பள்ளிகள், 25க்கும் மேற்பட்ட சுகாதார மையங்கள், 10 தனியார் மற்றும் பொது மருத்துவமனைகள், எட்டு மின் நிலையங்கள், 30 குடிநீர் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.  சிரியா முழுமைக்குமான ஒரு வெற்றிகரமான முன்மாதிரி நகராக ரக்கா மாறும் என்று லைலா நம்புகிறார், குறிப்பாக பாலின சமத்துவம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறுகிறார்.

நகர சபையை வழிநடத்தும் ஒரு இளம் குர்திஷ் பெண்ணாக லைலா இப்பகுதியில் உள்ள பல்வேறு இனங்கள், சமூகம் மற்றும் கலாசார பின்னணியிலிருந்து வரும் பல பெண்களை ஊக்குவிக்கிறார். சமூகத்தையும் நகரத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர்களுக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்த்தச் செய்கிறார். சிவில் கவுன்சிலில் பெண்களின் விகிதம் 40%ஐ எட்டியது. நகரத்தில் இது மிக அதிக சதவீதமாகும்”. ரக்காவின் சிவில் கவுன்சிலில் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 10,500. இதில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 4,080 பெண்கள் உள்ளனர். ரக்காவில் ஒட்டுமொத்தமாக அனைத்து நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளது, இது நாங்கள் எப்போதும் போராடும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான சான்று. பெண்களின் உரிமைகள் எங்கெல்லாம் கட்டுப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் பெண்கள் உறுதியுடன் தங்களை நம்பினால் ஒவ்வொரு துறையிலும் தங்கள் திறன்களை அவர்களால் நிரூபிக்க முடியும்,” என்கிறார் லைலா. ரக்கா வரலாற்றில் இங்குள்ள கவுன்சில் தலைவராக ஒரு விதிவிலக்கான மற்றும் புகழ்பெற்ற நிகழ்வாக லைலாவின் தேர்வு ஆகியிருக்கிறது. இந்த மண்ணில் இதுவரை ஆண்டு வந்த சிரியா அரசாங்கமானாலும் சரி, துருக்கியை ஆதரித்து வந்த எதிர்கட்சி அல்லது ஐஎஸ் குழுவை ஆதரித்த கட்சிகளின் தலைமை ஆனாலும் சரி, எல்லா நேரத்திலும் இங்கு ஆண்களே பதவிகளை அலங்கரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;