world

img

நாய்களுக்கான செலவை விட குறைந்த ஊதியம் : இந்திய தொழிலாளர்களை சுரண்டி வரும் ஹிந்துஜா குழும குடும்பம்

பெர்ன், ஜூன் 23 - சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் ஹிந்துஜா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வர குடும்பத்தினர் இந்திய தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டி வந்த செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹிந்துஜா குழும, குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை  ஊதியம், வேலை நேரம் போன்ற எந்த அடிப்படை உரிமைகளையும் கருத்தில் கொள்ளாத  ஒப்பந்தத்தின் மூலம் பணிக்கு அமர்த்தி அவர்களை சுமார் 16 முதல் 18 மணிநேரம் குரூரமாக வேலை வாங்கி சுரண்டியதுடன், வீட்டுப் பணியாளர்களுக்கு மாதத்திற்கு 220 முதல் 400 பிராங்குகள்  (ரூ. 22,000 மற்றும் ரூ. 37,500) வரை மட்டுமே ஊதியமாக வழங்கியுள்ளனர்.  இந்த ஊதியம் சுவிட்சர்லாந்தில் அவர்கள்  வாங்க வேண்டிய  அடிப்படை ஊதியத்தை விட 90 சதவீதம் குறைவாகும். அதாவது அவர்கள் வீட்டு நாய் பராமரிக்க  செய்யப்படும் பணத்தை விட மிக குறைவாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  போபர்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் ஹிந்துஜா குழுமம் இந்தியா அளவில் 7 ஆவது பணக்கார குடும்பமாகவும் உலகளவில் 147 ஆவது கோடீஸ்வர குடும்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்குடும்பம் மீது தொடரப்பட்ட வழங்கில் அக்குடும்ப உறுப்பினர்கள் பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகிய 4 பேருக்கும் சுவிஸ் நாட்டின் கீழமை  நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.  மேலும்  குற்றவாளிகள் தங்கள் தொழிலாளர்களின் நிலையையும் நாட்டின் சட்டவிதிகளையும் அறிந்தே இந்த தவறை செய்துள்ளனர் என பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமலுக்கு தலா 4.6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்.அவர்களது  மகன் அஜய் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோருக்கு  நான்கு ஆண்டு சிறை தண்டனையும், அக்குடும்ப  மேலாளருக்கு 18 மாத இடைநீக்கத்தையும்  தண்டனையாக விதித்து கீழமை நீதிமன்ற நீதிபதி சபீனா மஸ்கோட்டோ தீர்ப்பு வழங்கியுள்ளார்.  தற்போது  சுவிஸ் நாட்டின் கீழமை நீதிமன்றம் கொடுத்த வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக ஹிந்துஜா குடும்பம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  அந்நாட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே அக்குடும்பத்தினரின் மீதான இறுதி நடவடிக்கை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

;