world

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் கொரோனா

கௌடெங், (தென்னாப்பிரிக்கா), டிச.4- ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதாக தென்னாப்பிரிக்கா கவலை தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஏழில் நோய்த்தொற்றுகள், நேர்மறை விகிதங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்தார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை இரவு மட்டும் 16,055 நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றார். தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் (NICD) டாக்டர் வசீலா ஜசாத் கூறுகையில், “கடந்த காலங்களில் குழந்தைகள் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படவில்லை. குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படவில்லை.

ஆனால், மூன்றாவது அலையில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 15 முதல் 19 வயதுடைய பதின்ம வயதினரிடையே அதிக தொற்றுப் பாதிப்பு இருந்தது. இப்போது, இந்த நான்காவது அலையின் தொடக்கத்தில், அனைத்து வயதினரிடையேயும், குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்டவர்களிடத்தில் பாதிப்பு அதிகமிருப்பதை காண்கிறோம்.” இவர்களுக்கு அடுத்த நிலையில் 60-வயதிற்கு மேற்பட்டவர்களிடம் பாதிப்பு உள்ளது என்றார். தென்னாப்பிரிக்காவின் கௌடெங் மாகாணத்தில் சுமார் என்பது சதவீதம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் என்ட்சாகிசி மாலுலேகே கவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இளைய வயதினர் மட்டுமல்ல கர்ப்பிணிப் பெண்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனரா என ஆய்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

” “ஃப்ரீ ஸ்டேட் மற்றும் நார்த்தன் கேப் மாகாணங்களில் மட்டும் நோய்த் தொற்று பரவல் குறைவாக உள்ளது. நாங்கள் ஒன்று முதல் இரண்டு சதவீதம் பற்றிக் கூறவில்லை. மூன்று முதல் ஐந்து சதவீதம் பாதிப்பை பற்றியே கவலை கொள்கிறோம்”என்றார். இதற்கிடையில் ஒமைக்ரான் 38 நாடுகளுக்கு பரவிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை. ஒமைக்ரான் மிகவும் நோய்த் தாக்கத்தைஏற்படுத்துகிறதா? சிகிச்சைகள் தடுப்பூசிகள் எந்தளவிற்கு பயனளிக்கின்றன என்பதைக் கண்டறிய சில வாரங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.

;