world

img

தென் ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்

கொரோனாவின் மற்றொரு திரிபொன்று தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை வந்த திரிபுகளில், இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகளும் அறிவியலாளர்களும் கணிக்கின்றனர்.

இந்த புதிய கொரோனா திரிபு, ‘பி.1.1.529’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதற்கு விரைவில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் கிரேக்க குறியீட்டு பெயரொன்று  வழங்கப்படுமென கூறப்படுகிறது. இந்த புதிய திரிபு, மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காக பெருகும், பிறழ்வும் தன்மையோடு இருப்பதாக இதை கண்டறிந்துள்ள ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் தொற்றுநோய் மற்றும் அதன் ஆய்வுக்கான மைய இயக்குநர் டூலியோ தெரிவிக்கையில், “இதுவரை ஏற்பட்ட கொரோனா திரிபுகளில், இது மிகவும் அசாராதணமானதாக பிறழ்கின்றது. பிற திரிபுகளிலிருந்து இது நிறைய விஷயங்களில் வேறுபட்டுள்ளது. எங்களை இந்த திரிபு பெரும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது. இதுவரை வந்த திரிபுகளில், இந்த திரிபு புதிய பரிணாமமாக உள்ளது.

இன்னும் பல திரிபுகள் அல்லது பிறழ்வுகள் இதிலிருந்தோ இதற்குள்ளோ உருவாகுமென எதிர்ப்பார்க்கிறோம். இந்த B.1.1.529 திரிபு ஒட்டுமொத்தமாக 50 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது, அதில் ஸ்பைக் புரதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் உள்ளன. ஸ்பைக் புரதம் என்பது, தற்போதைய கோவிட்-19 தடுப்பூசிகளின் இலக்காகும், மேலும் நமது உடலின் செல்களுக்குள் செல்வதற்காக ஸ்பைக் புரதம் பயன்படுத்துகிறது. தற்போது இந்த திரிபில் அதன்மேலேயே பிறழ்வுகள் ஏற்பட்டுள்ளன” என்றுள்ளார்.

டெல்டா திரிபை பொறுத்தவரை, ரெசெப்டார் என்ற கொரோனா ஏற்பு பகுதியில், இரண்டு பிறழ்வுகள்தான் தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய திரிபில் 10 பிறழ்வுகள் உள்ளன.

முந்தைய மாறுபாடுகளைக் காட்டிலும் இது அதிகமா பரவக்கூடியதா ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதா என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் உறுதிப்படுத்த முயற்சிக்கின்றனர். அப்படி ஏதும் இருந்தால், இது உலகளவில் நான்காம் அலை கொரோனாவுக்கு வழிவகுக்கலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த திரிபு, முதன்முதலில் இந்த வார தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அதை சுற்றியுள்ள சில அண்டை நாடுகளில் பரவியது. குறிப்பாக போட்ஸ்வானாவில் பரவியது. அங்கு, முழுமையாக அனைத்து டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டோருக்கும் இது பரவியுள்ளது. இந்த இடத்தில், இந்த திரிபு முதலில் போட்ஸ்வானாவில்தான் ஏற்பட்டது என்பது போன்ற கருத்துகளும் வைக்கப்படுகின்றன. தற்போதுவரை இந்தத் திரிபின் உறுதியான தோற்றம் தெரியவில்லை.

தற்போதைய நிலவரப்படி தென் ஆப்ரிக்காவில் இந்த திரிபுக்கு 100 பேரும், போட்ஸ்வானாவில் 4-க்கும் மேற்பட்டோரும் இந்த திரிபு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹாங்காங்க் பகுதியில் இரு சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள், பைசர் தடுப்பூசி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களை பரிசோதித்திருந்த தொற்றுநோயியல் மருத்துவர் “இவர்கள் உடலில் வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பிசிஆர் பரிசோதனையில் சி.டி. மதிப்புகள் 18, 19 என்றும் மிக அதிகமாக இருந்தது” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்துதான் தடுப்பூசி செலுத்தியோருக்கும் இந்த திரிபு மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறதோ என்ற அச்சம் ஆய்வாளர்களுக்கு எழுந்துள்ளது.

இவற்றைத் தொடர்ந்து, வியாழன்று தென் ஆப்ரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங்க் பகுதியிலிருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் ஒன்றிய அரசால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். “இந்த புதிய திரிபு, மிகத்தீவிர பொது சுகாதார பிரச்னைகளை ஏற்படக்கூடியதாக பார்க்கப்படுகிறது” என மத்திய அமைச்சகமும் தெரிவித்திருந்தது.

;