மெக்சிகோ சிட்டி, ஏப்.28- லத்தீன்-அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளில் மருத்துவ சேவைகளை ஒழுங்குபடுத்தி அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் சுய சார்பை எட்டும் முயற்சியாக ‘அம்லக்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இத்தகைய ஒழுங்குபடுத்தும் அமைப்பை உருவாக்கும் பணியில் கியூபா, கொலம்பியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. இந்த அமைப்பு மருந்துகள் மட்டுமில்லாமல் மருத்துவக் கருவிகளின் உற்பத்தியையும் ஒருங்கிணைத்து லத்தீன்-அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளுக்கு இந்த இரண்டும் கிடைப்பதில் பெரும் பங்காற்ற இருக்கிறது. மூன்று நாடுகளின் சுகாதாரத்துறை இயக்குநர்கள் இந்த அமைப்பை உருவாக்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். பாதுகாப்பான, தரமான மற்றும் வீரியமான மருந்துகளை இந்த அமைப்பு உற்பத்தி செய்து, பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு விநியோகம் செய்யவிருக்கிறது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த மெக்சிகோவின் மத்திய சுகாதார ஆணையத்தின் இயக்குநர் அலிஜாண்ட்ரோ ஸ்வார்ச், ‘‘லத்தீன்-அமெரிக்காவும், கரீபிய நாடுகளும் தற்போது இருப்பதைப் போன்று பிரிந்து இருந்தால், வர்த்தகத்திற்கு பணக்கார நாடுகளை நம்பியே இருக்க வேண்டும். அந்த நாடுகள் நம்மிடமிருந்து மூலப் பொருட்களை வாங்கிக் கொண்டு, அவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களை நம் தலை மீது கட்டி விடுவார்கள். அது அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட பெரும் லாபத்தையும் தருகிறது’’ என்றார். மே மாதத்தில் கொலம்பியாவின் தலைநகர் பொகோடாவிலும், ஜூன் மாதத்தில் கியூபாவின் தலைநகர் ஹவானாவிலும் இந்த அமைப்பின் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. மேலும் பல நாடுகள் இந்த அமைப்பில் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.