world

img

அமெரிக்காவில் அதிகரிக்கும் வேலையின்மை போரில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசாங்கம்

நியூயார்க், ஆக.4- அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிய பணியிடங்களை உருவாக்குவதிலும், காலிப்பணியிடங்களை நிரப்புவதிலும் பெரும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஜூன் மாதம் 4.1 சதவீதத்திலிருந்த இருந்த வேலையின்மை விகிதம் ஜூலை மாதம் 4.3 ஆக அதிகரித்துள்ளது எனவும் கடந்த நான்கு மாதங்களாக வேலையின்மை அளவு அதிகரித்து வருகிறது எனவும் தெரிய வந்துள்ளது. 

மேலும் அமெரிக்க தொழிலாளர் சந்தையில் பணி நீக்கங்களை விட புதிதாக பணியமர்துவது குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் ஏற்படும் பயங்கர காட்டுத் தீ, புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் அதிக நாட்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழலும் முக்கிய பிரச்சனையாக உருவாகி யுள்ளது. இது போன்ற காரணங்களால் அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது.

இவ்வாறு தொழிலாளர் சந்தை மோசமடைந்து வரும் சூழலில் அமெரிக்கப்  பொருளாதாரம் பாதிக்கப்படும் எனவும் குறிப்பாக அங்குள்ள தொழிலாளர் வர்க்கம் மீண்டும் ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வார்கள்  எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

போரில் மட்டுமே கவனம் 

தொழலாளர்கள் துயரங்களை சந்தித்து வரும் இதே கால கட்டத்தில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கும்  உக்ரைனுக்கும் கோடிக்கணக்கான டாலர்களுக்கு ஆயுதங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.   

தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களில் கூட வேலையின்மை குறித்தோ, மோசமடைந்துள்ள அமெரிக்க தொழிலாளர் சந்தை  குறித்தோ விவாதங்கள்  எழவில்லை.  ஜனாநாயக கட்சியின்  தற்போதைய ஜனாதிபதி பைடன் ,அக்கட்சியின் ஜனாதிபதி  வேட்பாளர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப்பும் இது குறித்து விவாதிக்க மறுத்து வருகின்றனர்.

ஒருபுறம் இன, மத, அடையாளங்களை பயன்படுத்தி டிரம்ப் வாக்கு சேகரித்து கொண்டே நிறவெறி, இனவெறி கருத்துக்களை கூறி அந்நாட்டு ஊடகங்கள் மக்களை திசை திரும்புவதற்கான விவாதங்களை உருவாக்கி வருகிறார். அந்நாட்டின் பிரதான ஊடகங்களும் தொழிலாளர்கள் மற்றும் மக்களின் நெருக்கடிகள் குறித்து பேசாமல் போர் அரசியலையும் இனவெறி நிறவெறி கருத்துக்களையும் பிரதான விவாதப்பொருளாக பேசி வருகின்றன.