வியட்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கரையைக் கடந்த யாகி புயல், கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாமை தாக்கிய மிக மோசமான புயல் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் ஏராளமான வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளின் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன.
யாகி புயலால் எற்பட்ட கனமழையால், வட்க்கு வியட்நாமின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பல குடியிருப்புப் பகுதிகள் நீருக்கடியில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன.
திங்கள்கிழமை நிலவரப்படி இப்புயல் காரணமாக 59 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்தது. அவர்களில் 44 பேர் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக அரசு ஊடகம் தெரிவித்திருந்தது.ஆனால் இன்றைய நிலவரப்படி இப்புயல் காரணமாக 63 பேய் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூதூ மாகாணத்தில் தொடர் மழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சிவப்பு நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அந்தப் பாலம் வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த 13 பேர் மாயமாகியுள்ளதாக அரசு செய்தி வலைதளமான விஎன்என்ஸ் பிரஸ் தெரிவித்தது.
புயல் பாதிப்பால் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மின்சார வசதியில்லாமல் தவித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதுமட்டுமின்றி வடக்கு வியட்நாமின் 17 நகரங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள சுமார் 130 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.