மலேசியாவிற்கு சட்டவிரோதமாக படகில் சென்ற 11 இந்தோனிசியர்கள் கடலில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலேசியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தோனிசியர்கள் நுழைவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு செல்பவர்களில் பெரும்பாலனோர் அப்பாவி கூலித் தொழிலாளிகளாவர்கள். இந்தோனிசியா நாட்டில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில், மலேசியாவிற்குள் சென்றால் எப்படியேனும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இத்தகைய அபாயகரமான பயணத்தை அவர்கள் மேற்கொள்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், புதனன்று 60க்கும் மேற்பட்ட இந்தோனிசியர்கள் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக மலேசியாவை நோக்கி படகில் சென்றனர். இந்த படகு புயல் மற்றும் கடல்சீற்றம் காரணமாக விபத்திற்குள்ளாகி கடலில் மூழ்கியது. மலேசியா ரோந்து கப்பல் ஒன்று அவ்வழியே சென்றபோது தான் படகு மூழ்கிய சம்பவம் வெளியே தெரியவந்தது.
மேலும், இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 7 ஆண்கள், 4 பெண்கள் உட்பட 11 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 20 ஆண்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் உயிர்தப்பி அருகிலுள்ள தீவில் தஞ்சமடைந்தனர். அதேநேரம், படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி கடலில் மூழ்கி காணாமல் போன மற்ற 27 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இருநாடுகளிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.