world

img

லெபனான்: பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு- உயிரிழப்பு 37 ஆக அதிகரிப்பு

லெபனானில் நடத்தப்பட்ட மின்னணு தொலைத் தொடர்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியையும், லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கமாண்டரான ஃபுவாட் ஷுக்ரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வரும் நிலையில், லெபனானில் திடீரென பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் போன்ற மின்னணு சாதனத் தாக்குதல் வெடித்து பலர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இந்த மின்னணு தொலைத் தொடர்பு சாதனத் தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியுள்ளது என லெபனான் உறுதியாக கூறியுள்ளது.

இந்நிலையில், இந்த மின்னணு தொலைத் தொடர்பு சாதனத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லெபனான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபைது கூறுகையில், பேஜர்கள், வாக்கி டாக்கிகள், சூரிய மின் தகடுகள், வானொலிகள், கார் பேட்டரிகள் உள்ளிட்டவற்றை வெடிக்கச் செய்ததன் மூலம் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறினார்.