இந்தோனேசியா, 350 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய ‘வூஷ்’ என்ற அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
அடிக்கடி இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் இந்தோனேசியாவில் சீனா நிதி உதவியுடன் கட்டமைத்த இது தென்கிழக்கு ஆசியாவின் முதல் அதிவேக ரயிலாகும். இதனை அதிபர் ஜோகோ விடோடோ தொடங்கி வைத்தார்.
இந்த அதிவேக ரயில் இந்தோனேசியாவில், இரண்டு பெரிய நகரங்களான ஜகார்த்தா மற்றும் பண்டுங் நகரை இணைக்கும் 142 கிமீ தொலைவைக் கொண்ட அதிவேக ரயில் பாதையாகும்.
இந்த இரண்டு பெரிய நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் 3 மணி நேரமாக இருக்கும் நிலையில், அதிவேக ரயில் மூலம் வெறும் 40 நிமிடத்தில் பயணிக்க முடியும்.
இது "நேர சேமிப்பு, உகந்த செயல்பாடு, நம்பகமான அமைப்பை” கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
BRI திட்டத்தின் ஒரு பகுதியாக 4.3 பில்லியன் டாலர் செலவில் 2016-ஆம் ஆண்டு தொடங்கி 2019-ஆம் ஆண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல், கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளிப் போனது மட்டுமின்றி செலவு 7.3 பில்லியன் டாலராக அதிகரித்தது.
ஒருமுறை 601 பயணிகள் பயணிக்கக் கூடிய இந்த ரயிலின் டிக்கெட் கட்டணம் ரூ.1,300-இல் இருந்து ரூ.1850 வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் டிக்கெட்டின் கட்டணம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.