world

img

இந்தோனேசியாவில் நிலச்சரிவு-பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

வடக்கு சுமத்ரா தீவில் கடந்த ஒரு வாரக் காலமாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள டோன் நகரத்திலிருந்து பெரஸ்டாகி நகர் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சுற்றுலாப் பேருந்து ஒன்றின் மீது மரங்கள், மண் பாறைகள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்திலிருந்த ஓட்டுநர் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. மேலும் காணாமல் போன பலரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் பருவமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.குறிப்பாக வடக்கு சுமத்ரா போன்ற தாழ்வான மற்றும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் பாதிப்பு அதிகளவில் ஏற்படுகிறது.