பெல்ஜியம் நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டு அரசு புதியதாக விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்டித்து நடைபெற்ற பேரணி வன்முறையாக மாறியது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை ஒவ்வொரு நாடும் அமல்படுத்தி வருகிறது. இருப்பினும், வைரஸ் பரவலின் தாக்கம் குறைந்தபாடியில்லை. இந்நிலையில் கோவிட் 19 என்கிற கொரோனா வைரஸ் ஓமைக்ரான் என்ற புதிததாக உருமாறி அதன் பரவும் தன்மை வீரியமாகியுள்ளது. இதனால் பல நாடுகள் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தில் சமீபமாக கொரோனா தொற்றால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றிக்கு கிட்டத்தட்ட 18 ஆயிரம் பேர் வரை கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 பேர் மிக அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து அந்நாட்டு அரசு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கு, மாஸ்க் அணிவது கட்டாயம், பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இதன் ஒருபகுதியாக ஞாயிறன்று அந்நாட்டின் தலைநகர் பிரஸ்ல்ஸில் ஆயிரக்கணக்கானோர் கூடி அரசின் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றனர். இதன்பின் அங்குள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே பெரும் தள்ளு, முள்ளு ஏற்பட்டு பெரும் மோதலாக மாறியது.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதனால் பதிலுக்கு போலீசாரை நோக்கி போராட்டக்காரர்கள் தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்தனர். இதன்காரணமாக அப்பகுதியே போர்களம் போல் மாறியது. இந்த மோதலில் இருதரப்பிலும் பலர் படுகாயமடைந்ததுடன், போராட்டக்காரர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வன்முறை சம்பவம் காரணமாக அந்நாட்டில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.