world

img

தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தினால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.....

ஜெனீவா:
கொரோனா தடுப்பூசியால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும். இந்த பணியை  வேகப்படுத்திக் கொண்டு சென்றால் கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவ விஞ்ஞானிகளின் பெரும் முயற்சிக்குப் பின்னர் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால திட்டத்தின் இயக்குநர் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் கூறுகையில், “ கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா பரவல் முடிந்துவிடும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனை முதிர்ச்சியற்றது, இயல்புக்கு மாறானது. கொரோனா தடுப்பூசியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் தடுக்கப்படும், குறைக்கப்படுமே தவிர, கொரோனா வைரஸ் பரவல் முடிவுக்கு வந்துவிடாது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா பரவலைக் குறைக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது புள்ளிவிவரங்கள்படி கொரோனா தடுப்பூசியால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும். அதை அப்படியே நாம் வேகப்படுத்திக் கொண்டு சென்றால், நாம் கொரோனாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரலாம். ஆனால், இப்போதுள்ள சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மிகுந்த கட்டுக்குள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் கூறுகையில், “பல வளர்ந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி, முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படாமல், இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. இது கவலைக்குரிய விஷயம்.உலகத்தின் பணக்கார நாடுகளான பிரிட்டன், அமெரிக்கா, கனடா ஆகியவை தங்களின் மக்களுக்கு 3 மாதங்களுக்கு முன் கொரோனா தடுப்பூசியை போடத் தொடங்கிவிட்டன. ஆனால், ஏழ்மை நாடுகளான கானா, ஐவரி கோஸ்ட் போன்றவற்றுக்கு இந்த வாரத்தில்தான் தடுப்பூசி போடுவதே தொடங்கப்படுகிறது.உலக நாடுகள் கொரோனா தடுப்பூசியில் போட்டி போட்டுவிடக் கூடாது. இது கொரோனா வைரசுக்கு எதிராக நாம் அனைவரும் நடத்தும் பொதுவான போட்டி. கடந்த 7 வாரங்களுக்குப் பின் கொரோனா வைரஸ் பரவல் கடந்த வாரம் முதல் முறையாக அதிகரித்துள்ளது வேதனையாக இருக்கிறது, அதிர்ச்சியாக இல்லை” என்று  தெரிவித்தார்.